ஆசிரியர்: நாஞ்சில் நாடன்
வெளியீடு: விஜயா பதிப்பகம்
விலை: ₹300
தொடர்புக்கு:9047087053
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் சமீபத்தில் 2 ஆண்டுகளுக்குள் எழுதிய 26 கட்டுரைகளின் தொகுப்பு இது.
ஒரு சொல்லுக்கு என்ன பொருள், அது எப்படி வேறாக மாறியது?
உதாரணம்: நாற்றம் எனில் ,அதன் உண்மையான பொருள் "மணம்", ஆனால் இன்றோ அது "துர்மணம்" என பொருள்பட அழைக்கிறோம்.
கட்டுரைகளின் சில பகுதிகள் இங்கே பார்வைக்காக:
9. நெல் எது? களை எது?
நாஞ்சில் நாடன் ஒரு நாள் பேருந்திற்கு காத்திருந்த போது, கல்லூரி சென்று திரும்பும் அழகிய மாணவி ஒருத்தி வந்து பக்கம் நிற்க, இவர் பின்னால் நின்ற இரு மாணவர்களில் ஒருவன், மற்றவனுக்குச் சொன்னானாம் , "செமயா இருக்கால்ல"என்று.
இன்னொரு நாள் வேலாயுதம் அண்ணாச்சியுடன் பேசிவிட்டு உணவு விடுதியில் காபி வரவிற்காக காத்திருந்த போது ,எதிரில் இருந்த அரிவை, அருகிலிருந்த பேரிளம் பெண்ணிடம் சொன்னாளாம், " சாம்பார் வடை செமயா இருக்குல்லே" என்று.
செம்மை என்ற சொல்லின் இடைக்குறை 'செமை' என்றாகி நாகரீக மாந்தர் வழக்கில் "செம" என்றாகியிருக்கலாம் என்பது தன் அனுமானம் என்கிறார்.
15. நடலை:
நடலை என்றால் வஞ்சனையோ, பொய்ம்மையோ, பாசாங்கோ, துன்பமோ, நடுக்கமோ அவற்றில் ஒன்றிரண்டோ அல்லது அனைத்துமேயோ இன்று எந்தெந்த வடிவத்தில் வந்து நம்மை வதைக்க காத்திருக்கிறது என்று நான் சொல்லி நீங்கள் அறிந்து கொள்ளும் நிலையில் இல்லை. ஆனால் அழுத்தம் திருத்தமாக மனதில் என்னுள் பதிந்து நிற்பன அப்பரின் தேவார வரிகள் என்கிறார்:
நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம் ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பமில்லை!
தாவளம் என்றால் Lodging, Place of Residence என உரைக்கின்றன அகராதிகள். வேண்டாத விருந்தாளிகள் வலிய வந்து வீட்டில் தங்கி இருந்தால், சலிப்புடன் நாஞ்சில் நாட்டில் சொல்வார்கள், " நம்ம வீட்டில் வந்து தாவளம் போட்டுட்டா" என்றும், " இங்க வந்து தாவளம் அடிச்சிற்றா" என்றும், இங்கு தாவளம் போடுதல் என்றால் அநாவசியமாக ஒருவர் வீட்டில் தற்காலிகமாகத் தங்குதல் என்று பொருளாம் (அத்தியாயம் 18.)
அறிய வேண்டிய அரிய தகவல்கள் அடங்கிய புத்தகம் இது.
-ஸ்ரீகாந்த்
திருச்சி.