காலை ஐந்து மணி அலாரம் அடித்தவுடன் எழுந்து உள்ளங்கைகளை உரசிக் கண்களில் ஒற்றியபடி, இறைவா! இன்றைய நாள் இனிதாக இருக்கட்டும் என்று வேண்டியவளாக கட்டிலினின்றும் இறங்கினாள் ராதா.
வழக்கம் போலவே காலை நேரப் பரபரப்புத் தொற்றிக்கொள்ள
கணவனையும் குழந்தைகளையும் அனுப்பிவிட்டுத் தானும் தயாரானாள்.
இன்று பக்கத்து வீட்டு மாலதியோடு கடைக்குச் செல்ல உத்தேசித்திருந்தாள். தோழிகளோடு கடைக்குச் செல்வது அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதே சமயம் தேவையில்லாமல் செலவு செய்வது அவளுக்குப் பிடிக்காது. கணவன் கொடுக்கும் வருமானத்தைச் சிக்கனமாக, அதே சமயம் கஞ்சத்தனமின்றி அழகாகத் திட்டமிட்டுச் செலவு செய்வதால் தோழிகளுக்கு இவளைப் பிடிக்கும்.
ஏதாவது ஆலோசனை தேவைப்பட்டாலும் இவளிடம் கேட்டுக் கொள்வர்.
வேலைகளெல்லாம் முடிக்கவும் மாலதி வரவும் இருவரும் கிளம்பினர்.
சுகமான பாடல்களைக் கேட்டுக் கொண்டு சென்ற பேருந்துப் பயணம் இருவருக்குமே இதமாக இருந்தது.
நகரத்திலேயே பெரிய துணிக்கடைக்குள் செல்ல, மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. துணி தரமாக இருக்கும் என்பதால் இவர்களும் கூட்டத்தைக் கருத்தில் கொள்ளாமல் உள்ளே சென்றனர்.
என்ன ராதா! திடீர்னு துணி எடுக்கணும்னு கூப்பிட்ட, நானும் என்ன ஏதுன்னு கேட்காம கிளம்பிட்டேன் என்ற மாலதியிடம்,
ஒண்ணுமில்ல மாலதி, நம்ம தெருவுல குப்பை எடுக்க வர்ற பார்வதிக்கு ஒரு புடவை எடுக்கணும்.
அவங்க வீடு கிரகப்பிரவேசமாம். நேத்துத் தகவல் சொல்லிட்டுப் போனாங்க. அதுதான் இன்னைக்கு எடுத்திடலாம்னு உன்னைக் கூப்பிட்டேன்.
அப்படியா! நல்ல விஷயம்தான் உன்னோட பட்ஜெட் எவ்வளவு?
ஐயாயிரம் ரூபாய்க்கு எடுக்கலான்னு இருக்கேன்.
பட்ஜெட் கொஞ்சம் அதிகமா இருக்கே!
இத பணமா கொடுத்தா ஏதாவது செலவுக்கு வெச்சுக்குவாங்க தானே! விசேஷ சமயத்துல அவங்களுக்கும் நிறைய செலவு இருக்கும்.
நீ சொல்றது சரிதான் மாலதி. நான் அதை யோசிக்காம இல்லை. நம்ம வீட்டுக் குப்பைகளையே நம்மால கையில எடுக்க முடியறதில்லை. ஆனா ஊர்ல இருக்குற எல்லாக் குப்பையையும் கொஞ்சங் கூட அருவருப்புப் பாக்காம
எடுத்துச் சுத்தம் செஞ்சு எவ்வளவு புனிதமான வேலையைச் செய்யறாங்க.
பொதுவா குப்பை போடுறவங்களுக்கு கொடுக்குற மரியாதையை குப்பை எடுக்கறவங்களுக்கு நாம கொடுக்கிறது இல்ல. என்னாலான ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். அதே சமயம் பணமாக் கொடுத்தா பார்வதியோட கணவன் வீண் செலவு செய்ய வாய்ப்பிருக்கு. உழைக்கிறவங்களுக்கு ஒண்ணும் இல்லாமப் போகக் கூடாது. நம்ம அன்பளிப்பு பார்வதிக்குப் பயன்படட்டும். அது மட்டுமில்லாம வாழ்க்கையில அவங்களும் ஒரு நாளாவது நல்ல புடவை கட்டட்டும். அவங்களுக்குப் பயன்படற மாதிரி புடவை எடுக்கணும்னு நினைச்சேன்.
பேசி முடித்த ராதாவை மாலதி மென்மையாக அணைத்துக் கொண்டாள். இதுதான் ராதா எங்க எல்லாருக்கும் உன்கிட்ட பிடிச்சது. குப்பையா பாக்கறவங்க முன்னால புதையலா பாக்குற பண்புதான் உன்ன உயரத்துல வெச்சிருக்கு. வா!
நீ நினைச்ச மாதிரியே பார்வதிக்குப் புடிச்ச மாதிரி ஒரு புடவை எடுக்கலாம்.
இருவரும் புடவை எடுத்துக்கொண்டு மனநிறைவோடு வீட்டுக்குத் திரும்பினர். உண்மையிலேயே அன்றைய நாள் ராதாவிற்கு மட்டுமல்ல இருவருக்குமே நல்ல நாளாக அமைந்தது.
***************************
-தமிழ்நிலா