tamilnadu epaper

உலகம் போற்றும் கணியன் பூங்குன்றனார்

உலகம் போற்றும் கணியன் பூங்குன்றனார்

 .இவரை கணிதமேதையர் என்பர், கணியர் குலத்தில் சமன மத்த்தைச்சேர்ந்தவர், அவர்பெயரின் அடைமொழி கொண்டு அறியலாம், இவர் ஒரு சோதிடர் என்பதால் தொழிலையும் குறிக்கும் பெயராக இவரது பெயர் அமைந்திருக்கிறது. இவர் சில சங்கமருவிய நூல்களில் பாடல்களை இயற்றியுள்ளார். இவர் புறநானூறு பாடலில் பெரியோர் சிறியோர் என்ற தலைப்பிட்டு எழுதிய பாடல் இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது. 


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த மகிபாலன் பட்டி என்ற அழகிய சிற்றூரில் பிறந்து வாழ்ந்தவர். கணியன் பூங்குன்றனார் பரந்த மனப்பான்மை உடையவர்;

 இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதியவர். மக்கள் அனைவரையும் தமது உறவினராகக் கருதியவர்.

 பரிசில் பெறுவதற்காக எந்த ஒரு மன்னரையோ அல்லது வள்ளலையோ புகழ்ந்து பாடாமல், 

இவர் உலக இயல்பைப்பற்றிய தம் கருத்தை இப்பாடலில் கூறியுள்ளார்.   


   பாடலின் பின்னணி: திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக்காஞ்சி


 எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்.

துறை: பொருண்மொழிக் காஞ்சி. உயிருக்கு உறுதியளிக்கும் இம்மை மறுமைக் கடன்களை எடுத்துக் கூறுதல்.


யாதும் ஊரே; யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர்தர வாரா;

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;

சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்

 இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,

இன்னா தென்றலும் இலமே மின்னொடு

வானம் தண்துளி தலைஇ, ஆனாது

கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்

 முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.




உரை: எல்லா ஊரும் எமக்குச் சொந்த ஊர்தான். எல்லோரும் எமக்கு உறவினர்தான். தீமையும் நன்மையும் 

பிறரால் வருவன அல்ல. அவை தாமே வருவன. துன்புறுவதும் துன்பம் தவிர்தலும் (மகிழ்தலும்)

 அதைப் போன்றவை தான். அதாவது துன்பமும் இன்பமும் பிறரால் வருவன அல்ல. 

அவையும் தாமே வருவனதான். சாதல் என்பது புதியது இல்லை; வாழ்தல் இனிமையானது என்று

 மகிழ்வதும் இல்லை. (உலகின் மேலுள்ள) வெறுப்பால் வாழ்வு இனியதல்ல என்று கூறுவதும் இல்லை.

மின்னலுடன் வானத்திலிருந்து விழும் குளிர்ந்த நீர்த்துளிகள் மழையாகப் பெய்து, 

அளவிலடங்காது மலையில் உள்ள கற்களை அலைத்தொலிக்கும் மிகப்பெரிய ஆற்று நீராகச் செல்லும் 

வழியில் மிதந்து போகும் தெப்பம் போல், நமது (அரிய உயிர்) வாழ்க்கை, முறைப்படி அமையும் என்பதை

 அறிஞர்களின் அறிவுரைகளின் வழியே அறிந்தோம். ஆதலால், பெருமைக்குரிய பெரியோரைக் கண்டு 

ஆச்சரியப்படுவதும் இல்லை; சிறியோரை இகழ்தலும் இல்லை. என்பதே இப்பாடலின் விளக்கம்.


எழுத்தும், ஓவியமும்


-அணு-முத்துக்கிருட்டின்ன்,

சிவகங்கை,