tamilnadu epaper

கண்ணைத் திறந்தது யார்?

கண்ணைத் திறந்தது யார்?


ஆர்டிஸ்ட் சாமிக்கு தனிப்பட்ட எந்த சாமி மேலயும் பக்தி இல்ல. ஆனா அவன் நாஸ்திகன்னும் சொல்லிவிட முடியாது. தெருவுல சாமி புறப்பாடு வந்தா கன்னத்தில போட்டுப்பான். மந்திரம், சுலோகம் பக்தி அதெல்லாம் எதுவும் தெரியாது. அவன் ஒரு ஜடம்.

ஏன்னா அவன் வளந்த சூழல் அப்படி. வறுமையான குடும்பம் . அப்பா எந்த வேலையிலும் மூணு மாசம் நிலைச்சு இருக்க மாட்டாரு. கோவம் சாஸ்தி. யாராவது ஏதும் சொல்லிட்டாங்கன்னா ஒதறிப் போட்டுட்டு வந்துடுவாரு. 

அம்மா தான் களை எடுக்குறதிலிருந்து, அறுவடை வரைக்கும் அத்தனை வேலையும் செஞ்சு அவனை வளத்தா. 


சாமிக்கு படிப்பு அத்தனை சுத்தம் இல்லை, கரித்துண்டு, ஸ்கூல் சாக் பீசு எதையாவது வச்சு எப்பவும் ரோட்டுல சுவத்துல 

கிறுக்கிட்டே இருப்பான். அப்பா நேர் இல்ல. அம்மாவும் பிழைப்புக்காக பொழுதன்னிக்கும் வெளிலே தான். 


சாமியின் கையில அருமையான திறமை வளந்தது. திருவிழாம் போதெல்லாம் தெருவில ஆனை, குதிரை, தேரு எல்லாம் கோலம் போல அழகழகா வரைவான். மண்டபத்தில சாமி படம் லாம் வரைவான். ஊரே பாத்து அசந்து போகும். 

அப்படி ...சுத்துப் பட்ட ஊர் கோவில் அத்தனையிலும் வரையற ஆளாகவே சாமி ஆனான். 

பஞ்சாயத்து தலைவரு தேர்தல் சமயத்துல இவனை இழுத்துக் கிட்டாரு. அப்போ தலைவர் படம், தேர்தல் சின்னமெல்லாம் வரைய ...வயத்துப் பாட்டுக்கு கொஞ்சம் வருமானமும் கெடைச்சுச்சு. 


குடிச்சு குடிச்சே அப்பன் காரனும் போய் சேந்தான். 

இப்போ, வயசாயிடுச்சு அம்மா கொஞ்சம் முடியுமா கிடக்கா. முந்தி போல வெள்ளன எழுந்து இவனுக்கு இட்டிலி சுட்டுக் கொடுத்துட்டு வேலைக்குப் போவா. இப்போ நடக்க முடியாம .

ஆனா அம்மா மேல பாசம் வச்சவன் அவளை அக்கறையா பத்துக்க தான் செய்யுறான். 

காலு வலி கையி வலின்னு முடக்கத்தான் இலையை கசாயம் வச்சுக் குடிக்குறா. ஆர் ஆரோ சொன்ன தென்ன மரக்குடி தைலம் அது இதுனு என்னென்னவோ தடவுறா.எதுவும் குணம் தெரிலை.


ஆஸ்பத்திரிக்கு இட்டுனு போலாம்னா துட்டு எக்கச் சக்கமா வாங்குது. கையிலே காசு பத்தல. திணறினான். அரசியல் பக்கம் வேலை செஞ்சா டீ, மத்த... பானங்க ஓசில கெடைக்கும். துட்டு மாத்திரம் நேரத்துக்கு கொடுக்க மாட்டாங்க. அப்பா குடியினாலேயே நாசமானதக் கண்ணெதிருல பாத்ததுனால சாமி அதை

திரும்பிக் கூட பாக்கமாட்டான். 


அம்மா தரையிலே ஒக்காந்து பாத்ததில்லே அவன் . எப்போதும் ஓடியாடி வெல செய்யுறவ அவ. இப்போ கெடப்பதை தாங்கிக்க முடியல அவனால.அவனுக்கும் வரையறதைத் தவிர வேற வேலை எதும் தெரியாது. துக்கத்துல தனியாளா தவிச்சான். மவன் கண்ணுல தண்ணி வர்றதைப் பார்த்து,

அம்மா சொன்னா "சாமி படமெல்லாம் வரையுறே, அந்த ஆத்தாளை போய்க் கும்பிடுடா. கருப்பசாமி கிட்ட போயி வேண்டிக்கடா, ஒனக்கு நல்ல வழி பிறக்கும்".

அம்மாவோட அறிவுரை, திட்டு, அதட்டல், புலம்பல் எதுவுமே இவனை அசைக்கலை. அம்மாவின் வலி, அழுகை இது மட்டும் தான் அவனை துடிக்க வச்சது.


போன வாரம் எதோ சாமியாரு போல படத்தை கொண்டாந்து கொடுத்து இதை அந்த சுவத்துல ஆறடிக்கு நாலடி சைஸ் ல வரையச் சொல்லி சொன்னாங்க.


பெயிண்ட் எல்லாம் வங்குறதுக்காக ஒரு ஆயிரம் ரூபாய் அட்வன்சாக கொடுத்தாக.

பெயின்டல்லாம் கடையில கணக்கு சொல்லி வாங்கிட்டு அம்மாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக் கிட்டு போனான்.


இங்கிலீசு வைத்தியர் மருந்து சத்துமாத்திரை, பிசுக்கு மருந்து எல்லாம் கொடுத்திருக்காரு. இப்போ ஒருவாரமா

அம்மா முனகல் குறைஞ்சி கிட்டு வருது.


சாமி அந்தப் படம் வரையறதில முழுசா மூழ்கினான். திடீர்னு பின்னேருந்து ஒரு குரல்.. ஏம்பா போன வாரம்லாம் ஆளையே காணலை. குரல்ல கம்பீரத்தோடு, மிரட்டலும் கலந்து..


காசை வாங்கிட்டு ஒடிடுவேனா ஐயா.அம்மாக்கு ரொம்ப ஒடம்பு முடியல. ஆஸ்பத்திரிக்கும் வூட்டுக்கும் அல்லாடிக் கிட்டு இருந்தேன் அதான். 

படம் பாதிக்கு மேலே முக்கால் வாசி முடிந்து இருந்தது பார்த்தார். எதிரில் சுவாமிகள் உக்கார்ந்து இருப்பதைப் போலவே தத்ரூபமாக இருந்தது. இன்னும் முகம் மட்டும் முழுமை பெறவில்லை. 

நெத்தியிலும், ஒடம்பிலும் பட்டையாக விபூதி. சந்தனக் குங்கும பொட்டுடன்

இருந்த பெரியவர் இரண்டு கைகளையும் எடுத்துக் கும்பிட்டார். இவனுக்கு கொஞ்சம் விபூதியைக் நெற்றியில் இட்டுவிட்டார்.


இந்தச் சூழலில் இவன் படத்தை இன்னிக்கு பாக்க அவனுக்கும் ஏதோ ஒரு சிலிர்ப்பு உண்டானது. வந்த பெரியவர் இந்தாப்பா இன்னும் கொஞ்சம் அட்வான்ஸ் வச்சுக்கோன்னு 2000/. ரூபாய் கொடுத்தார். 

அம்மாவை மேலத் தெருல இருக்கிற சங்கரா ஆஸ்பிடல்ல கொண்டு போய் காட்டு.அங்கே வைத்தியம் பாரு.நல்லா ஆயிடும் என்றார் .

சீக்கிரம் சாமி படத்தை முடிச்சுடரேன் யா.

இந்த வெள்ளிக் கிழமை கண்ணைத் தொறந்துடறேன். நீங்க வந்து பாருங்க என்றான். 


அம்மாவை சங்கரா ஆஸ்பத்திரிக்கு கூட்டிக் கொண்டு போனான். இரண்டு நாளுல 

அம்மா தெம்பாக எழுந்து உக்காந்தா. 


வெள்ளிக் கிழமை பூ, பழம், கற்பூரம் மற்ற சாமாங்க எல்லாம் தயாராகக் கொண்டு வந்து இருந்தார் அந்த பெரியவர்.  


ஆர்டிஸ்ட் சாமி கண்ணை மூடிக் கையிரண்டையும் கூப்பி வணங்கி அந்த படத்தின் முன்னே அப்படியே நிலத்துல விழுந்து வணங்கினான். கண்ணை மறைக்கிற கண்ணீர் சொட்டுக்களை தொடைத்து விட்டு..... பிரஷை எடுத்து பய பக்தியோடு சங்கரரின் கண்களைத் திறந்தான். பெரியவர் கற்பூரம் காட்டி பூ தூவி வணங்கினார்.

கண்ணு ரொம்ப அற்புதமா இருக்குப்பா ..பரவசப் பட்டு பேசினார்.

கண்ணைத் திறந்தது யார்?

ஆர்டிஸ்ட் சாமியா? இல்லை

அத்வைத சாமி தான்.

அன்னியிலிருந்து தெனமும் காலைல குளிச்சுட்டு...இங்கு வந்து முன்னால ஒக்காந்து அரைமணி நேரம் அந்தச் சாமியோட பேசுவான் .அவனுக்கு சுலோகம் வராது.

"சுற்றி வந்து மொணமொணன்று சொல்லுமந்திரம்ஏதும் இல்லை"

நாதன் உள்ளிருக்கையில் வேறெதுவும் வேண்டுமா? இட்ட தெய்வமாய் எதிரில் உள்ள அந்தப் பெருமானின் கண்களையே பார்த்து நடந்ததைச் சொல்லி,நடக்க வேண்டுவதை கேட்டுப் போவான்.


ஒருநா அவன் அம்மா நடந்து வந்து சங்கரரின் காலடியில் விழுந்து கண்ணீருடன் கைகூப்பி விட்டு நகர, எதிரில் வந்த பெரியவர் அவளை நலம் விசாரித்தார். பக்கத்துல உக்காந்திருந்த சாமிகிட்ட, அடுத்தபடியா சங்கரா கல்சுரல் அகாடெமி ஆடிடோரியத்துல பெரிய நடராஜர் படம் ஒண்ணும் , சுற்று சுவர்ல நாட்டியப் பெண்களோட அபிநய கோலம் சிலதும் வரையணும். அதுக்கு சாமி நீ எங்க ஆபீஸ்ல வந்து பாரு என்றபடி தன் கார்டைக் கொடுத்தார்.


-விஜயா குமரன்