tamilnadu epaper

அவன் ??

அவன் ??

 

 நேகா மூன்று நான்கு தினங்களாக அவனை கவனித்துக் கொண்டுதான் வருகிறாள். அதுவும் இவளைப் பின் தொடர்ந்து ரொம்பவே அவன் கொடுக்கும் தொந்தரவு தாங்க முடியவில்லை. சென்னை டிராபிக் ஒரு வசதி. அந்த அவன் நேகாவை நெருங்குவதற்குள் ரூட்டை மாற்றி விடுவாள் நேகா. முகத்தில் ஹெல்மெட்டும் கண்ணாடியும் போட்டதால் அவன் யார் என்று தெரியவில்லை.


 நேகாவின் மனது திக்கென்று அடித்துக் கொண்டது. காரணம் போன வாரம் ஒரு பெரிய மாலில் அந்த அவன் கையில் வைத்திருந்த உணவு ஜூஸ் இரண்டையும் எடுத்துக் கொண்டு வரும்போது எதிர்பாராத விதமாக நேகா அந்த பக்கம் திரும்ப அவளுடைய புதிய ஆடையில் அவன் கொண்டு வந்த உணவும் ஜூஸும் கொட்டி விட்டது. 


 கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் 'பளார்' என்று ஒரு அறை விட்டாள் நேகா. கூட்டமே கதி கலங்கி போய் நின்று கொண்டு இருந்தது.  


 அங்கு நின்றிருந்த ஒரு பெண் போலீஸ் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தது. ஒருவேளை அதை நினைத்துத் தான் பழி வாங்குகிறானோ என்று பயமாக இருந்தது நேகாவுக்கு.


 சொல்லி வைத்தது போல் இன்று அவள் எக்கசக்கமாக ஒரு மீட்டிங்கில் மாட்டிக்கொண்டு விட்டாள். இரவு 11 ஆகிவிட்டது.


 வெளியில் பார்க்கிங் ஏரியா வந்து காரை எடுத்த போது அந்த அவன் நின்று கொண்டிருந்தான். இவனுக்கு எப்படி தெரியும் நான் இங்கு தான் மீட்டிங் வந்தேன் என்று. அடி வயிறு கலக்கி அப்படியே குடலுக்கு வந்து விடும் போலிருந்தது. அவன் இவளை நெருங்கி வர முற்பட காரை வேகமாக ஸ்டார்ட் செய்தாள் நேகா.


 "ஹலோ ஹலோ.." என்று யாரோ சத்தம் போடுவது போல இருக்க அதிவேகத்தில் பறந்தாள் நேகா.


 மனதுக்குள் சில எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது ஏதாவது ஆபத்து என்றால் உதவி போலீசை கூப்பிடும் நம்பரை உபயோகிக்க வேண்டும் என்று.


 இருப்பினும் பயத்தை மறைக்க அவள் தன்னுடைய நண்பன் நிதிஷை போனில் அழைத்தாள்.


" நேகா நீ ஜெஃப்ரி ஆர்ச்சரோட பெரிய பேஃனா இருக்கலாம், அதுக்காக இப்படி எல்லாம் கற்பனை பண்ணிக்க கூடாது.. "


" என்ன நிதிஷ்... என்ன விளையாடறியா மூணு நாளா அவன் என்னை பாலோ பண்ணிட்டு இருக்கான். இன்னிக்கு என்னோட மீட்டிங்ஸ் ஸ்பாட்டு அவனுக்கு எப்படி தெரியும்...அன்னைக்கு மால்ல சண்டை போட்டவனாகூட இருக்கலாம் அவன் யாருன்னு எனக்கு அடையாளம் தெரியல.. "


" அவன் எதார்த்தமா அங்க வந்து இருக்கலாம்...சரி பயப்படாத அப்படி ஏதானு...இருந்தா நீ உதவி போலீஸ் நம்பரை கூப்பிடு..நீ எந்த ஸ்பாட்ல இருக்கேன்னு லொகேஷன் அனுப்பு...நானும் அந்த ரூட்டில் வந்து உன் கூட ஜாயின் பண்ணிக்கிறேன்.. " என்று நிதிஷ் சொன்னதும் நிம்மதி பெருமூச்சு விட்டாள் நேகா.


 பயத்தை மறக்க கே பாப்பின்"ஆன் தி ஸ்ட்ரீட்" பாட்டை போட்டுவிட்டாள். எத்தனை முறை கேட்டாலும் அலுக் காத பாடல். அது உற்சாகத்தை கொடுக்க தன்னுடைய வீடு திரும்பும் சந்தில் இடது பக்கம் திரும்பும் போது அவன் நின்று கொண்டிருந்தான். நேகாவுக்கு பகீர் என்றது. பாட்டு கேட்ட உற்சாகத்தில் எப்படி அவனை கவனிக்காமல் விட்டோம் என்று.


 சடக்கென்று திரும்பி பின்பக்கம் வழியாக வந்து வீட்டை அடைவதற்கு திரும்பினாள். அதே சமயம் நிதிஷும் வந்துவிட்டான்.


 இப்பொழுது நேகா மிகவும் தைரியமாகவே காரை விட்டு இறங்கினாள். நிதிஷும் இவளை நோக்கி வந்தான்.


" நித்திஷ் அது... அவன் தான் சொன்னேனே வந்துட்டான் பாரு பின்னாடியே... நீ மட்டும் வரலைன்னா என்ன ஆகி இருக்கும்னு நினைச்சுப் பார்த்தேன்.. "


 "அதெல்லாம் விடு அவன் யாருன்னு நான் போய் சட்டையை புடிக்கிறேன் பாரு..." சொன்ன நிதிஷ் நேரே அவனிடம் சென்றான்.


 அவன் அந்த சமயம் பையில் கை விட்டு எதையோ எடுக்க போக தக்கென்று அவனுடைய கைகள் இரண்டையும் பிடித்து விட்டான் நிதிஷ்.


" என்னடா ரவுடித் தனம் பண்ற எங்க ஏரியாவுக்கு வந்து...நேகா சீக்கிரம் ஒரு கயிறு எடுத்துட்டு வா..." என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே செக்யூரிட்டி வந்து சேர்ந்து கொண்டார்.


 படபடவென எல்லா போர்டிகோ லைட்டும் வெளிச்சம் பாய்ச்ச நான்கு பேராக சேர்ந்து அவன் தலையில் இருந்த ஹெல்மெட்டை உருவினர். 


 நேகாவுக்கு அட்ரினலின் வேகத்தினால் உடம்பு முழுவதும் வேர்த்து விட்டது. காரணம் அந்த அவன் நேகாவின் தோழி தாரணி.


" தாரணி நீ எங்க இங்க.. "


" நீயேன் சொல்ல மாட்ட... அன்னிக்கு மால்ல சண்டை போட்டு அந்த ஆள அறை விட்ட... ஆனா.. உன் பையில் இருந்து கீழே விழுந்த உன் பாஸ்போர்ட்டையும் டிக்கெட்டையும் நீ பார்க்கவே இல்லை... பாஸ்போர்ட் அட்ரஸ்ல போய் பார்த்தேன் உன் வீட்ட... நீ அங்க இல்ல... உன் வீட்டு அட்ரஸ் அப்டேட் பண்ணல பாஸ்போர்ட்ல....புது போன் மாத்தின.. என்ன கூப்பிடவும் இல்லை.. நான் உன்னை பாஃலோ பண்ணா தான் வீட்டை கண்டுபிடிக்க முடியும்... நீ எந்த ஆபீஸ்ல வேலை பார்க்கிறேன்னு எனக்கு எப்படி தெரியும்... எதார்த்தமா உன்னை இன்னிக்கு... ஒரு இடத்துல பார்த்தேன்... உன்ன கூப்பிட்டேன் நீ ஓடிட்ட...என்னை நல்லா அலைய விட்ட நேகா.. "


" சாரி தாரணி...ரொம்ப தேங்க்ஸ் இத நான் ஏன் கவனிக்கவே இல்ல... மூணு நாளா பாஸ்போர்ட் டிக்கெட் டை கவனிக்காம அப்படி என்ன பண்ணேன்.. " முகத்தில் அவ்வளவு அசடு வழிந்தது நேகாவுக்கு.


 நிதிஷின் குறும்புப் சிரிப்பு நேகா வை என்னமோ செய்தது.


 சுற்றி இருந்தவர்கள் நேகாவை பார்த்த பார்வையில் அவர்களுடைய இரவின் தூக்கம் கெட்டது நன்றாகவே தெரிந்தது. 



-திருமாமகள்