tamilnadu epaper

ஐநூறு ரூபாய் நோட்டு

ஐநூறு ரூபாய் நோட்டு


அன்றைய பொழுது முழுவதும் வியாபாரம் இல்லாமல் கதிரேசன் மிகவும் வேதனையாக இருந்தார். 


இன்று கரன்ட் பில் கட்டுவதற்கு கடைசி நாள். அதை ஒருவரிடம் கைமாத்து வாங்கி கட்டிவிட்டார். இப்போது அவருக்கு எப்படிக் கொடுப்பது என ஒரே யோசனை 


கதிரேசன் கடை சின்னக் கடை தான். வீட்டிலிருந்து கிளம்பும் போதே அவர்

மனைவி, 

" என்னங்க! இன்னக்கி ஸ்கூல் ஃபீஸ் கட்டணும். 


"அப்புறம் நம்ம கோவிலில் நன்கொடை கொடுக்கணும்!"


அவர்கள் கடையில் இல்லாத சில சாமான்களை ஒரு லிஸ்ட் போட்டு கதிரேசன்

கையில் திணித்தாள்! 


இதெல்லாம் கடையில் ஈ

ஓட்டிக் கொண்டிருக்கும்

கதிரேசன் கண்களில்

வந்து வந்து போய்

பயமுறுத்தின. 


பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளும், டி. மார்ட்டுகளும் வந்து எல்லோரும் அங்கே படையெடுத்துச் செல்ல

கதிரேசன் போன்ற சிறு

கடைக்காரர்கள் படுத்துத் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். 


வழக்கமாக இரவு பத்து மணி வரை திறந்து முதலுக்கு மோசமில்லாமல் வியாபாரம் ஒனறிரண்டு நடக்கும். இன்று அதுவும் இல்லாததால் வெறுத்துப் போய் ஒன்பது மணிக்கு முன்னதாகவே கடையை

அடைத்து விடலாம் என்கிற மனநிலையில் இருக்கும் போது பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் சிறு

பேப்பர் பேனாவுமாக ஒரு கையிலும் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளோடு இன்னொரு கையிலுமாக கதிரேசன் கடைக்கு வந்தான். 


ஐநூறு ரூபாய் தாள்களைப் பார்த்ததும்

கதிரேசன் பரவசமானான். 


"தம்பி! உனக்கு என்ன வேணும்?" பல தேவைகள் பூர்த்தியாகிவிடும் என்ற

நம்பிக்கையோடும், ஆர்வத்தோடும் கேட்டார். 


"அங்கிள்! உங்கள் கடை பெயர் என்ன?"

என்று கேட்டான் அந்த சிறுவன். 


இதுவரைக்கும் நம்ம கடை பெயரை யாரும் கேட்டதில்லையே! ஒருவேளை நம்ம கடை பெயரைச் சொல்லி அனுப்பி இருப்பார்கள்! 

அந்த அளவுக்கு ஃபேமஸ் ஆகிட்டோம் போல' என்று

உள்ளுக்குள் ஆனந்தப் பட்டவாறே, 


"கதிரேசன் கடை தம்பி!" என்றார் பரபரப்போடு! 

உடனே அந்தச் சிறுவன்

தான் கொண்டு வந்த பேப்பரில் கடைசியாக எழுதிக்கொண்டான். 


"உனக்கு என்ன வேணும் தம்பி! இப்ப சொல்லுப்பா!" என்றார். 


கதிரேசனின் பரபரப்பைப் பார்த்து மிரட்சியான சிறுவன், 

"ஒண்ணும் வேணாம் அங்கிள்! 

எனக்கு இந்த இரண்டு ஐநூறு ரூபாய்க்கும் சில்லறை வேணும்!" என்றான். 


யாரோ பெரிய பாறாங்கல்லை தூக்கித் தன் தலையில் போட்டது போல இருந்தது கதிரேசனுக்கு! 


" சரி! அதுக்கு எதற்காக கடை பெயரெல்லாம் கேட்ட? ஒரு லிஸ்ட் வேற வச்சிருந்த? என அழாத குறையாகக் கேட்டார். 


"அதுவா? இதுவரைக்கும் 

ஐந்து கடைகளில் சில்லறை கேட்டேன். யாரிடமும் இல்லை. நீங்கள் ஆறாவது கடை! 

நான் சில்லறை இல்லை

எனச் சொன்னால் எங்க அப்பா நம்ப மாட்டார். 

திருப்பிக் கொண்டு 'எந்தெந்த கடையில் கேட்ட' என்று கேட்பார். 

அதற்குத்தான் ஆதாரத்தோடு வந்திருக்கிறேன்!"

என்று அவன் பேச, பேச

தலை சுற்றி மயக்கமே

வந்து அப்படியே உட்கார்ந்து விட்டார். 


சில்லறை இருக்குதா? இல்லையா? எனக் குழப்பத்தில் சிறுவன் நின்றிருந்தான். 

வியாபாரமும் இல்லாமல் நேரமும் வீணான வருத்தத்தில்

கதிரேசன் அமர்ந்திருந்தார். 


பெரும்பாலான சில்லறை வியாபாரிகளின் இன்றைய நிலை இதுதான். 



-பிரபாகர்சுப்பையா

மதுரை 12.