tamilnadu epaper

அபராதம்

அபராதம்

 அந்த மாநகர பேருந்து பாரிமுனையிலிருந்து, திருவான்மியூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

 அடையாறு பஸ் நிறுத்தத்தில் பேருந்து வந்து நின்றபோது,

 பயணசீட்டு பரிசோதகர்கள் சிலர் அந்தப் பேருந்துக்குள் ஏறி, அதில் பயணம் செய்த பயணிகளிடம் பயணச்சீட்டு வாங்கி யுள்ளார்களா என்பதை பரி சோதிக்க ஆரம்பித்தனர்.

 அப்போது ஆண்கள் வரிசையில் பரிசோதித்த ஆய்வாளர், இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவரிடம் பயண சீட்டை காட்டுமாறு கூறினார்.

 ஆனால், அந்த நபரோ பயணச்சீட்டை அவரிடம் காட்ட வில்லை.

ஆய்வாளர் தொடர்ந்து அவரிடம் டிக்கெட்டை காட்டு, டிக்கெட்டைக் காட்டு என கேட்டுக் கொண்டிருந்தார்.

 அந்த இளைஞரோ வாய் கொளரியபடி, நான் டிக்கெட் எடுக்கமாட்டேன் என போதையில் கூறிக் கொண்டிருந்தார்.

 பொறுமை இழந்த டிக்கெட் பரிசோதகர், அந்த இளைஞரை பளார் என்று கன்னத்தில் அறைந்தார்.

“ ஏண்டா, டிக்கெட் வாங்காம போறதுக்கு இது என்ன உங்க அப்பன் வீட்டு பஸ்ஸா? மரியாதையா 500 ரூபாய் அபராதம் கட்டு, இல்லைனா போலீஸ் ஸ்டேஷன்ல கொண்டு ஒப்படைச்சுடுவேன்” என்றார் கோபமாக.

 அந்த இளைஞனோ எதைப் பற்றியும் கவலைப்படாமல், போதையில் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான்.

 டிக்கெட் பரிசோதகர் மீண்டும் அவனை அடிக்க முற்பட்டார்.

 அப்போது சத்தம் கேட்டு அங்கு வந்த முதன்மை பரிசோதகர்

 குறிப்பிட்ட பரிசோதகரிடம் “என்ன நடந்தது, என்ன பிரச்சனை? “என என்று கேட்டார்.

 அவர், அந்த இளைஞனை சுட்டிக்காட்டி, இவன் டிக்கெட் வாங்கவில்லை, அவனை அபராதம் கட்டுமாறு சொல்லி கொண்டிருக்கிறேன், ஆனால் அவனோ எதையும் லட்சியம் செய்யாமல் போதையில் உளறிக் கொண்டிருக்கிறான்.

 இது சரிப்பட்டு வராது, நாம் இவனை போலீஸ் ஸ்டேஷனில்ஒப்படைச்சுடுவோம் என்றார்.

 அப்போதுதான் அந்த இளைஞனை திரும்பிப் பார்த்த முதன்மை பரிசோதகர்,

 அவசரமாக, “ அவனை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டாம், திருவான்மியூர் பஸ் ஸ்டாண்ட் வந்துவிட்டது, அங்கு இறங்கியவுடன் முடிவு செய்யலாம்” என்றார்.

 பிறகு, அவர் யாருக்கோ போன் செய்து உடனே புறப்பட்டு வரும்படி கூறினார்.

பேருந்து திருவான்மியூர் பஸ் ஸ்டாண்டை அடைந்தவுடன், டிக்கெட் பரிசோதகர்கள் இரண்டு பேராக சேர்ந்து அவனை பேருந்தில் இருந்து இறக்கி அருகில் உள்ள இருக்கையில் அமர வைத்தனர்.

 பிறகு முதன்மை பரிசோதகர், மற்றொரு பரிசோதகரிடம் அவன் கட்ட வேண்டிய அபராத தொகை ரூபாய் ஐநூறை தாம் செலுத்தி விடுவதாக கூறினார்.

 அதை கேட்டு ஆச்சரியமடைந்த அந்த பரிசோதகர், “ சார், நீங்கள் எதற்காக அவனுக்காக அபராதம் கட்ட வேண்டும்? அவன் போதையில் வேறு உள்ளதால், நாம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விடலாம் என்றார்.

 முதன்மை பரிசோதகரோ, முதலில் நீங்கள் அபராத தொகையை வசூலித்துக் கொள்ளுங்கள், பிறகு நான் சொல்கிறேன் என்றார்.

 அந்த பரிசோதகரும் யோசனையுடனே, அபராத தொகை ரூபாய் 500 -ஐ அவரிடமிருந்து வாங்கிக் கொண்டார்.

 அதற்குள்ளாக ஒரு ஆட்டோ ஒன்று பேருந்து நிலையத்திற்குள் வந்து நின்றது.

 அதிலிருந்து ஒரு பெண்மணியும், மற்றொரு இளவயது பெண்ணும் இறங்கினார்கள்.

 அவர்களிடம் சென்ற முதன்மை பரிசோதகர், அந்த இளைஞனை கைத்தாங்கலாக ஆட்டோவில் ஏற்றி விட்டு, பத்திரமாக வீட்டுக்கு கூட்டி சென்று படுக்க வையுங்கள்,

 நான் டூட்டி முடிந்தவுடன் வருகிறேன் என்றார்.

 அந்தப் பெண்கள் இருவரும் கண்கலங்கியபடி சென்றனர்.

 பிறகு தனது சக பரிசோதகர் களின் பக்கம் திரும்பிய அவர்,

“ பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் வந்தது எனது பையன் முருகன் தான், அதனால்தான் அவனுக்காக நான் அபராத தொகையை செலுத்தினேன் என்றார்.

 அதைக் கேட்டு அதிர்ந்து போன அவர்கள், “ ஏன் சார், அவன் உங்க பையன்தான்கிறத முன்பே சொல்லியிருக்கக் கூடாதா? , நீங்க எதுக்காக அபராதத்தை கட்டினீங்க” என கேட்டார்கள்.

 அவன் என் பையனாக இருந்தாலும் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்தது தவறு, விதிமுறகளை நாம் எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் கடைபிடிக்க வேண்டும் என்றார்.

 உங்க பையன் ஏன் சார் இப்படி ஆயிட்டாரு? என ஒருவர் கேட்டார்.

இப்போகூட என் பையன் நல்ல பையன்தான்,

இன்ஜினியரிங் முடித்த பிறகு இதுவரைக்கும் வேலை கிடைக்கல, அந்த விரக்தியில் இருந்த அவனை, அவனது நண்பர்கள் சிலர் போதை பழக்கத்திற்கு உள்ளாக்கி விட்டனர்.

 அவன திருத்துவதற்கான முயற்சிகளை செய்து வருகிறேன், ஆண்டவன் அருளால் அவன் விரைவில் திருந்தி, ஒரு வேலைக்கு சென்றால் எனக்கு போதும் என்றார் கண் கலங்கியபடி


அந்த பாசமிகு தந்தை.

கோபாலன் நாகநாதன்,

எழுத்தாளர்.

மேற்கு மாம்பலம்,

சென்னை-33.