tamilnadu epaper

எங்கள் ஊர் அலங்காநல்லூர் சிறப்புகள்

எங்கள் ஊர் அலங்காநல்லூர் சிறப்புகள்

 

மதுரையோட மகுடமே சித்திரை திருவிழா தான். திருமலை  நாயக்கர் காலத்தில் தேனூர் வைகை ஆற்றில் தான் கள்ளழகர் ஆற்றல் இறங்குவார் என்று சொல்கிறார்கள். அழகர் கோவிலில் இருந்து கள்ளழகரை தோளில் சுமந்து கொண்டு தேனுர் வைகை ஆற்றுக்கு கொண்டு வருவார்கள்.. அப்போது அந்த வழியில் கள்ளழகரையும் பக்தர்களையும் வரவேற்பாங்க அந்த இடம்தான் இப்ப இருக்கிற அலங்காநல்லூர் பகுதி . அங்கே பழமையான முனியாண்டிசாமி  கோயில் பகுதியில்தான் அழகரை  பூக்களால் அலங்காரம் செய்வார்கள். கள்ளழகரை சுமக்கிற பல்லக்கையும் அலங்காரம் செய்வார்கள். அதனால எங்க ஊருக்கு அலங்காரநல்லூர் என்ற பெயர் வந்தது அந்த பெயர் தான் காலப்போக்கில் மருவி அலங்காநல்லூர் என்று மாறிவிட்டது. எங்கள் ஊர் அலங்காநல்லூரானது மதுரை மாவட்டத்தில் உள்ள பதிமூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.வாடிப்பட்டி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தில் முப்பத்தி ஏழு ஊராட்சிகள் உள்ளன. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அலங்காநல்லூரில் இயங்குகிறது.அலங்காநல்லூரின் தட்பவெப்பநிலை மிதமானதாக உள்ளது. இந்த இடம் பெரியாறு துணை கால்வாய் மூலம் பாசனம் பெறுகிறது.சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.

உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது இந்த சோழவந்தான் சட்டமன்ற  தொகுதி.தென்னை, நெல், கரும்பு, கொய்யா வெற்றிலை விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது. விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். 

2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது சமயநல்லூர் சட்டமன்ற தொகுதி கலைக்கப்பட்டு அதில் சில பகுதிகளையும், கிழக்கு தொகுதியில் சில பகுதிகளையும் இணைத்து சோழவந்தான்(தனி) தொகுதி உருவாக்கப்பட்டது. அலங்காநல்லூர், வாடிப்பட்டி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், சோழவந்தான், பாலமேடு பேரூராட்சிகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. அலங்காநல்லூர்.இந்த இடத்தைச் சுற்றிலும் அதிக பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. நெல், கரும்பு, தென்னை மற்றும் வாழைப்பயிர் முக்கியப் பயிர்கள். அலங்காநல்லூரில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கரை ஆலை உள்ளது.தாலுகா தலைமையிடமாக உள்ள வாடிப்பட்டியில் உள்ள தாதம்பட்டியில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவும், நகரி பகுதியில் தொழில்சாலைகளும் உள்ளன. 

 

ஆண்டிபட்டி, குலசேகரன்கோட்டை, பூச்சம்பட்டி, ராமயன்பட்டி, செம்புக்குடிபட்டி, கொண்டயம் பட்டி பகுதிகளில் கல்குவாரிகள் செயல்படுகிறது. பாண்டியராஜபுரத்தில் இருந்த அரசு சர்க்கரை ஆலை மூடப்பட்டு விட்டது

 

 

 

எங்கள் அலங்காநல்லூரில் புகழ் பெற்ற முத்தாலம்மன் திருக்கோயில் உள்ளது.இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேலும் எங்கள் ஊரில் பெருமாள் மற்றும் அனுமார் திருக்கோயில் உள்ளது. 

 

அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொண்டையம்பட்டி ஊராட்சியில் கொண்டையம்பட்டி, சம்பக்குளம், மீனாட்சிபுரம், ஒட்டுப்பட்டி, பெருமாள் பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளது. 

 

அலங்காநல்லூரில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 2019-ம் ஆண்டு முதல் இயங்கவில்லை. கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக கரும்பு பற்றாக்குறை காரணமாக இந்த ஆலை இயங்காமல் உள்ளது. தமிழக அரசு இந்த ஆலையை இயக்க தேவையான முன்னேற்பாடு குறித்து ஆய்வு செய்ய ஒரு கமிட்டி அமைத்தது. அந்த கமிட்டி, இந்த ஆலையை இயங்க ரூ.26 கோடியே 50 லட்சம் நிர்வாக ரீதியாக தேவைப்படுகிறது. ஆலையின் அரவை பகுதிக்குள் குறைந்தபட்சம் அரவை காலத்திற்கு ஒரு லட்சம் டன் கரும்பு உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்து தமிழக அரசுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பித்தது. 

 

அலங்காநல்லூர் ஒன்றியம், பாரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சரந்தாங்கி கிராமத்தில் 400-க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 1500-க்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமம் கிழுவைமலை அடிவாரத்தில் உள்ளது. இந்த கிராமத்தினர், சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசிக்கிறார்கள். கடந்த காலங்களில், இந்த கிராமத்தில் குடிதண்ணீர் தட்டுப்பாடு இருந்ததே இல்லை. அதனால், விவசாயம் தடையின்றி நடந்தது. இந்த கிராமத்துக்கு அருகே உள்ள கல்லூத்தில் குடிதண்ணீர் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதனால், வறட்சியான காலங்களில் இந்த கல்லூத்தில் இருந்து குடிநீர் எடுத்து கிராம மக்கள் சமாளித்துவிடுவர். 

 

அலங்காநல்லூர் அருகே உள்ள கோவிலூர் கிராம எல்லைக்கு உட்பட்ட முல்லை பெரியாறு ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ளது நாராயண பெருமாள் கோவில் ஆகும். 

 

பழமை வாய்ந்த கருங்கற்களால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முற்கால பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டதாக அங்கே இருக்கும் கற்சிலைகள் தெரிவிக்கின்றன.4 மண்டபங்களாக அமையப் பெற்றுள்ள இந்த கற்கோட்டை கோவிலானது முன்மண்டபத்தில் ஆஞ்ச நேயர், கருடாழ்வார் வரவேற்க கருவறையில் ஆதிநாராயண பெருமாள் அமர்ந்து அருள் பாலிப்பதாக கோவிலில் உள்ள சிலைகளும் கல்வெட்டும் தெரிவிக்கிறது. 

 

அலங்காநல்லூரில் முனியாண்டி சுவாமி, முத்தாலம்மன், மற்றும் அய்யனார் சுவாமி, கருப்பணசுவாமி, கோவில்களில் பங்குனி திருவிழாக்கள்  ஆண்டுதோறும் சிறப்பாக நடக்கும். 

 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டில் உள்ள விறுவிறுப்பின் காரணமாகவும் ஊடகங்கள் மற்றும் தமிழ் திரைப்படங்களின் மூலமும் உலக அளவில் பிரபலமாக உள்ளது.

அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டினை அனைவரும் பார்க்க விரும்புவதற்கு காரணம் நின்று விளையாடும் காளை மாட்டையும், அதனை பிடிக்க சீறும் இளைஞர் படையினரையும் காண்பதற்காகத்தான். அதேபோல இங்கு வழங்கப்படும் பரிசுப்பொருட்களும் அதிகம், அதன் விலையும் அதிகம். அவர்கள் கொடுக்கும் பரிசானது மாட்டினை அடக்குபவர்களுக்கோ அல்லது மாட்டின் உரிமையாளருக்கோ மட்டும்தான் போய்ச்சேரும். இந்த ஜல்லிக்கட்டை காண முந்தையநாள் இரவிலிருந்தே படுத்து இடம் பிடிக்கும் ஜல்லிக்கட்டு வெறியர்களும் உண்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு வருகை புரிந்தால் அனைத்து இன காளைகளையும் ஒரே இடத்தில் காணலாம்.

ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் அலங்காநல்லூரில் நிற்க இடமிருக்காது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 7  மணிமுதல் மதியம் 2.30 மணிவரை நடக்கும். தமிழ்நாடு மட்டுமல்லாமல்லாது வெளி மாநிலங்களிலிருந்தும் ஏன் வெளிநாடுகளில் இருந்து கூட, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண வருகை தருவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் வீட்டு மொட்டைமாடி, கொடிக்கம்பம் மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டைகள் என கிடைத்ததில் எல்லாம் அமர்ந்து ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்ப்பார்கள்.

 

-தினேசு 

 நங்கநல்லூர்