tamilnadu epaper

வீழ்வேனென்று நினைத்தாயோ

வீழ்வேனென்று நினைத்தாயோ


சுந்தரை கஷ்டப்பட்டு அவனது பெற்றோர் 10ஆம் வகுப்பு வரை படிக்க வைத்தனர். 11ஆம் வகுப்பில் அவனது தந்தை மறைந்ததால் அவரது சிறு தொழிலை தான் எடுத்து நடத்த வேண்டிய கட்டாயம். மனம் துன்புற்றாலும் குடும்பத்தை காக்க சுந்தர் அப்பாவின் பழைய பேப்பர் விற்கும் வியாபாரத்தை தொடர்ந்து நடத்தி வந்தான். சிறிது சிறிதாக பழைய பேப்பர் வாங்கும் வீடுகளை பெருக்கி தன் வியாபார வட்டத்தை பெரிதாக்கினான். வெய்யில் மழை பாராமல் தனது சைக்கிளில் சென்று தனது வாடிக்கையாளர்களிடம் நியாயமாக பேப்பர் வாங்கி சேமித்து தனது 24வது வயதில் 20 வயது தங்கையை திருமணம் செய்து வைத்தான்.

பின்னர் தான் பட்ட வாழ்க்கை துன்பத்தை மனதில் கொண்டு ஒரு கால் ஊனமுற்ற பெண், கமலாவை பார்த்து திருமணம் செய்தான். இரு வருடங்களில் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால் சுற்றத்தாரும் போலி நட்புக்களும் அவனது மனைவியை கிண்டல் செய்வதை காது பட கேட்டான். அவனது மனதில் ஒரு உறுதி பூண்டான். அம்மா, சுந்தர், கமலா மூவரும் சேர்ந்து முகேஷ் என்ற அந்த மகனை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தனர். மகனுடைய படிப்பில் முழுக்க முழுக்க கமலா கவனம் செலுத்தி அவனை வகுப்பில் முதல் பத்து ரேங்கிற்குள் வாங்க வைத்தாள். 

சுந்தரின் பல வாடிக்கையாளர்கள் நிதி உதவி செய்து அவனது மகனை தக்க நேரத்தில் எஞ்சினியரிங் படிப்பில் சேர்த்தனர். திரும்பி பார்ப்பதற்குள் முகேஷ் பட்ட படிப்பை முடித்து கேம்பஸ் நேர்காணலில் ஒரு பெரிய பொரியியல் நிறுவனத்தில் வேலைக்கமர்ந்தான். கை நிறைய சம்பாதித்து பாட்டியையும் பெற்றோரையும் மகிழ்ச்சியுடன் கவனித்துக் கொண்டான்.  

முகேஷின் வேலை திரனையும் புத்தி கூர்மையையும் கவனித்து அவனது நிறுவனம் அவனை தேர்வு செய்து அதிக சம்பளமும் கூடுதல் சலுகைகளும் அளித்து அமேரிக்கா அனுப்ப முடிவெடுத்தது. 

முகேஷ் வெளிநாடு கிளம்பும் நாள் அவன் அம்மாவை கிண்டல் செய்த அத்தனை சுற்றமும் போலி நட்புக்களும் வழியனுப்ப முன்னே நின்றன. விரக்தியுடன் ஆனால் பெருமிதத்துடன் புன்னகைத்தான் சுந்தர்……..


-ரமா ஸ்ரீனிவாசன்