காட்சி 1
இடம் : மலைப் பாதை
பாத்திரங்கள் : தலைவி, தோழி
தோழி : அடியே! அப்படி என்னதான் நீங்கள் இருவரும் பேசுவீர்கள்? தெரியாமல்தான் கேட்கிறேன் . சொல்லேன் .
தலைவி : என் அன்புத் தோழி, இதெல்லாம் சொல்லிப் புரியாதடி. அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே உணர முடியும் .
தோழி : என் ஆருயிர்த் தோழியே! நான் உன்னுடன் அதிக நேரம் இருக்கிறேன் . ஆனால் என்னோடு ஒரு நாளாவது நீ இத்தனை நேரம் பேசியதுண்டா ? கூறடி .
தலைவி : அது .. வந்து …
தோழி : ஏனடி இழுக்கிறாய் . சொல் . உனக்குத் துணையாக நீ கூப்பிடும் பொழுதெல்லாம் வந்து உன் காதலுக்குத் தூது சென்று களவுப் பொழுதில் உனக்கு அரணாக நின்று நீ கையும் களவுமாய் பிடிபடாமல் உன்னைப் பாதுகாத்து…. இப்படி பல உதவிகளைச் செய்யும் என்னுடன் பேச உனக்கு நேரமும் இல்லை . விஷயமும் இல்லையாடி ?.
தலைவி : என் கண்ணே ! உனக்கு ஏன் இன்று இத்தனை வருத்தம்.?நீயும் காதலித்துப் பாரடி . அப்போது புரியும் என் அவஸ்தை . காதல் தூங்க விடாது . நடு இரவில் எழுந்து சிங்காரிக்கச் சொல்லும் . தலையணை நனையும் . வானம் தொட்டு விடும் தூரம் தான் என்று சொல்லும் .
அடியே ! நான் உயிரோடு இருப்பதை நீ அறிவாய் . ஆனால் என் உயிர் எங்கே உள்ளது என்பதை நீ அறிவாயா ?
தோழி : அடேங்கப்பா! இத்தனை இருக்கிறதா ? அதுசரி! நான் காதலித்தால் எனக்கு அரணாக நிற்பது யார் ?
தலைவி : ஏனடி! பிரித்துப் பேசுகிறாய் ? நான் இருப்பேன் . அங்கே பார் ! குறிஞ்சிப் பூக்கள் பூத்துக் குலுங்குவதை .
தோழி : ஆமாம் ! இதைக் காணக் கண் கோடி வேண்டும் . சரி ! எப்பொழுது உன் காதலன் திருமணப் பேச்சை எடுக்கப் போவதாக எண்ணம் ? அதைக் கேட்டாயா ?
தலைவி : விரைவில் என்று சொல்லிச் சென்றானடி .அடியே ! இந்த நிலம் இருக்கிறதே இதை விட பெரியது எது என்று சொல்ல முடியுமா ?
தோழி : நிலத்தை விடப் பெரியதா ? [ யோசித்தல் [ இந்த மலை .. தெரியவில்லை .
தலைவி : சரி . இந்த வானை விட உயர்ந்தது எது சொல்லு பார்ப்போம் ?
தோழி : வானை விடவா? [ உதட்டைப் பிதுக்கினாள் ]
தலைவி : சரி. இதையாவது சொல்லு . கடலை விட ஆழமானது எது ?
தோழி : என்னடி? பெரிசு, உசரம், ஆழம் என்று புதிர் போடறே ?
கொஞ்சம் புரியும்படியா சொல்லு .
தலைவி : சொல்றேன் . அது … நிலத்தை விடப் பெரியது ; வானை விட உயர்ந்தது ; கடலை விட ஆழமானது . நான் மலை நாடனுடன் கொண்ட காதல் . எனவே அவன் விரைவில் வந்து என்னை வரைந்து கொள்வான். கவலைப் படாதே .
பாடல்
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவு இன்றே சாரல்
கரும் கோல் குறிஞ்சி பூ கொண்டு
பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
-Dr.jayanthi Nagarjan
Chennai
Urapakkam
Pincode 603210