Breaking News:
tamilnadu epaper

உண்டியல்

உண்டியல்

தன் இளைய மகன் இன்பா ஆசைப்பட்டுக் கேட்டானே என்று பீங்கானில் செய்யப்பட்ட பன்றி பொம்மை உண்டியலை அலைந்து திரிந்து வாங்கிக் கொடுத்தார் தந்தை தன்ராஜ்.

 

அந்த உண்டியலைப் பார்த்தவுடன் இன்பாவுக்கு ஏகப்பட்ட பரவசம். உண்டியலைத் தடவித் தடவிப் பார்த்தான். முத்தம் கொடுத்தான். அப்பாவிடம் பத்து ரூபாயும், அம்மாவிடம் பத்து ரூபாயும் வாங்கி உண்டியலில் போட்டான்.

 

உண்டியலில் போட தினமும் அப்பாவும் அம்மாவும் ஆளுக்கு பத்து ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கண்டிஷன் வேறு போட்டான்.

 

சந்தோஷத்துடன் சம்மதித்தனர் தன்ராஜும் அவரது மனைவியும்.

 

"இந்த வயசிலேயே உன் தம்பிக்கு சேமிப்பு பழக்கம் இருக்கு. உனக்கு தண்ட செலவு பண்ண மட்டும் தான் தெரியும்...” என தன் மூத்த மகன் முகேஷை கடிந்து கொண்டார் தன்ராஜ்.

 

ஒருநாள். 

 

"அப்பா...என் உண்டியல்ல இருந்த பணத்தை அண்ணன் திருடிட்டான்...." என அழுது கொண்டே இன்பா முறையிட,கோபம் தலைக்கு ஏறியது தன்ராஜுக்கு.

 

“திருடுவியா, திருடுவியா....” என முகேஷின் கன்னத்தில் 'பளார் பளார்' என அறைந்தார் தன்ராஜ்.

 

மறுநாள்.

 

*'உண்டியல் காணிக்கை எண்ணும்போது ரூபாய் 2 லட்சம் திருடிய கோவில் ஊழியர் தன்ராஜ் கைது'*-என்று செய்தித்தாளில் வந்த செய்தியின் கீழ் முகத்தை மூடியவாறு 'போஸ்' கொடுத்துக் கொண்டிருந்தார் தன்ராஜ்.

 

 

        *- ரிஷிவந்தியா,தஞ்சாவூர்.