*மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் செம்பனார்க்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிடாரங்கொண்டான் ஊராட்சியைச் சேர்ந்த ஊர் பொன்செய் என்கிற புஞ்சை ஆகும்.
இவ்வூரின் பழமையான பெயர் நனிபள்ளி என்பதாகும்.
இவ்வூர் மயிலாடுதுறை யிலிருந்து பூம்புகார் செல்லும் முற்கால சோழற் பெருவழி ப்பாதையில் காவிரிக்கு தென்புறம் அமைந்த ஊராகும்.
மயிலாடுதுறையிலிருந்து பனிரெண்டாவது கிலோமீட்டரில் அமைந்துள்ளது.
இவ்வூருக்கு மயிலாடுதுறை யிலிருந்து தரங்கம்பாடி சாலை வழியாக வந்தால் செம்பனார்கோவிலில் இருந்து வடகிழக்கே நான்காவது கிலோமீட்டரில் வந்தடையலாம்.
இவ்வூர் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கும்..
பூம்புகார் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
பண்டைய கால சோழதலைநகராகவும்..தலைசிறந்த துறைமுகப்பட்டிணமாகவும் விளங்கிய காவிரிப்பூம்பட்டிணம் எனும்(தற்போதைய பூம்புகார்)நகரின் மேற்கு எல்லையாகவும் திகழ்ந்த ஊர் எனும் சிறப்பையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
சைவ நெறியில் முதல் ஞானாசிரியன் என்று போற்றப்படுகிற திருஞானசம்பந்தரின் தாயார் பகவதியம்மையார் பிறந்த ஊர் இதுவாகும்.
சம்பந்தர் தனது மூன்றாம் வயதில் சிவஞானம் பெற்றதையும்...
சிவபெருமான் அருளால் திருகோலக்கா திருத்தலத்தில் பொற்றாளம் பெற்றதையும்..
கேள்விப்பட்ட திருநனிபள்ளி வாழ் அந்தணர்கள் சம்பந்தர் தங்கள் ஊருக்கு எழுந்தருள வேண்டும் என கோரினர்.
அதற்கு இசைந்த திருஞானசம்பந்தர் தன் திருவடி நோக நனிபள்ளி நோக்கி நடந்தார்.கால்கள் நோக பிள்ளை நடப்பதைக் கண்ட.அவரது தந்தை சிவபாத இருதயர் ஞானசம்பந்தரை தனது தோளில் தூக்கிக்கொண்டார்.
திருநனிபள்ளியை நெருங்கிய போது தந்தையார் இதுதான் நனிபள்ளி தலம் என கூறவும்.."காரைகள் கூகை முல்லை களவாக ஈகை'எனத் தொடங்கும் பதிகத்தைப்பாடிக்
கொண்டே நனிபள்ளி ஆலயத்தை அடைந்து இறைவனை போற்றினார் சம்பந்தர்.
இப்படி பதிகம் பாடி பாலை நிலமாக இருந்த நனிபள்ளியை நெய்தல் நிலமாக மாற்றி..பின்னர் மருத நிலமாக பொன்விளையும் பூமியாக அருளியதால் அதுமுதல் நனிபள்ளி பொன்செய் என அழைக்கப்பட்டு இப்போது பேச்சு வழக்கில் புஞ்சை என வழங்கிவருகிறது.
இவ்வூர் சிவாலயமானது அருள்மிகு நற்றுணையப்பர் திருக்கோவில் .மூலவர் நற்றுணையப்பர்;
தாயார்கள்:-பர்வத ராஜபுத்திரி மற்றும் மலையான்மடந்தை.
அம்மன்கள் இருவர் அருள்பாலிப்பது போல தலவிருட்சங்களும் இரண்டாகவே இருக்கின்றன..
செண்பகம் மற்றும் பின்னமரம்.
தீர்த்தம்..சொர்ணதீர்த்தம்...
இக்கோவிலில் ஆதித்த சோழன்...பராந்தக சோழன்..முதல் நாயக்கமன்னர்கள்..
இரண்டாம் சரபோஜி வரை பல மன்னர்களின் திருப்பணிக்கொடை கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
காவிரிப்பூம்பட்டிணம் சோழ தலைநகராக சிறப்புற்று விளங்கிய போதே இக்கோவிலும் ஏற்பட்டிருக்க வேண்டும் எனவும்...இவ்வூருக்கு அருகிலேயே முடி திருச்சம்பள்ளி ..முடிகொண்ட நல்லூர் எனும் ஊர்கள் இருக்கின்றன.இங்கே தான் சோழ இளவரசர்களுக்கு வீரதீரப்பயிற்சிகள் அளிக்கப்பட்டு முடிசூடும் வைபவம் நடைபெற்று வந்ததாகவும்..எனவே சோழ மன்னர்களின் நேரடி வழிபாட்டில் இக்கோவில் இருந்திருக்கலாம் என்பதும் ஆய்வாளர்களின் கூற்றாக இருக்கிறது.
இக்கோவில் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 43வது தலமாகும்.
இக்கோவிலில் இறைவன் சுயம்புலிங்கமாக அருள்பாளிக்கிறார்.
ஆண்டுதோறும் சித்திரை 7-13 வரை சூரியனின் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது படுவது சிறப்பாகும்.
இத்தல இறைவன் பாலை நிலத்தை விளைநிலமாக்கி அருளியதால்..இங்கு வழிபட்டு சென்று விவசாயத்தில் ஈடுபட்டால் நல்ல விளைச்சல் பெற்று மகிழ்வார்கள் என்பது நம்பிக்கை.
அப்பர்..சுந்தரர்..சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடப்பெற்ற தலங்களில் ஒன்று என்ற சிறப்பையும் இத்தலம் பெற்றுள்ளது.
காவிரிநதி இவ்வூர் எல்லையில் கிழக்குமுகமாக வந்து மேற்கு முகமாக திரும்பிச் செல்கிறது..இதனை பஸ்வமாங்கினி என்பர்.
இன்று இவ்வூர் புஞ்சை எனும் பெயருக்கு ஏற்ப தென்னந்தோப்பு கள்..மாந்தோப்புகள்..
என புஞ்சைத்தோட்டங்கள் மிகுந்து காணப்படுகின்றன.
இவ்வூரின் மேற்கு எல்லையில் பெருமாள் கோவிலும்..
மையப்பகுதியில் செண்டாடும் ஐயனார் கோவிலும்..
அதனருகில் மாரியம்மன் ஆலயம்..சிவாலய குளத்திற்கு மேல்புறம் ஆஞ்சநேயர் கோவில்...சப்தமாதர் கோவில் ஆகியவையும் முக்கியமான வழிபாட்டிடங்களாக திகழ்கின்றன.
இங்கு ஆர்.எஸ் உதவிபெறும் நடுநிலைப்பள்ளி கல்விச்சேவை அளிக்கிறது.
திருமணக்கூடம்.. பல்பொருள் அங்காடி ...கடைவீதி என பழமையும் நவீனமும் இரண்டறக்கலந்த சிற்றூராகவே திகழ்கிறது புஞ்சை.
புஞ்சையின் மண்ணின் மைந்தர்கள் என நினைவுகூறத்தக்கவர்கள் கூத்துப்பட்டறை
ந. முத்துசாமி மற்றும் மு.நடேஷ் ஆகும்...தமிழர்களின் தொண்மைக்
கலையான கூத்தை நாடகத்துடன் இணைத்து மேடையேற்றியவர்.
'கூத்துப்பட்டறை 'என்கிற நவீன நாடகத்திற்கான அமைப்பை 1978-ல் உருவாக்கி..ஏராளமான நடிகர்களை பயிற்றுவித்தார்.
'பத்மபநீ' விருது மற்றும் சங்கீத நாடக அகாதமி விருது ஆகியவற்றை பெற்ற இவர் நல்ல எழுத்தாளரும் ஆவார்.ஏராளமான நாடகங்கள்..
சிறுகதைகளை எழுதியுள்ளார்.
நாற்காலிக்காரர்..
அப்பாவும் பிள்ளையும்..சுவரொட்டிகள் ஆகியவை முக்கியமான நாடகங்கள்.நீர்மை..ந.முத்துசாமி சிறுகதைகள் ஆகிய தொகுப்புகள் வெளியாகியுள்ளன.
இவரது மூத்த மகனும் பிரபல நவீன ஓவியர்..மற்றும் நாடக இயக்குனர் மு.நடேஷ் இவர்கள் இருவருமே தற்போது உயிருடன் இல்லை.ஆனாலும் இவர்களது படைப்புகள் காலம்கடந்தும் புஞ்சையின் புகழை..புராதனத்தை நினைவூட்டிக்கொண்டே இருக்கும் என்பதே உண்மை.*
-----------------
அரும்பூர்.க.குமாரகுரு,மயிலாடுதுறை.