திருமலை:
திருப்பதி ஏழுமலையானுக்கு மைசூரு அரச பரம்பரையை சேர்ந்த ராஜமாதா பிரமோதா தேவி 100 கிலோ எடையில் 2 அகண்ட வெள்ளி குத்துவிளக்குகளை காணிக்கையாக வழங்கினார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் கர்ப்பகிரகத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் மைசூரு மகாராஜா குடும்பத்தினர் மிகப்பெரிய (அகண்ட) வெள்ளி குத்துவிளக்குகளை காணிக்கையாக அளித்துள்ளனர். இந்த விளக்குகள் தான் சுவாமியின் இருபுறமும் எப்போதும் சுடர்விட்டு எரிந்துகொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், இவ்விளக்குகள் வழங்கி 300 ஆண்டுகள் ஆகிவிட்டதால், அதே மைசூரு மகாராஜா பரம்பரையை சேர்ந்த ராஜமாதா பிரமோதா தேவி தனது குடும்பத்தாருடன் நேற்று திருமலைக்கு வந்து 100 கிலோ எடையில் 2 வெள்ளி அகண்ட குத்துவிளக்குகளை சுவாமிக்கு காணிக்கையாக வழங்கினார்.
தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, இவற்றை பெற்றுக்கொண்டார். தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய்ய சவுத்ரி மற்றும் மைசூரு மகாராஜா குடும்ப வாரிசுகள் அப்போது உடனிருந்தனர்.