tamilnadu epaper

அன்னையின் ஆணை

அன்னையின் ஆணை



 மகிழ மரமும் செண்பக மரமும் கரையில்;அரணாக நிற்க;

ஒழுங்கற்ற ஒழுங்கில் ஒரு குளம்

அலை எதுமின்றி அமைதியாக.

ஒற்றைப் படித்துறையில் நாங்கள். 

எவரோ ஒருவர் எறிந்த சிறு கல்

வட்டத்திற்குள் வட்டமாக

சிற்றலைகள் எழும்ப

திரும்பி பார்க்கும் நொடியில்,அவன் கைத்தடியும் முதுகு மட்டும் காட்சி.

சரி, கிளம்பலாமா என்ற சொல்லுடன் திரும்ப ... திகைத்துப் போனேன். கல் விழுந்த இடத்தில் கருநாகம் ஒன்று, படமெடுத்து ஆடியது.

                     அவளின் தோள் தொட்டு, விரல் பிடித்து "வா! போய்விடலாம்" என்றேன்." நில்! " என்ற ஒரு ஆணை... நிலவிய நிசப்தத்தை கிழித்துக்கொண்டு...

                 "என்னை நீதானே எழுப்பினாய்?" 


 "நான் இல்லை. எவரோ ஒருவன். அவன் சென்று விட்டான்"என்றேன்

         " இல்லை! நீதான் அவன். உனது மனதின் விகாரம் ஒரு நொடியில் கிளைத்து,என்னை எழுப்பினது.உனக்கு என்ன வேண்டும்? மரிக்காமல் ஒரு மரணமா? மரணிக்கும் ஒரு மரணமா? சொல் உடனே" என்று நின்றாடியது 

                     ஒரு கணம் தீயை மிதித்து போல் உணர; மின்னல் என ஒரு பொறி தட்டியது. அது என் அன்னையின் குரல் அல்லவா! என் மனக்கண் திறந்து மாசு அறு பட்டது.  

                " அன்னையே! பிழைபொருத்தருள்வாயாக. செண்பக மலரும், மகிழம்பூவும், அரண் என நிற்கும் தருக்களும் என் மதியை மயக்கினது சத்தியம். 

                 தன்னிகரற்ற மாதாவே! என்னை மன்னியுங்கள். என் மயக்கும் மதி மறக்கும்படி ஒரு மரணம் அனுக்ரஹம் செய்யுங்கள். உங்கள் சேய்கள் எமக்கு.. உங்கள் ஆசிகள் என்றும் துணையாய் நிற்கட்டும். வாழ்வின் உச்சத்திலும், வீழ்ச்சியிலும், நிலை மாறா எண்ணம் துணை நிற்கும் வரம் தாருங்கள். 

             தேன்மொழியும் நானும் தரை தொட்டு கும்பிட்டு வணங்க; கருநாகம் சுருண்டு சுருங்கி மறைந்தது.

                    "முரளி! நீ என்ன செய்தாய்; நாகம் மீண்டு விட்டதே" என்று சொல்ல, வேகமாக குளக்கரை விட்டு காருக்கு நகர்ந்தோம்.


-சசிகலா விஸ்வநாதன்