கடந்த மூன்று வருடங்களாக தன்னைக் காதலித்து விட்டு தன்னுடன் ஊர் உலகமெல்லாம் சுற்றி விட்டு, இன்று வேறொருத்தி கழுத்தில் தாலி கட்டத் தயாரான தன் காதலன் சுரேஷின் முகத்திரையை திருமண மண்டபத்தில் அத்தனை பேர் எதிரும் வைத்துக் கிழித்த தீர வேண்டும்!.. என்கிற ஆத்திரத்தில் விமலா அந்தத் திருமண மண்டபத்தை நோக்கி பறந்தாள்.
முகூர்த்தத்திற்கு இன்னும் சற்று நேரம் இருப்பதால் நேரே மணமகள் அறைக்குச் சென்று, அவளிடம் சுரேஷைப் பற்றிச் சொல்லி விட, மணமகள் அறையை தேடினாள் விமலா.
அப்போது பால்கனியில் அந்த சுரேஷ் தன் நண்பன் முத்துவுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவள், அவர்கள் பேச்சில் தன் பெயரும் அடிபடுவதைக் கேட்டு ஒளிந்து நின்று கூர்ந்து கவனிக்கலானாள்.
"டேய் சுரேஷ் நீ செய்யறது உனக்கே நியாயமாப்படுதா?... விமலாவும் நீயும் எவ்வளவு அன்னியோன்யமா... உயிருக்குயிராக் காதலிச்சீங்க!.. இப்ப திடீர்னு மாமா பொண்ணு மைதிலிக்கு தாலி கட்ட துணிஞ்சிருக்கியே... இது தப்பாவே படலையாடா உனக்கு?" முத்து கேட்க.
"வேண்டாம் முத்து... நான் ஏற்கனவே நொந்து போயிருக்கேன்... என்னை ஏன்டா மேலும் காயப்படுத்துறே?" அழுது விடுபவன் போல் சொன்னான் சுரேஷ்.
"ப்ச்...சும்மா நடிக்காதடா!"
"நடிக்கலைடா... என் நிலைமை அப்படி!"
"என்னடா பெரிய நிலைமை?"
"பெத்த அம்மாவையும் அப்பாவையும் ஒரு விபத்துல ஒருசேர இழந்தேன்...அப்ப எனக்கு வயசு ஆறு! உறவுக்காரர்கள் எல்லோரும் என்னை ஒதுக்கித் தள்ளிவிட அனாதையா நடுரோட்டில் நின்னேன்!.. அந்தச் சமயத்தில் என்னை கூட்டிட்டு வந்து தன்னோட குடும்பத்தில் ஒருத்தனா நினைச்சு... வளர்த்து... படிக்க வெச்சு..
இன்னைக்கு ஒரு பெரிய கம்பெனில உயர் பதவியில என்னை உட்கார வெச்சு அழகு பார்த்தவர் என் தாய் மாமன் அரசு"
'சரி அதுக்கென்ன இப்ப?"
"இப்ப அவர் ரெண்டு கிட்னியும் ஃபெயிலியர் ஆகி... சாவுக்காக காத்திருக்கிறார்... அதுக்கு முன்னாடி தன்னோட மகளோட கல்யாணத்தை நேரில் பார்க்கணும்னு விருப்பப்படறார்"
"அப்ப நீ என்ன செஞ்சிருக்கணும்?.. உடனே ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்து அவளுக்குக் கல்யாணம் செஞ்சு... அதை அவர் கண்ணால பார்க்க வெச்சிருக்கணும்!"
"அதுக்குத்தான் முயற்சி பண்ணினேன்.... பட்...அது நடக்கலை!"
"காரணம்?"
"அவளைக் கல்யாணம் பண்ணிக்க யாருமே முன்வரவில்லை!"
"அதான் ஏன்னு கேட்கறேன்?"
"ஏன்னா... அவள் ஊமை!... படிக்காதவ"
முத்து நெற்றியைச் சுருக்க.
'அப்படிப்பட்ட ஒருத்தியை யாரும் கல்யாணம் பண்ணிக்க முன் வராததாலே என்னை வளர்த்து... படிக்க வெச்சு... ஆளாக்கிய என் மாமனுக்கு நான் செய்யும் பிரதியுபகாரமா... என் காதலைத் தியாகம் பண்ணிட்டு... அவருடைய மகளை ஏத்துக்கத் தயாரானேன்!... இப்ப அவர் எவ்வளவு சந்தோஷமா இருக்கிறார் தெரியுமா?".
ஒளிந்திருந்து அதைக் கேட்ட விமலா, நெகிழ்ந்து போனாள். "சுரேஷ் நீதாண்டா உண்மையிலேயே உத்தமன்... நீ என்னைக் கட்டொயிருந்தா எவ்வளவு சந்தோஷப்படுவேனோ... அதை விட இப்ப சந்தோஷப் படறேன்" என்று தனக்குள் சொல்லிக்/கொண்டு கல்யாண மண்டபத்தை விட்டு வெளியேறினாள் விமலா.
-முகில் தினகரன்,
கோயம்புத்தூர்.