வாசன் டீக்கடையில் டீ ஆர்டர் செய்து விட்டு அமர்ந்திருந்த முருகன் முகத்திலிருந்த வாட்டத்தைக் கண்டுபிடித்து விட்ட கல்லாப் பெரியவர், "என்ன முருகா?... மூஞ்சி பேஸ்த்தடிச்ச மாதிரியிருக்கு... என்ன விஷயம்?" கேட்க,
"இத்தனை நாள் என் கூட ஒட்டிக்கிட்டு இருந்தது போதும்... உடனே வேற ரூம் பார்த்துக்க!"ன்னு என் ரூம் மேட் ஆனந்த் சொல்லிட்டான்" சோகமாய்ச் சொன்னான் முருகன்
"அட திடீர்னு என்னாச்சு அவனுக்கு?"
"தெரியல" என்று சொல்லி விட்டு லேசாய்க் கண் கலங்கிய முருகன், "வெறுமனே "போயிடு'னு சொல்லியிருந்தாக் கூட பரவாயில்லைங்க... "நீ கிராமத்தான்... படிக்காதவன்... ஜவுளிக் கடையில் துணி எடுத்து போடுற வேலை பார்க்கிறவன்... ஆனா நான்... ரெண்டு டிகிரி படிச்சிட்டு எக்ஸ்போர்ட் கம்பெனியில் அசிஸ்டெண்ட் மேனேஜர்... நீ என் கூட தங்கியிருக்கிறது எனக்கு கௌரவக் குறைச்சலா இருக்கு!"ன்னு சொல்லிட்டாங்க... அதான் மனசு தாங்கலை" என்றான் முருகன்.
"முருகா... ஆனந்த் ரொம்ப நல்லவன்... அவன் இப்படிப் பேசியிருக்கான்!னா... நிச்சயம் இதுக்குப் பின்னாடி ஏதாவது ஒரு காரணம் இருக்கும்!.. நானே ஆனந்த கிட்ட பேசுறேன்... நீ பொறுமையா இரு"
மறுநாள் மாலை டீக்கடையில் கல்லாப் பெரியவரைச் சந்தித்தான் முருகன்.
"முருகா... நேத்திக்கு காலைல ஊரிலிருந்து உங்கப்பா வந்திருந்தாங்களா?"
"ஆமாம்"
"அவரை ரூமுக்குக் கூட்டிட்டுப் போனியா?"
"இல்லை... அவர் எப்ப வந்தாலும் ரூமுக்குக் கூட்டிட்டுப் போக மாட்டேன்"
"அதான் ஏன்?"னு கேக்குறேன்!"
"ஏன்னா... அவரு படிக்காதவர்... ஒரு சாதாரண விவசாயி... அவருடைய தோற்றமே ஒரு மாதிரி பரதேசித்தனமாய் இருக்கும்!.. அழுக்கு வேட்டி... சட்டை... துண்டு.... நரைச்ச மீசை தாடி... செருப்பில்லாத காலு... அப்படியிருக்கிற ஒருத்தரை ரூமுக்கு கூட்டிட்டுப் போனா... ஆனந்த் என்னைப் பற்றிக் கேவலமா நினைப்பார் அல்லவா?... அது எனக்கு கௌரவ குறைச்சல்தானே?"
"அதான்... அதான் நீ செஞ்ச தப்பு!.. ஏம்பா நீயும் படிக்காதவன்தான்... பட்டிக்காட்டான்தான்... கலர் கூடக் கருப்புதான்... அப்படியிருந்தும் ஆனந்த் உன்னை அறைத் தோழனாக வெச்சிருக்கிறான்... என்கிற போதே அவன் மனசை நீ புரிஞ்சுக்கணும்!... உங்க அப்பாவை நீ ஒதுக்கறது ஆனந்துக்கு சுத்தமா பிடிக்கலை!"
"வந்து... ஆனந்துக்கு இதெல்லாம் தெரியாதே!"
"நேத்திக்கு உங்க அப்பாவை நீ பஸ் ஸ்டாண்டோட திருப்பி அனுப்பிச்சிட்டு ஜவுளி கடைக்குப் போயிட்டே!... ஆனா உங்கப்பா நீ அவரை அவாய்ட் பண்றது புரியாம... மறுபடியும் உன்னைப் பார்க்க உன் ரூமை தேடிக் கண்டுபிடிச்சுப் போயிருக்காரு!.. அப்ப ஆனந்து ரூம்ல இருந்திருக்கான்... அங்க உங்க அப்பா கிட்ட பேசினதுல எல்லா விஷயங்களையும் ஆனந்த் புரிஞ்சுக்கிட்டான்... அவன் சின்ன வயசுல அப்பாவை இழந்தவன்... ஆகையால் ரொம்ப மனசு நொந்து போயிட்டான்.... உனக்கு சரியான பாடம் கற்பிக்கத்தான் உன்னை வேறொரு ரூம் பார்க்கச் சொல்லி மிரட்டியிருக்கான்..."
"ஐயா... நான் தப்புப் பண்ணிட்டேன்... தப்புப் பண்ணிட்டேன்!... என்னை மன்னிச்சிடுங்க" முருகன் தழுதழுக்க.
" நீ....என்கிட்ட மன்னிப்பு கேட்கிறதை விட.... போய் அந்த ஆனந்து கிட்ட மன்னிப்புக் கேள்!... இனிமேலாவது அப்பாவை அப்பாவா மதிக்கா விட்டாலும் பரவாயில்லை... அட்லீஸ்ட் ஒரு மனுஷனாவது மதி" பெரியவர் சொல்ல வேக வேகமாய் ஆனந்தைத் தேடி ஓடினான் முருகன்.
-முகில் தினகரன்,
கோயமுத்தூர்.