ஏரகரம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகாவில் உள்ள சிறிய ஊர்.
ஏரகரம் ஊராட்சி கும்பகோணம் சட்டமன்ற, மயிலாடுதுறை நாடாளுமன்ற
தொகுதிகளுக்கு உட்பட்டது. 2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி
இந்த ஊரின் மொத்த மக்கள் தொகை 2660 ஆகும். கும்பகோணம் அசூர் சாலையில்
உள்ளது இந்த ஊர். இந்த ஊரின் பிரதான தொழில் விவசாயம் தான். ஆகஸ்ட்
மாத நிலவரப்படி ஏரகரம் உள்ளிட்ட பகுதிகளில் நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு
செய்யப்பட வயல்களில் அறுவடை முடிந்து விட்டது. அறுவடை பணிகள்
முடிந்ததும் தாளடி, சம்பா பணிகள் தொடங்கி முடிந்து விட்டது. மேலக்கொட்டையூர் என்ற ஊர்
அருகே காவிரியின் இடது கரையில் ஏரகரம் கிராமத்திற்கு பாசனத்திற்கு பிரிகிறது
சர்வமானிய வாய்க்கால்.
"ஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே - எங்கள்
ஆதி சக்தி நாயகியின் துணை பெறுவோமே.." - திருவருட்செல்வர் படத்தில்
இடம்பெற்ற மிக மிக இனிமையான பக்தி பாடல்.
ஒவ்வொரு கிராமத்திற்கும் பிரதானமான அடையாளமாக இருப்பது பழமையான சிவன்
கோயில்கள் தான். அதனால்தான் அந்த பாடலை குறிப்பிட்டேன்.
இந்த கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சங்கர நாயகி உடனுறை ஸ்ரீ கந்தநாதசுவாமி கோயில்
உள்ளது. அறுபடை ஸ்தலங்களில் நான்காவது ஸ்தலமாகிய சுவாமிமலையில்
இருந்து சுமார் மூன்று கி மீ தொலைவில் உள்ளது இந்த கோயில். சுமார் 1000 ஆண்டுகளுக்கு
முற்பட்ட பழமையான கோயில் இது. இந்த ஊர் பெயர் சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.
"சிலம்பில் ஊர்ப்புனைவுகள்" என்ற இலக்கிய ஆய்வுக் கட்டுரையில் திரு.ரமேஷ் சாமியப்பா
அவர்கள் (தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர், கும்பகோணம் அரசு கல்லூரி) குறிப்பிட்டுள்ளார்.
அசுரர்களை அழிக்க முருகப்பெருமான் தேர்ந்தெடுத்து வந்து தங்கிய இடம்தான் ஏரகரம்.
அதற்கு அவருக்கு சிவபெருமான் ஒரு அஸ்திரம் வழங்கி அருளினார். முருகனின் அஸ்திரம்
பாய்ந்த இடம் ஏரகரம். அசுர வதத்திற்கு முன்பு தன் பெற்றோர்களையும் விநாயகரையும்
துதித்து ஆசி பெற வேண்டி வணங்க, சிவனும் பார்வதியும் கந்தநாதசுவாமியாகவும்,
சங்கரநாயகியாகவும் வந்து அமர்ந்தனர். இவர்களை பதினாறு விதமாக ஆராதனை
செய்ய அமைக்கப்பட்ட தடாகம் தான் 'சரவணப்பொய்கை'. ஆதி கந்தநாதசுவாமி என்று
அழைக்கப்படும் இந்த கோயிலில் பின்புறத்தில் நின்ற கோலத்தில் முருகன் உள்ளார்.
முருகன் அமர்ந்த இடம் என்பதால் குமாரபுரம் என்ற பெயரும் இத்தலத்துக்கு உண்டு.
இந்த கோயிலில் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்தசஷ்டி விழாவில் சங்கரி அம்மையிடம்
முருகன் வேல் வாங்கி சூரசம்ஹாரத்திற்கு செல்லும் உற்சவம் சிறப்பாக நடைபெறும்.
சஷ்டி நாளில் விரதமிருந்து வழிபடுவோருக்கு உரிய காலத்தில் திருமணம் நடந்து
குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த ஊரில் அரசு உதவிப் பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. 1958 ஆம் ஆண்டு இந்த
பள்ளி தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் உதவி பெறும்
பள்ளிகள் பற்றிய தகவல்களை கல்விக்கான ஒருங்கிணைந்த தகவல் முறைமை
எண் மூலமாக தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு எண் உண்டு.
அதில் சென்று பார்த்தால் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
ஆங்கிலத்தில் U-DISE (UNIFIED DISTRICT INFORMATION SYSTEM FOR EDUCATION) என்று
சொல்வார்கள்.
இந்த ஊருக்கு மிக அருகாமையில் உள்ள ஊர் இன்னம்பூர். இங்கு தான் திரு.கஸ்தூரி ரங்கன்
(1859-1923) அவர்கள் பிறந்தார். சுதந்திர ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர். தி இந்து
பத்திரிகையில் சட்ட நிருபராக பணிபுரிந்தார். ஏப்ரல் 1 1905 ஆம் ஆண்டு இந்து பத்திரிக்கையை
வாங்கினார். அந்த பத்திரிக்கையை அவரது சந்ததியினர் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
ஏரகரம் ஊருக்கு அருகாமையில் உள்ள இன்னொரு ஊர் 'திருப்புறம்பியம்'. வரலாற்றில்
இடம்பெற்ற ஊர். பொன்னியின் செல்வன் நாவலில் இந்த ஊர் வரும். இந்த ஊரில்
மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான பாடல் பெற்ற தலமான சாட்சிநாத சுவாமி
திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் புகழ்பெற்ற பிரளயம் காத்த விநாயகர்
வீற்றிருக்கிறார்.
பிற்கால சோழர்கள் வரலாற்றை எழுதிய சதாசிவ பண்டாரத்தார்
திருப்புறம்பியத்தில் பிறந்தவர். சோழர்களின் வரலாற்றை முழுமையாக எழுதியவர்
இவர்தான். ஏரகரம் கோவில் கல்வெட்டுகளில் இந்த ஊர் இன்னம்பர் (தற்போது இன்னம்பூர்) நாட்டில்
இருந்தது என்றும் ஏர் என்னும் பெயருடன் அழைக்கப்பட்டது என்றும் அதற்கு
மும்முடி சோழமங்கலம் என்று வேறு ஒரு பெயர் இருந்ததையும் தனது ஆராய்ச்சி
கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ராஜராஜ சோழனால் எடுப்பிக்கப்பட்ட தஞ்சை
ராஜ ராஜேஸ்வரம் கல்வெட்டு ஒன்றில் ஏர் என்னும் திருப்பதி இன்னம்பர் நாட்டில்
இருந்தது என்ற தகவலையும் தருகிறார். முதலாம் ராஜ ராஜ சோழனுக்கு
மும்முடி சோழன் என்ற பட்டப்பெயர் உண்டு. அவர் ஆட்சிக் காலத்தில் மும்முடி சோழமங்கலம்
என்று அழைக்கப்பட்ட ஊர் தான் பின்னாளில் ஏரகரம் என்று அழைக்கப்படலாயிற்று. அப்பர் பெருமானால்
பாடப்பெற்ற தேவார வைப்புத்தலங்களில் ஒன்று என்பதும் தெளிவாகிறது.
திருப்புறம்பியம் என்றதும் பொன்னியின் செல்வனில் படித்த 'பள்ளிப்படை'
நினைவுக்கு வரும். "போர்க்களத்தில் உயிர் துறந்த வீரர்கள் நினைவாக வீரக் கல்
நட்டு வைப்பது பழந்தமிழர் மரபு. வெறும் கல் மட்டும் இருந்தால் அதை
'நடுகற் கோயில்' என்று அழைப்பார்கள். அத்துடன் ஒரு தெய்வத்தின் சிலையையும்
ஸ்தாபித்து ஆலயமாக எழுப்பி இருந்தால் அது 'பள்ளிப்படை' என்று அழைக்கப்படும்.
கி.பி. 885 ஆம் ஆண்டு இங்கு நடந்த மாபெரும் போரில் உயிர் துறந்த
கங்க மன்னன் பிரிதிவீபதி ஞாபகமாக அமைக்கப்பட்டது பள்ளிப்படை" -என்று கல்கி
அவர்கள் தனது நாவலில் எழுதியுள்ளார்.
திருமாளம் எஸ். பழனிவேல்