காலை ஏழு மணி வாக்கில் உறக்கத்திலிருந்து விடுபட்ட தாமோதரன் கண்களை மூடிக் கொண்டே எழுந்து, தட்டுத் தடுமாறி ஹாலுக்கு வந்து, வழக்கமாய் தான் கண் விழிக்கும் மறைந்த தன் மனைவி ராஜாமணியின் ஆளுயரப் புகைப்படத்திற்கு முன் நின்று கண்களைத் திறந்து பார்த்து, அதிர்ந்தார்.
அந்த ஆளுயரப் புகைப்படம் அங்கே இல்லை.
"ராகவா... ராகவா" அடித் தொண்டைக் கத்தலில் மகனை அழைத்தார்.
உள் அறையிலிருந்து வேக வேகமாய் அவன் வர, அவன் மனைவி தேவிகாவும் உடன் வந்தாள்.
"எங்கே இங்கிருந்த அம்மா போட்டோ?"
ராகவன் பதில் சொல்லும் முன் பாய்ந்து வந்தாள் தேவிகா, "நான்தான் அதை ரிமூவ் பண்ணிட்டேன்"
"என்னது?... ரிமூவ் பண்ணிட்டியா? ரிமூவ் பண்ண அது என்ன சாதாரண படமா?" கோபமாய் கேட்டார்.
"பின்னே?...சாமி படமா?" திருப்பி கேட்டாள் தேவிகா.
"ஆமாம்... கண்டிப்பா அது சாமி படம் தான் எனக்கு"
அந்தச் சூழ்நிலையை மாற்றும் விதமாய் ராகவன் இடையில் புகுந்து, "சரி தேவிகா... அதை எங்க வச்சிருக்கேன்னு சொல்லு... எடுத்துட்டு வந்து அப்பா ரூம்ல வச்சிடலாம்... அவர் பார்த்துப் பார்த்து ரசிக்கட்டும்" என்றான்.
"பழைய சாமான்களைப் போட்டு வச்சிருக்கோமே ஸ்டோர் ரூம்?.. அங்கதான் போட்டிருக்கேன்... போய் எடுத்துக்கங்க!" என்று சொல்லி விட்டு சன்னக் குரலில். "லட்சக்கணக்கில் செலவு பண்ணி, ஹாலை இண்டீரியர் டெக்கரேஷன் பண்ணி வச்சிருக்கேன்.. நடுவில் அந்த போட்டோ மட்டும் அசிங்கமா" சொல்லிக் கொண்டே நகர்ந்தாள் தேவிகா.
"சரிப்பா நான் ஈவினிங் வந்து அதை எடுத்து உங்க ரூம்ல வெச்சிடறேன்.. போதுமா?" சொல்லி விட்டு ராகவன் ஆபீஸிக்கு கிளம்பத் தயாரானான்.
ராகவனும் தேவிகாவும் சரியாக 9:00 மணி வாக்கில் வழக்கம் போல். ஒன்றாக கிளம்பி தத்தம் அலுவலகத்திற்குச் சென்று விட, தனிமையில் விடப்பட்ட தாமோதரன் வாய் விட்டு அழுதார்.
மாலை ஆறு முப்பது.
ராகவனும் தேவிகாவும் ஒரே பைக்கில் வந்திறங்கினர்.
வாசற்கதவை தட்டப் போகையில் அது சாத்தப்படாதிருக்க உடனே திறந்து கொண்டது.
"மாமா... மாமா" ராதிகா அழைத்தாள்.
பதில் இல்லை.
"அப்பா... அப்பா... " அழைத்துக் கொண்டே அவருடைய அறைக்குச் சென்ற ராகவன் அங்கும் அவர் இல்லாதிருக்க வீடு முழுவதும் தேடினான்.
"என்னது அப்பாவை காணோம்? தாடையைத் தேய்த்தபடி ராகவன் சொல்ல, "ஒரு நிமிஷம்... எனக்கு ஒரு சந்தேகம்" என்ற தேவிகா மெல்ல நடந்து ஸ்டோர் ரூம் அருகே சென்று அதன் கதவை தள்ளினாள்.
உள்ளே தாமோதரன் ராஜாமணியின் ஆளுயரப் போட்டோவை கட்டிப் பிடித்தபடி படுத்திருந்தார்.
"க்கும்..."என்று கழுத்தை நொடித்தாள் தேவிகா.
ராகவன் அவளைத் தள்ளிக் கொண்டு ஸ்டோர் ரூமிற்குள் நுழைந்து "அப்பா.. அப்பா" குனிந்து அவரை எழுப்ப.
அவரிடம் எந்தச் சலனமும் இல்லை.
ராகவன் அவர் கையை தொட்டு இழுக்க, அது "தொப்" என்று விழுந்தது.
மூளைக்குள் ஏதோவொன்று நெருட, தந்தையின் மூக்கருகே கையை வைத்து சோதித்த ராகவன்,
"அ....ப்...பா" என்று உரக்கக் கத்தினான்.
-முகில் தினகரன்,
கோயமுத்தூர்.