எங்கள் ஊர் யா.ஒத்தக்கடை என்கிற யானைமலை ஒத்தக்கடை மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துடன் இணைந்திருக்கும் ஒரு ஊராட்சி ஆகும். இங்கு நரசிங்கம் யோகநரசிங்கப் பெருமாள் கோயில் மற்றும் சமண சமய தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் உள்ளது.இவ்வூரானது,மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவிலும்,மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
மதுரையின் கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இந்த ஊரில் யானைமலை என்ற மலை உள்ளது. யானை மலையின் நீளம் சுமார் 4 கி.மீ, அதாவது 4000 மீட்டர் நீளம்,1200 மீட்டர் அகலம், 400 மீட்டர் உயரம் கொண்டது. இம்மலையை சற்று தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு யானை படுத்திருப்பது போல தோன்றுவதால் இம்மலை யானை மலை என பெயர் பெற்றுள்ளது. மலையை நரசிங்கமங்கலம் என்றும் அழைப்பர்.இந்த மலையின் மேலும் அடிவாரத்திலும் பழங்கால சமணர் குகைகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளார்கள். இங்குள்ள மக்களால் அது பஞ்ச பாண்டவர் படுக்கை என்றும் அழைக்கப்படுகிறது. ஒத்தக்கடையில் இருந்து ரோசா நிற கருங்கல் என்று அழைக்கப்படும் கல் வகை இந்த மலையில் இருந்து அதிகம் பெறப்படுகிறது. இந்த ரோசா நிற கருங்கல்லானது மதுரை மாவட்டத்திற்கே உரிய சிறப்பாகும்.யானை மலையின் உச்சியில் குகை தளம் காணப்படுகிறது. இக்குகை தளத்தில் சமணர் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குகை தளத்தில் பொ.ஊ. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டுகள் காணப்படுகிறது. இக்கல்வெட்டில் " இவ குன்றத்தூ உறையுள் பா தந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரிட்ட காயிபன்" என்னும் இரண்டு வரிவாசகம் இடம் பெற்றுள்ளது. "இவ" என்பது "இபம்" என்கிற வடமொழிச் சொல்லின் மறு வடிவம். இதன் பொருள் "யானை" என்பதாகும். குன்றம் என்றால் மலை. இதில் "இவ குன்றம்" என்றால் யானைமலை என்று பொருள். பா' என்றால் படுக்கை. இக்கல்வெட்டில் உள்ள வரிகள் "தங்குவதற்கான கற்படுக்கை" என பொருள் படும். "ஏரிஆரிதன்", "அத்துவாயி அரட்டக்காயிபன்" ஆகிய இரண்டு சமண துறவியர் பெயர் காணப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செழித்துக்கிடந்த இப்பகுதியில், சமணத் துறவியர் இருவரும் மலை உச்சியில் கற்படுக்கை அமைத்து தவம் மேற்கொண்டிருந்தனர் என்பது இக்கல்வெட்டு சொல்லும் செய்தியாகும்.
ஒத்தக்கடையில் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. ஒத்தக்கடைக்கு அருகில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. மேலும் இங்கு பல தனியார் பள்ளிகளும் இயங்கி வருகின்றன.
கி. பி. 9 - 10 நூற்றாண்டுகளில், சமண சமயத் துறவியான அச்சணந்தி என்பவரால், தீர்த்தங்கரர்களில் மகாவீரர், பார்சுநாதர் மற்றும் பாகுபலி சிற்பங்கள் யானைமலையில் செதுக்கப்பட்டது. இது தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்படுகிறது
பொ.ஊ. 770 ஆம் நூற்றாண்டில் மதுரையை அரசாண்டவன் மாறஞ்சடையன் பராந்தக நெடுஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னன் ஆவார். மூவேந்த மங்கலப் பேரதையன் ஆகிய மாறன்காரி கலிக்குடா வைத்தியன் என்பவர் பாண்டிய மன்னனுடைய மந்திரியாக பதவி வகித்தார். இவர் யானை மலைக்கு வட மேற்கே நரசிங்கப் பெருமாளுக்கு குடை வரை கோவில் ஒன்றை கட்ட தீர்மானித்து, பூர்வாங்க வேலைகளை தொடங்கினார். குடை வரை கோவில் நிறைவு பெரும் தருவாயில் இவர் நோய்வாய் பட்டு இறந்துபோகவே, இவருடைய தம்பி பாண்டா மங்கல விசைய அதையன் ஆகிய மாறன் எயினன் என்னும் பெயர் கொண்டவர் மந்திரியாக பதவி ஏற்று, இக்கோவில் திருப்பணியை செய்து குடமுழுக்கும் செய்தார் என இங்கு காணப்படும் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. .இதனை தொடர்ந்து யானைமலையை நரசிங்கமங்கலம் என அழைத்தனர். இக் குடைவரைக் கோயிலில் கிரந்த, வட்டெழுத்து, தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் முற்காலப் பாண்டியர், சோழர், சோழ பாண்டியர், பிற்காலப் பாண்டியர், விஜயநகர மன்னர் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணிகள் பல இக்கோயிலுக்குச் செய்திருக்கின்றனர் என் கூறுகிறது.
யானைமலையில் முருகன் பெருமானுக்கு லாடன் கோயில் எனும் குடைவரை கோவில் உள்ளது. இங்கு காணப்படும் தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது ஆகும். இக்கல்வெட்டில் ""நம்பிரான் பட்டசோமாசி பரிவிராஜகர்"" என்பவர் வட்டகுறிச்சி என்ற ஊரை சேர்ந்த இவர் இக்குடைவரை கோயிலை புதுப்பித்ததாக இக்கல்வெட்டு கூறுகிறது.
• பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டில் யானைமலையில் சமணப்பள்ளி இருந்ததாக திருஞானசம்பந்தர் எழுதிய மதுரைப்பதிகம் என்னும் நூல் கூறுகிறது.
• மதுரையை தாக்க வந்த யானையை சொக்கேசர் நரசிங்கர் கணை தொடுத்துக் கட்டிப் போட்டிருக்கிறார் என பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில் யானைமலையை பற்றிய ஒரு குறிப்பு உள்ளது.