tamilnadu epaper

எங்கள் ஊர் திருப்பூந்துருத்தி

எங்கள் ஊர் திருப்பூந்துருத்தி

 

எங்கள் ஊர் திருப்பூந்துருத்தி. இங்கு இரண்டாயிரம் வருடங்கள் பழமையான சிவன் கோயில் உள்ளது. திருப்பூந்துருத்தி தலம் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டத்தில் உள்ளது. தஞ்சாவூர்-தோகூர் பஸ் மார்க்கத்தில் தஞ்சையிலிருந்து 17கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. தஞ்சையிலிருந்து நேரிடையாக பஸ் உள்ளது. திருவையாறிலிருந்து மினி பஸ் மற்றும் ஆட்டோ, காரிலும் செல்லலாம் . திருவையாறு தஞ்சாவூர் பஸ் மார்க்கத்தில் கண்டியூரில் இறங்கினால் தஞ்சாவூரிலிருந்து வரும் பேருந்துகளில் சென்றால் 3 கிலோமீட்டர் தூரத்தில் மேற்கே உள்ளது. நடுப்பாலம் என்ற பஸ் நிறுத்தத்தில் இறங்கினால் ஐந்து நிமிட நடையில் கோயிலை அடைந்துவிடலாம். கோயில் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும். இறைவன் பெயர் புஷ்பவனஸ்வரர். இறைவி சௌந்தரநாயகி. அப்பர் பெருமான் இங்கு சில காலம் மடம் அமைத்து தங்கியிருந்து கோயில் முழுவதும் உழவாரப்பணி செய்திருக்கிறார். அது சமயம் திருஞானசம்பந்தர் இங்கு வந்து அப்பரடிகளை சந்தித்திருக்கிறார். அப்பர் சம்பந்தரை ஆலயத்துக்குள் அழைக்க, "தங்கள் கரங்களால் உழவாரப்பணி செய்த இடத்தில் இந்த சிறியேனது கால்கள் படக்கூடாது"என சம்பந்தர் உள்ளே செல்ல மறுத்து விட்டு கோபுர வாயிலிலிருந்தே இறைவனை தரிசிக்க முயல்கிறார். நந்தி மறைத்திருக்கிறது. உடனே அப்பர் இறைவனை நந்தியை விலகி நிற்கும்படி ஆணையிட வேண்டுகிறார். இறைவனும் அவ்வாறு ஆணையிட நந்தி விலகி சம்பந்தர் இறைவனை தரிசித்து மகிழ்கிறார். ஆனால் அவர் இத்தலத்து இறைவன் மீது பதிகம் எதுவும் பாடவில்லை. ஒரு வேளை அவர் பாடி அப்பதிகம் கிடைக்கவில்லையோ என்னவோ தெரியவில்லை. திருநாவுக்கரசரது பதிகங்கள் மட்டுமே உள்ளன.

 

இன்றைக்கும் எந்த கோவிலிலும் இல்லாதவாறு கோபுர வாயிலிலிருந்து மூலஸ்தானம் வரை உள்ளது மூன்று நந்திகளும், பலிபீடம் ஆகியவை விலகி இருப்பதை காணலாம்.

 

கையில் வீணையுடன் தோன்றும் வீணாதர தட்சிணாமூர்த்தியை இங்கு தரிசிக்கலாம்.

 

வேலவன் கையில் வில்லோடு வில்லேந்திய வேலவனாக ஒரு தூணில் காட்சி தருகிறார். 

 

துர்க்கை அமர்ந்த நிலையில் காணப்படுகிறார்.

கோயில் வாசலில் மும்மூர்த்திகளும் மூன்று பிள்ளையார்களாக காட்சியளிக்கின்றனர். அருகிலேயே அப்பர் வாழ்ந்த அப்பர் மடம் உள்ளது.

 

திருப்பூந்துருத்தி ஆலயத்தில் காசிவிஸ்வநாதருக்கு சிறு கோயில் உள்ளது. இதன் கருவறை வாசலில் இருபுறமும் துவாரபாலகர்கள் தத்தம் துணைவியரோடு காட்சி தருகின்றனர்.

 

இக்கோவிலில் உள்ள கிணறு ஒன்றில் ஆடி மாத அமாவாசை அன்று கங்கை முதலான புண்ணிய நதிகள் யாவும் வந்து கலப்பதாக ஐதீகம். எனவே ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று வெளியூர்களில் இருந்தெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து குடமுருட்டி நதியில் நீராடி தங்கள் பித்ருக்களுக்கு திதி கொடுத்துவிட்டு கோவிலுக்கு வந்து புண்ணிய கிணற்று நீரை தங்கள் சிரங்களில் தெளித்துக்கொண்டு கோவிலை வலம் வந்து, செல்கின்றனர்.

 

அப்பர் தனது பதிகத்தில் இத்தலத்தைப் பற்றி கூறுகையில், 'பூந்துருத்தி, பூந்துருத்தி என்பீராகில் பொல்லாப் புலால் துருத்தி போக்கலாமே!' என்கிறார். அதாவது "பூந்துருத்தி" என்று கூறினாலே போதும், புலால்மயமான இவ்வுடலை இப்பிறவியோடு போக்கி நற்கதியை அடையலாம் என கூறுகிறார். 

 

இந்த ஊரில் சிவன் கோவில் தவிர வரதராஜ பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், அய்யனார் கோவில் ஆகியனவும் உள்ளன.

 

கிருஷ்ண லீலா பாடிய ஸ்ரீ தீர்த்த நாராயணர் என்ற மஹான் ஜீவ சமாதி அடைந்த கோவிலும், மராட்டிய வம்சாவளியினர் வாழும் அரண்மனை,இஸ்லாமிய மசூதிகள் மற்றும் கிறித்துவ தேவலாயமும் உள்ளன. அரசு உயர் நிலை பள்ளி இருக்கிறது. ஊருக்கு வடக்கே காவிரியின் கிளை நதியான குடமுருட்டியும் அதனை அடுத்து காவிரி நதியும் ஓடுகின்றன. எனவே ஊர் எப்போதும் செழுமையாக காணப்படுகிறது.

 

 ஒருமுறை எங்கள் ஊருக்கு வந்து செல்லுங்கள்!