குபேரன் எழுதிய
புத்தகத்தை படிப்பதில்
ஆர்வம் காட்டிய நீ
மன்மதன் எழுதிய
புத்தகத்தின் பக்கங்களை புரட்டிப்பார்க்கக்கூட
முனைந்ததில்லை.
சோடிப்புறாக்களின்
கொஞ்சல்களோ
சிட்டுக்குருவிகளின்
சல்லாபமோ உன் கண்களில் பட்டதேயில்லை.
கொஞ்சமேனும்
காதல் இல்லாத வாழ்க்கையை
எத்தனைக்
காலம் தான்
வாழ்ந்துக்
கொணடிருப்பதாக
பாசாங்கு காட்டியே வாழ்வது!
நோட்டுக்கற்றைகளை
எண்ணி எண்ணிக் கொண்டாடும்
உன்மனது நடமாடும் செல்வமான
என்னைக் கொண்டாட சற்றும் எண்ணியதே இல்லையே!
சமையலறையில்
வேர்த்து விறுவிறுத்து
உனக்காக சமையல் செய்கையில் சப்தமின்றி அருகில் வந்து
இடுப்பிலே
ஒரு ரகசிய செல்லக் கிள்ளல்,
முன் நெற்றி கூந்தலை ஒதுக்கி
இதமான முத்தம்.
அறை வாசலில் நின்றபடி
ஒரு வசீகரப் பார்வை
இப்படி எதுவுமே இல்லாமல்
காதல் செய்யாத காலமாகவே கடந்துப்போனது நமது காலங்கள்.
மிஞ்சிய காலத்திலாவது
கொஞ்சமேனும் கொஞ்சி
விளையாட வா.
காதலுக்கு கடவுள்
வைத்த எல்லைகளை
கண்டு வரலாம் வா!
இல்லை கடந்து நீந்தலாம் வா!
தேன் நிலவு
இல்லாத வானம் எதற்கு?
இன்பங்களை அள்ளாமல்
இரவுகள்தான் எதற்கு?
இனிமைகளை காணாத
இல்லறம் தான் எதற்கு?
மூச்சுமுட்டும் வரை
மீண்டும் மீண்டும்
இறுக்கிகட்டு!
தூளாகிப் போகட்டும்!
தூங்காமலே தேக்கி வைத்த ஏக்கங்கள்!
அஞ்சி அஞ்சி பொத்திவைத்த ஆசைகளை
கொட்டிவிட்டேன் என்னவனே!
இனியேனும்
என்னைப்
புரிந்துக்கொள் மன்னவனே ?
இன்னும் கொஞ்சம் காதல் செய்!
-ரேணுகா சுந்தரம்