tamilnadu epaper

எங்கள் ஊர் நாச்சியார் கோவில் சிறப்புகள்

எங்கள் ஊர் நாச்சியார் கோவில் சிறப்புகள்

 

எங்கள் ஊர் நாச்சியார் கோவில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த சிற்றூர் ஆகும். இதன் பழைய பெயர் திருநறையூர் ஆகும். இது திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கும், மயிலாடுதுறை மக்களவை தொகுதிக்கும் உட்பட்டது.திருவிடைமருதூர் ஒன்றியத்தின் 46 ஊராட்சிகள், திருப்பனந்தாள் ஒன்றியத்தின் 44 ஊராட்சிகள், கும்பகோணம் ஒன்றியத்தின் 5 ஊராட்சிகள், திருபுவனம், திருவிடைமருதூர், ஆடுதுறை, வேப்பத்தூர், திருப்பனந்தாள் ஆகிய 5 பேரூராட்சிகளை உள்ளடக்கியது திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி. எங்கள் நாச்சியார் கோவில் கிராமத்தில்  வைணவ நாச்சியார் கோவில் எனப்படும் திருநறையூர் நம்பி கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கல் கருடச் சேவை மிகவும் புகழ்பெற்றது.நிறைய சோலைகள் அமைந்த ஊர். ஸ்ரீநிவாசப் பெருமாள், நாச்சியாரை மணம் முடித்து இந்த ஊரிலேயே கோயில் கொண்டதால், நாச்சியார் கோயில் என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.கோவில் பெயரே ஊர்பெயராக அமைந்திருக்கும் சில ஊர்கள் உள்ளன. அவற்றில் நாச்சியார் கோவிலும் ஒன்று.இவ்வூரில் தயாரிக்கப்படும் நாச்சியார் கோயில் விளக்குகள் புவிசார் குறியீடு பெற்றுள்ளது.நாச்சியார்கோயில் கும்பகோணத்திலிருந்து குடவாசல் செல்லும் பாதையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 

 

விவசாயத்தை மட்டும் பிரதான தொழிலாக நம்பி இப்பகுதி விவசாயிகள் உள்ளனர். 

 

நாச்சியார் கோவிலிலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் தயாரிக்கப்படும் குத்து விளக்கானது நாச்சியார் கோயில் குத்து விளக்கு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இவை மிகவும் புகழ்பெற்றது. மண்ணும் பொன்னைப்போல ஜொலிக்கும் என்பார்கள். நாச்சியார் கோவில் பித்தளை குத்துவிளக்கு ஜொலிப்பதற்கு அந்தப் பகுதி மண்ணும் ஒரு காரணம் என்கின்றனர் குத்து விளக்கு உற்பத்தியில் ஈடுபட்டு வருபவர்கள்.

வெற்று வார்ப்பாக இருக்கும் விளக்கு, வெவ்வேறு அளவுகளில் நான்கு பகுதிகளாகத் தயாரிக்கப்பட்டு பின்னர், அவை ஒன்றாகத் திருகப்படுகின்றன. அதன் உச்சியில் 'பிரபை' என அழைக்கப்படும் மகுடம் போன்ற அமைப்பு பொருத்தப்படுகிறது. இது பொதுவாக அம்சப் பறவை அல்லது அன்னப்பறவை வடிவத்தில் இருக்கும். விளக்கு ஒரு மேலோட்டமான கிண்ணத்தை வைத்திருக்கும் பெண் உருவ வடிவத்திலோ அல்லது ஒரு மரக் கிளைகளின் வடிவத்திலோ செய்யப்படலாம். இக்குத்துவிளக்கு நான்கு பாகங்கள் உடையது. 

 

நாச்சியார் கோவில் குத்து விளக்கு அரை அடி முதல் 7 அடி உயரம் வரை வடிவமைக்கப்படுகிறது. அகலில் திரி அடங்கி அமைந்து சுடர் ஒரே சீராக எரிவதற்கு ஏதுவாக 'V' வடிவில் குழிந்து முன் முனைத்த ஓர் அழகிய பகுதி உண்டு. பிரபையில் மரபாக அமைந்த ஒர் அன்னமும் உண்டு. எழிலார்ந்த அத்தோற்றம் விளக்குக்கு ஓர் தெய்வீக சோபை தரும். 

ஐந்து முக, ஏழு முக அமைப்பும், நாகாசு வேலைப்பாடும் கொண்டதால் நாச்சியார் கோவில் குத்து விளக்குக்கு வீடுகள் மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தென்னிந்தியாவில் உள்ள கோயில்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படு்ம் குத்து விளக்குகளை தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். நாச்சியார் கோவில் குத்து விளக்கு புவிசார் குறியீடு பெற்றிருப்பதும் தனிச்சிறப்பு.

 

 

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம். இந்த கோவிலில் மஹாவிஷ்ணு ஸ்ரீநிவாச பெருமாளாகவும், மஹாலஷ்மி நாச்சியாராகவும் கோயில் கொண்டுள்ளனர்.கோச் செங்கணான் என்ற சோழ மன்னன் சிவனுக்கு எழுபது கோயில்கள் கட்டினான் என்றும் விஷ்ணுவுக்காகக் கட்டியது திருநறையூரில் உள்ள திருநறையூர் நம்பி திருக்கோவில் மட்டுமே என்றும் அறியப்படுகிறது. சோழ மன்னன் கோச் செங்கணான் கட்டிய திருக்கோயில் என்பதைத் தன் பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார் திருமங்கையாழ்வார்.

இத்திருக்கோயில் கோபுரம் ஐந்து அடுக்கு கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் ஸ்தலபுராணம் பெண்ணுக்கு முன்னுரிமை தந்த பெருமாளின் பெருமையைக் குறிக்கிறது. மஹாலஷ்மி தாயார் திருநறையூரில் வகுளா தேவி நாச்சியாராக வளர்ந்துவந்ததால், மகரிஷி மேதவி விருப்பத்திற் கிணங்க நாச்சியார் கோயிலாக இவ்வூரின் பெயர் மாறியது என்பது புராண கதை.பெருமாள் தலங்கள் அனைத்திலும் பெருமாளுக்கே முன்னுரிமையும், முக்கியத்துவமும் அளிக்கபடுகிறது. ஆனால் இங்கு பெண் தெய்வமான தாயாருக்கே முன்னுரிமை என்பதைக் காட்டும் வண்ணம் இப்பெயர் அமைந்துள்ளது. அது மட்டுமின்றி இங்கு தாயார் முன்னே செல்ல பெருமாள் தாயார் பின்னே சென்று எழுந்தருளுவது, பெண்ணுக்கு முன்னுரிமை தருவதைக் குறிப்பிட்டு உணர்த்துகிறது.

கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளியதை அடுத்து விசேஷ கல் கருடன் மூலவராகவும், உற்சவராகவும் இங்கு காட்சி அளிக்கிறார். இந்த திருத்தலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது கல் கருட சேவை. மார்கழி மற்றும் பங்குனிகளில் மிகவும் சிறப்பாக இருக்கும். கல் கருடன் மொத்தம் நான்கு டன் எடையுடன் இருக்கும். நான்கு டன் எடையுள்ள கருடரை வருடாவருடம் தூக்கி சிறப்பிப்பது இந்த விழா ஆகும். நாகதோஷம், சகல தோஷம், எல்லா விதமான மன நோய்களும் விலக நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடன், சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டு வரலாம்.

 

 

நாச்சியார்கோவில் அருகே கொத்தங்ன்குடி கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மீனாட்சியம்மாள் சமேத மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்.

இக்கோயில் சுமார் 1300 ஆண்டுகள் பழமையானதாகும். இக்கோயிலில் உள்ள ஈசனைக் கிருஷ்ணர், அர்ஜுனர் இவ்விடம் தங்கி இருந்து வழிபட்டார்கள். இக்கோயிலின் முகப்பில் விநாயகர் சிலையும் சிறிய மண்டபத்தில் சண்டிகேசுவரர் அருகிலேயே அழகிய சுதை வேலைப்பாடுகளுடன் கூடிய மகா மண்டபம் காணப்படுகின்றது.

பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று தியான நிலையில் அமர்ந்த கோலத்தில் அனைவருக்கும் குருவான தக்ஷிணாமூர்த்தியும் பக்தர்களுக்கு இங்கு அருள் புரிகின்றார். சுவாமி சன்னதியில் நான்கு புறமும் விநாயகர், மகாவிஷ்ணு, பிரம்மா, துர்கை அம்மன் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். 

 

மேலும் எங்கள் நாச்சியார் கோவில் கிராமத்தில் வீரமாகாளியம்மன் திருக்கோவில் உள்ளது.வீரமாகாளியம்மனை வழிபடும்போது, பழங்களால் அபிஷேகம் செய்தால் சிறந்த பலன் கிடைக்கும்.   வாழைப்பழத்தால் அபிஷேகம் செய்தால், சாகுபடி செய்த பயிர்கள் நல்ல மகசூல் தரும். மாம்பழத்தால் அபிஷேகம் செய்தால்,  குழந்தை பாக்கியம் கிட்டும்.  பலாப்பழத்தால் அபிஷேகம் செய்தால், நினைத்தது நடக்கும்.  மாதுளம்பழத்தால் அபிஷேகம்  செய்தால், கோபம் தீரும்.  எலுமிச்சம்பழத்தால் அபிஷேகம் செய்தால், பகைவர் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கையாக  உள்ளது.  எங்கும் நிறைந்த பரம்பொருளை, தீபச் சுடராகக் கண்டு வழிபடுவதால், வாழ்வில் துன்பம் என்னும் இருளை அகற்றி  இன்பம் என்னும் ஒளி ஏற்றலாம் என்ற சான்றோர் கருத்துப்படி நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் துன்பம் நீங்கி இன்பமுடன் வாழ  வீரமாகாளியம்மன் அருள் புரிவாள் என்பது நம்பிக்கை. 

 

தஞ்சை மாவட்டத்தில் நோய் தீர்க்கும் அம்மன் கோவில்கள் பல இருந்தாலும் அம்மை நோய் தீர்க்கும் முக்கிய ஆலயமாக நாச்சியார்கோவில் ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இதனால் இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

ஆண்டுதோறும் வைகாசி மாதம் அமாவாசைக்குப்பின் வரும் வெள்ளிக்கிழமை இரவில் சமயபுரத்தில் இருந்து ஆகாச மார்க்கமாக நறையூர் என்ற நாச்சியார்கோவிலுக்கு வருகை தந்து வசந்த கால வைபவம் கண்டு, அங்கு தேரோடும் திருவீதியின் ஈசான்ய பாகத்தில் கோவில் கொண்டு, அலங்கார வல்லியாக காட்சி தருகிறார் சர்வசக்தி ஆகாச மாரியம்மன்.

-சிவசக்தி

 சிவகாமிபுரம்