ஊட்டியை 'மலைகளின் அரசி' என்றும், கொடைக்கானலை 'மலைகளின் இளவரசி' என்றும் அழைப்பது போல, ஏற்காட்டை 'ஏழைகளின் ஊட்டி' என்று அழைக்கிறார்கள். ஏற்காட்டிற்கு 'ஏழு காடுகளின் நிலம்' என்ற பெயரும் உண்டு. ஏரிக்கரையில் அமைந்திருப்பதால், முதலில் 'ஏரிக்காடு' என்று வழங்கி பிறகு 'ஏர்க்காடு' என அழைக்கப்பட்டு, நாளடைவில் 'ஏற்காடு' என மாறியதாக கூறுகிறார்கள்.
ஏற்காடு கடல் மட்டத்தில் இருந்து 1,515 மீட்டர்(4,969அடி) உயரத்தில் அமைந்துள்ளது. சேலத்தில் இருந்து 36 km தூரத்தில் உள்ளது. இதன் மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. ஏற்காட்டில்
சராசரியாக 9 - 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையான மிதமான தட்பவெப்பநிலையே நிலவுவதால் ஏற்காட்டுக்கு எப்போதும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.
தமிழ்நாட்டின் சேர்வராயன் மலையில் அமைந்துள்ள ஏற்காடு, கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஒரு மலை வாசஸ்தலம்.
பார்க்க வேண்டிய இடங்கள்
ஏற்காடு ஏரி
Emerald lake என்றும் அழைக்கப்படும் இந்த ஏற்காடு ஏரி, தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் தானாக உருவான ஏரிகளில் ஒன்றாகும். ஏரியின் நடுவில் ஓர் நீருற்றும் அமைந்துள்ளது.
அடர்ந்த மரங்களும், தோட்டங்களும் சூழ படகுப் பயணம் செய்யலாம்.
அண்ணா பூங்கா
ஏரியின் அருகே அண்ணா பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஜப்பான் தோட்டக்கலையைப் பின்பற்றி ஒரு சிறிய பூங்காவும் அமைந்துள்ளது. மே மாதம் இங்கு மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.
லேடிஸ் சீட்!
ஏற்காட்டில் இருந்து இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கிருந்து தொலைநோக்கி மூலம் சேலம் மாநகரைக் கண்டு ரசிக்கலாம். இரவு நேரங்களில் மலையில் இருந்து சேலம் மாநகர் ஒளி வெள்ளத்தில் ஜொலிப்பதையும் காணலாம்.
கிள்ளியூர் நீர்வீழ்ச்சி
ஏற்காடு ஏரியில் இருந்து மூன்று கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி.மழை காலங்களில் தண்ணீர் அதிகம் இருக்கும்.
பகோடா பாயின்ட்
இங்கிருந்தும் சேலம் மாநகரை காணலாம், மேலும் இங்கிருந்து காக்கம்பாடி எனும் கிராமத்தையும் காண முடியும். இங்கு வாழ்ந்த மக்கள்இங்கு கற்களால் ஒரு இராமர் கோவிலை கட்டியுள்ளனர்.
சேர்வராயன் கோவில்
சேர்வராயன் மலையில் கடல் மட்டத்தில் இருந்து 5326 அடி உயரத்தில் அமைந்துள்ளது இங்கு இருக்கும் கடவுளான சேர்வராயரும் காவேரி அம்மனும் சேர்வராயன் மலையையும், காவேரி நதியையும் குறிக்கின்றனர்.
மான் பூங்கா!
இங்குள்ள சுற்றுலா தலங்களில் மக்களை மிகவும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கும் இடம் வனதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள மான் பூங்கா. ஏனெனில் மான் பூங்காவானது படகு இல்ல ஏரிக்கு நடுவில் ஒரு தீவு போல உள்ளது. இந்த பூங்காவிற்கு ஏரியின் மீது அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடந்து செல்வதே ஒரு தனி அனுபவத்தை ஏற்படுத்தும்.
தாவரவியல் பூங்கா!
18.4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தாவரவியல் பூங்காவில் 3000 வகையான மரங்களும், 1800 வகையான செடிகளும் உள்ளன.இந்தப் பூங்கா 1963ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
ஏற்காட்டில் குறிஞ்சி மலர் அதிகளவில் பூக்கும், மேலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் குறிஞ்சி மலர் தனிச்சிறப்பு வாய்ந்தது.
ராஜா சக்கரவர்த்தி, திருவான்மியூர்