கிண்டி சென்னையின் தென்பகுதியில் அமைந்துள்ளது. கிழக்கே அடையாறும் வடக்கே கோட்டூர்புரமும் உள்ளன. இங்கு புகழ் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கிண்டி தேசியப் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் மாநில ஆளுநரின் அதிகாரப்பூர்வ இருப்பிடம் ராஜ்பவன் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் அமைந்துள்ள வளாகத்தின் முந்தைய கிண்டி பொறியியற் கல்லூரி, இந்தியாவின் பழமையான பொறியியற் கல்லூரிகளுள் ஒன்றாகும். மேலும் கிண்டியில் ஒரு பாம்புப் பண்ணையும் சிறுவர் பூங்காவும் உள்ளன. இவற்றை அடுத்து ராஜாஜி, காமராஜர், மற்றும் அண்ணல் காந்தி நினைவிடங்கள் உள்ளன. தாம்பரம்–சென்னைக் கடற்கரை சுற்றுப்புற வழித்தடத்தின் நிறுத்தமாக தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகாமையில் தொழிற்பேட்டை ஏற்படுத்தப்பட்டது. மேலும் இந்தியாவிலே முதன் முதலில் உருவான CIPET அமைந்துள்ளது.
*கிண்டி தேசியப் பூங்கா*
இந்தியாவில் எட்டாவது சிறிய தேசியப் பூங்காவாகும். ஒரு மாநகரின் எல்லைக்குள் அமைந்திருக்கும் அரிய வகை தேசியப் பூங்காக்களில் இப்பூங்காவும் ஒன்று.இந்த தேசிய பூங்கா உலர்/வறண்ட பசுமை காடுகள் மற்றும் புதற்காடுகள் தாவரங்களைக் கொண்டது. இங்கு 350க்கும் மேற்பட்ட தாவர சிற்றின வகைகள் காணப்படுகிறது.
இங்கு 14 பாலூட்டி சிற்றினங்கள் உள்ளன. இதில் புள்ளி மான், கலைமான், நரி, கீரி போன்ற அதிக தொகையில் காணப்படுபவையாகும். 100க்கும் மேற்பட்ட பறவையினங்களும் இங்கு உண்டு.
கிண்டி தேசியப் பூங்கா வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள இப்பாம்புப் பண்ணையில் அரிய வகை நச்சுப் பாம்புகள் மற்றும் நச்சற்ற பாம்புகளை வளர்த்து இனப்பெருக்கம் செய்வதுடன், மருத்துவப் பயன்பாட்டிற்காக, பாம்புகளிடமிருந்து நச்சு சேகரிக்கப்படுகிறது.
*கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை*
6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 4.89 ஏக்கர் நிலத்தில் சுமார் 51,429 ச.மீ.,பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் சிறுநீரகவியல் , இருதயவியல் , கதிரியக்கவியல் , நரம்பியல் , நுண்ணுயிரியல் , மயக்கவியல் மற்றும் அறுவை சிகிச்சை, அவரச சிகிச்சை, பல்வேறு ஆய்வகம் என்று மொத்தம் 20 உயர் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதயம், நரம்பு, இரைப்பை, சிறுநீரகம், ரத்தநாளம், புற்றுநோய், ரத்த மாற்று தொடர்பான உயர் சிகிச்சைகள் இந்த மருத்துவமனையில் வழங்கப்படுகின்றன.
*காந்தி மண்டபம்*
கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகமானது சுமார் 18.42 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தேசத் தலைவர்களின் நினைவிடங்கள் மற்றும் சிலைகள் நிறுவப்பட்டு, பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வளாகத்தில், பெருந்தலைவர் காமராஜர் நினைவிடம், பெருந்தலைவர் காமராஜர் சிலை, பெரியவர் எம்.பக்தவச்சலம் நினைவிடம், இரட்டைமலை சீனிவாசன் நினைவிடம், காந்தி மண்டபம் நூலகம் மற்றும் அருங்காட்சியகம், தியாகிகள் மணிமண்டபம், இராஜாஜி நினைவிடம் நூலகம் மற்றும் அருங்காட்சியகம். மொழிப்போர்த் தியாகிகள் மணிமண்டபம், அண்ணல் காந்தியடிகள் சிலை, தியாகி சங்கரலிங்கனார் சிலை, செண்பகராமன் சிலை, ஆர்யா (எ) பாஷ்யம் சிலை மற்றும் திறந்தவெளி கலையரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
*கிண்டி பொறியியல் கல்லூரி*
இதுவே இந்தியாவின் பழமையான நுட்பவியல் கல்லூரி. நாட்டிலே முதல் முறையாக, பல பொறியியல் பிரிவுகளை அறிமுகப்படுத்தியது. தென்னிந்தியாவில் முதன் முறையாக கணினி மையத்தை 1963 இல் நிறுவிய கல்வி நிறுவனமும் இதுவே.
இக்கல்லூரி பல பன்னாட்டு நிறுவனங்களுடனும் அரசுகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது. தனியாக அஞ்சல் தலை கொண்ட கல்லூரியும் இதுவேயாகும். நடுவண் அரசு, இக்கல்லூரியின் இருநூறாவது ஆண்டை முன்னிட்டு, நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.
*ஆளுநர் மாளிகை/ராஜ் பவன்*
ஆளுனர் மாளிகை தமிழ்நாடு ஆளுநர்கள் வாழும் அலுவல்முறை இருப்பிடம். ர
கோடைக்காலத்தில் உதகமண்டலத்தில் உள்ள இருப்பிடத்தில் ஆளுநர் தங்கியிருப்பார்.
ஆளுனர் மாளிகை கிண்டி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள மான் வகைகள் 1924ஆம் ஆண்டில் கொண்டு விடப்பட்டன. சுமார் 156 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் 6718 மரங்களும், 3.5 ஏக்கர் பரப்பளவில் காய்கறி தோட்டமும் உள்ளது. 698 புள்ளிமான்கள், 254 கலைமான்கள், எண்ணற்ற குரங்குகள், 80க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு கூடுகட்டி வாழ்கின்றன. இவ்வளவு பசுமையான கவர்னர் மாளிகை பள்ளி மாணவர்களுக்கான சுற்றிப்பார்க்கும் இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
*ரேஸ் கிளப்*
மெட்ராஸ் ரேஸ் கிளப், 1777-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியாவிலுள்ள பழைமையானதும், புகழ்பெற்றதுமான ரேஸ் கிளப்புகளில் இதுவும் ஒன்று. இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் இதில் உறுப்பினர்கள். 1825-ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், அடையாறு கிராமத்துக்கு பாத்தியப்பட்ட இந்த 148 ஏக்கர் நிலத்தை, மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்குக் குத்தகைக்கு எழுதிக்கொடுத்தார். கடைசியாக, 1946-ல், ஆண்டுக்கு ரூ.614 மதிப்பில் குத்தகைக்கு விடப்பட்டது.
கடிவாளத்தை அழுத்தமாக இழுத்து குதிரையை நிறுத்தும் ஒரு மனிதனின் சிலையை சென்னை, அண்ணா மேம்பாலத்தில் ,1974-ல் தமிழ்நாடு முதல்வராக கருணாநிதி இருந்தபோது, குதிரைப் பந்தயங்களை ஒழித்ததன் நினைவாக சிலையை நிறுவினார்.
இன்னும் கொஞ்ச நாள்களில் கிண்டியிலிருக்கும் `மெட்ராஸ் ரேஸ் கிளப்' பகுதியைக் கடக்கும் ஒவ்வொருவரும், இத்தனை ஆண்டுகளாக அரண்மனைச் சுவர்களுக்குள் பதுங்கிக்கிடந்த குதிரைப் பந்தய மைதானத்தை, மழைநீர் ததும்பும் குளங்களாகப் பார்க்கப்போகிறோம். இவை, அரசாங்க நிலத்தை, பைசா செலவில்லாமல் பல்லாண்டுகளாகப் பயன்படுத்திக்கொண்டு பணம் பார்த்து வந்த மெட்ராஸ் ரேஸ் கிளப், ஜிம்கானா கிளப்புகளை தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூடியதன் நினைவாகத் தோண்டப்படும் நினைவுக் குளங்கள்!
ராஜா சக்ரவர்த்தி
சென்னை