பிரதீப்பின் வீட்டுக்கு எப்போது சென்றாலும் சேரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி சுமதி படித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
வீட்டுக்கு உறவினர்கள் யார் வந்தாலும் சரி பிரதீப்பின் நண்பர்கள் யாராவது திடீரென வந்தாலும் சரி அவர்களை எல்லாம் அவள் கண்டு கொள்ளவே மாட்டாள.புத்தகத்தில் மூழ்கினால் மூழ்கியவள் தான் .
இதுவே பல பேருக்கு அவள் மீது ஆத்திரம் வரக் காரணமாக இருந்தது. பிரதீபுக்கும் அவளுக்கும் திருமணம் ஆகி மூன்று மாதங்கள் கூட முடியவில்லை. அதற்குள் யாரையும் மதிக்க மாட்டேன் என்கிறாள் என்று அனைவருமே அவள் மீது கோபப்பட்டனர்.
உறவினர்கள் சிலர் பிரதீப்பின் அலுவலகத்துக்கே சென்று அவனிடம் நேரடியாகவே குறைபட்டனர். பிரதீப்பால் அவர்கள் சொல்வதை நம்ப முடியவில்லை .
"நீங்க உண்மையா தான் சொல்றீங்களா? அவ எனக்கு ஒரு நல்ல மனைவியா தான் நடந்துக்குறா. ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்குப் போனா சுமதி என் மீது காட்ற அன்பும் அக்கறையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் வீட்டில் இருக்கும் எல்லா நேரமும் என்னையும் என் அம்மாவையும் நல்லா கவனிச்சுக்கறா.அவளை குறை சொல்லவே முடியாது "என்று பிரதீப் கூறியும் அவர்கள் கேட்பதாக இல்லை.
"பிரதீப் ! நீயே ஒரு நாளைக்கு திடீர்னு வீட்டுக்கு போய்ப் பாரு. உனக்கே உண்மை புரியும் "என்று அவர்கள் சொன்னதை செய்து பார்த்து விட எண்ணி ஒரு மதிய
நேரத்தில் வீட்டுக்கு சென்றான்.
அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை .அம்மா வீட்டு வேலைகள் செய்து கொண்டு இருக்க சுமதி சேரில் அமர்ந்து 'ஹாயாக ' புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள்.
"சுமதி இது உனக்கே நல்லா இருக்கா? என் அம்மாவை இப்படி கொடுமைப்படுத்த உனக்கு எப்படி மனசு வந்தது? " என்று பெருங் குரல் எடுத்து கத்தியவனை
அம்மா இடைமறித்து பேச ஆரம்பித்தாள்.
"டேய் பிரதீப்! சுமதி ரொம்ப நல்லவடா.
எனக்கு புத்தகம் படிக்கிறதுன்னா உயிர்னு உனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். கொஞ்ச நாளாவே எனது கண் பார்வை ரொம்ப மங்கலா தெரியுதுங்கிறதால என்னால படிக்க ரொம்ப சிரமமா இருக்கு.
அதனால சுமதி கிட்ட நான் தான்
நான் படிக்க வேண்டிய அத்தனை புத்தகங்களையும் கொடுத்து படிக்க சொன்னேன். வீட்டு வேலைகள் எல்லாம் முடிஞ்ச பின்னாடி அதில் உள்ள முக்கியமான விஷயங்களை ஜூஸ் மாதிரி பிழிந்து சொல்லுவா.சில புத்தகங்களை அப்படியே படித்தும் காண்பிப்பா.
இதைப் போய் யாரோ உன் கிட்ட தவறா சொல்லி இருக்காங்க ."
"இனிமேலாவது மத்தவங்க சொல்றதை எல்லாம் அப்படியே நம்பிடாதே." என்ற அம்மாவையும் சுமதியையும் பெருமை பொங்க பார்த்தான் பிரதீப்.
-மு.மதிவாணன்
குபேந்திரன் நகர்
அரூர் 636903