tamilnadu epaper

எங்கள் ஊர் *ஒகேனக்கல்* சிறப்பு

எங்கள் ஊர் *ஒகேனக்கல்* சிறப்பு

ஹொகேனேகல் என்ற கன்னட சொல்லுக்கு *புகையும் கல்பாறை* என்று பொருள்.

திப்பு சுல்தான் காலம் வரை வரிவாங்கும் அதிகாரிகள் கன்னடம் பேசுபவர்களாக இருந்த காரணத்தால் தருமபுரி மாவட்டத்து ஊர்ப் பெயர்கள், மலைப்பெயர்கள், ஆறுகளின் பெயர்கள் ஆகியவற்றைக் கன்னடப் பெயர்களாக வருவாய்த்துறைப் பதிவேட்டில் பதிவு செய்தனர். அதை அப்படியே ஆங்கிலேயர் காலத்திலும் பின்பற்றினர். அந்தப் பெயரே நிலைத்து விட்டது

ஒகேனக்கல் தர்மபுரியில் இருந்து சுமார் 47 KM தொலைவிலும் , பென்னாகரத்தில் இருந்து 16 KM தொலைவிலும் அமைந்து உள்ளது . ஓகேனக்கல் கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரத்தில் உள்ளது.

 

*தமிழகத்தின் நயாகரா* என்று வர்ணிக்கப்படுவது ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மட்டுமல்லாது கர்நாடக, ஆந்திரம், கேரள மாநிலங்களில் இருந்தும் படையெடுக்கின்றனர். வெளிநாட்டினரும் வந்து செல்லும் ஒகேனக்கல் அப்படி என்னதான் ஸ்பெஷல் என்று கேட்பவர்களுக்கு அங்கு சென்றால் அருவியில் இருந்து வந்து விழும் சாரல் பதில் சொல்லும். 

பரிசல் மூலம் சுற்றுலாப் பயணிகளை அருவிகளுக்கு அருகே அழைத்துச்செல்வார்கள்

 

அகன்று பரந்து விரிந்து வரும் காவேரி ஆறு ஒகேனக்கல்லில் வந்துதான் பிரிந்து அருவிகளாக ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி என விழுந்து எழுகிறது காவிரி. அருவிகளின் அழகை கண்டு ரசிக்க காவிரி ஆற்றின் குறுக்கே தொங்குப் பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. அருவிகளில் பார்க்க மட்டும் இல்லை.. குளிக்கவும் அனுமதிக்கபடுவதுண்டு.  

காலை 9 மணி முதல் மாலை 5 வரை அனுமதிக்கப்படுவதுடன், அருவியில் குளிக்க ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு உடை மாற்றுவதற்கு அறை வசதிகள் உள்ளன.

 

ஒகேனக்கலுக்கு தருமபுரியிலிருந்து பேருந்தில் சென்று வர ஒரு நபருக்கு 80 ரூபாய். மேலும் சென்னை, பெங்களூர், கோவை, மதுரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிருந்தும் தருமபுரிக்கு பேருந்து மற்றும் ரயில் வசதி உள்ளது. சேலம் விமான நிலையத்திலிருந்து 70 கி.மீ தூரத்தில் ஒகேனக்கல் அமைந்துள்ளது.

 

இந்த சுற்றுலா இடத்தை காண்பதற்கு தினமும் வெளிநாடு, வெளி மாநிலம், தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து பல ஆயிரம் பேர் தினமும் வந்து ரசித்து செல்கின்றனர்.

 

இந்த ஒகேனக்கல் சுற்றுலா தலம் 2000 பேருக்கு மேல் வேலை வாய்ப்பையும் வழங்கி வருகிறது.

 

ஒகேனக்கல்லில் ஒரு நதி அவ்வளவு அழகையும் கொட்டி வைத்துள்ளது. எங்கும் காண முடியாத புகைப்பாறைகள், அமைதியான ஓடையாக, சிறு நதியாக, ஓங்கிய மலைகளுக்கு நடுவில், உயர்ந்த மரங்களுக்கு இடையில், உயர்ந்த பாறைகளுக்கு இடுக்கில், கொட்டி வைத்த மணல் குவியல் மீது, விளையாடும் கால்வாயாக, இமயம் போல் நிமிர்ந்து நிற்கும் மலைகளுக்கு நடுவில், பல லட்சம் தாவரங்களின் பாதுகாப்பில் இந்த காவிரி ஆற்றை வேறு எந்த இடத்திலும் காணமுடியாது.

 

பெருந்தொழிற்சாலையை போல மாசுக்கட்டுப்பாடு இல்லாமல் இந்த தொழிலாளர்கள் இயற்கையை சார்ந்த வேலையை செய்து வருகின்றனர்.

 

மீன் பிடித்தல், பரிசல் இயக்குதல், நாவிற்கு சுவையான சுட சுட மீன் சமையல் சமையல் செய்து கொடுத்தல், சுகமான சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாகத்தை தரும் விசேஷ மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட பல தலைமுறை கண்ட எண்ணெய் மசாஜ் என இயற்கை சார்ந்த தொழிலை செய்து வருகின்றனர்.

 

பூமியின் சொர்க்கமாக இருக்கும் இந்த சுற்றுலா தலம், அமைதியை, இயற்கையை நேசிப்பவர்களுக்கு அற்புதமான இடமாக இருக்கிறது.

 

கீதா ராஜா சென்னை