கலியுகம் ஆரம்பமான நாள்....!
தெரிந்து கொள்வோம். வாருங்கள்....
29 03 2025 சனிக்கிழமை, பங்குனி அமாவாசை.....
பங்குனி மாதத்தின் அமாவாசைக்கு அடுத்த நாள், பிரதமை திதி அன்றுதான் யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சந்திரனின் சஞ்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட வருஷப் பிறப்பு, முதன் முதலில் சாலிவாகனன் என்ற மன்னனால் தொடங்கப்பட்டது. புராணக் கதைகளின்படி, உஜ்ஜயினி மன்னன் விக்ரமாதித்யனை தோற்கடித்தவன் தான் இந்த சாலிவாகன மன்னன்.
'யுகாதி' என்பதற்கு 'யுகத்தின் தொடக்கம்' என்று பொருள் கூறுகிறது. யுகம் தோன்றிய நாளாக இருந்ததனால் இந்த நன்னாளுக்கு யுகாதி என்று பெயரிடப்பட்டது என்கிற ஒரு கருத்தும் இருந்து வருகிறது. கன்னட மொழி மற்றும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் இந்த யுகாதி நாளில் தான் புது தொழில், கல்வி, வேலை ஆகியவற்றை தொடங்குகிறார்கள். ஏனென்றால் இந்த தினத்தில் தொடங்கப்படும் எந்தப் பணியும் சிறக்கும் என்கிற
அபார நம்பிக்கை அவர்களிடம் உண்டு.
பங்குனி மாதத்தின் அமாவாசைக்கு அடுத்த நாள், பிரதமை திதி அன்றுதான் யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்து புராணத்தின் படி பார்த்தால், பிரம்மாவானவர், இந்த நாளில்தான் படைத்தல் தொழிலை தொடங்கினார் என்று கூறப்படுகிறது.
யுகாதி என்பது இளவேனிற் கால வருகையை குறிக்கும் தினமாகவும் விளங்குகிறது. பண்டிகை நாளுக்கு ஓர் இரண்டு நாட்கள் முன்னதாகவே யுகாதி பண்டிகை தொடங்குவதற்கு உண்டான ஏற்பாடுகள் தொடங்கி விடுகின்றன.
ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரம் மச்சாவதாரம் அல்லவா? அந்த அவதாரம் யுகாதி அன்றுதான் நிகழ்ந்ததாம்.
ஸ்ரீ ராமர் சீதா தேவியை மீட்டு எடுத்து வந்து அயோத்திக்கு திரும்பிய நாளும் யுகாதி அன்று தானாம்.
மகாபாரதத்தில், குருஷேத்திரப் போருக்குப்ங பின், யுதிஷ்டிரர் பட்டாபிஷேகம் செய்து கொண்டதும் அன்றுதானாம்.
கிருஷ்ணாவதாரம் பூரணத்துவம் பெற்றதும் யுகாதி அன்று தான் என்று புராணங்கள் சொல்கின்றன.
துவாபர யுகம் முடிந்து கலியுகம் ஆரம்பமான
நாளும் யுகாதி அன்று தான்! .
அன்றைய தினம் முதல் நாள் இரவே பூஜையறையை சுத்தம் செய்து, விடியற்காலையில் எழுந்து பூஜை அறையில், சுவாமி படத்திற்கு முன் வைக்கப்பட்டிருக்கும் மங்களகரமான வஸ்துக்களை பார்த்த பின்பு தான் மற்ற வேலைகளை தொடங்குவார்கள். எண்ணெய் ஸ்நானம் செய்துவிட்டு, புது வஸ்திரம் உடுத்தி, பிள்ளையார், பிரம்மா, விஷ்ணு, சிவன் மட்டுமல்லாமல் அவர்களின் பத்தினிகளையும் ஆராதனை செய்து, வீட்டில் பெரியவர்களை வணங்கிக் கொள்வார்கள். ஒருவருக்கொருவர் பரிசுப் பொருட்களை பரிமாற்றம் செய்து கொள்ளவும் செய்வார்கள்.
யுகாதி பண்டிகை அன்று முக்கியமாக யுகாதி பச்சடி என்று சிறப்பு உணவு செய்யப்படும். இதில் ஆறு வகை சுவைகள் அடங்கி இருக்கும். இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு மற்றும் துவர்ப்பு. பூமியில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு ஜீவனும் இந்த ஆறு வகை குணங்களை வாழ்க்கையில் கடந்து தான் பகவானை அடைய முடியும் என்று பொருள் அமையும் வகையில் இந்த பச்சடி ஒவ்வொருவருக்கும் நினைவூட்டுவதற்காகவே தயாரிக்கப்படுகிறது.
யுகாதி பண்டிகை அன்று வீட்டில் உள்ள அனைவரின் எதிர்காலத்தை கணித்துக் கொள்வதற்காக ஒரு ஜோதிடரை வீட்டிற்கு வரவழைத்து
அந்த வருடத்திற்கு குடும்ப உறுப்பினர்களின் நேரம் எப்படி அமைகிறது என்பதை கணிக்கச் சொல்லுவார்கள். இதை 'பஞ்சாக ச்ரவணம்' என்று சொல்கிறார்கள்.
சந்திரமான யுகாதி என்று கொண்டாடப்படும் இந்த பண்டிகை குடும்பத்திற்கு சுபிக்ஷத்தை உண்டாக்கும் என்பதால் அனைவரும் மிக மகிழ்வோடு, சங்கீதம் இலக்கியம் போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொண்டாடுகிறார்கள். மாவிலைத் தோரணமும் ரங்கோலி கோலமும் எல்லோர் வீடுகளிலும் பண்டிகைக்கு முக்கியமான அம்சங்களாக கருதப்படுகின்றன.
தெரிந்து கொள்வோம்.....
-M. ராதாகிருஷ்ணன்
வாணியம்பாடி