நூல் :கூண்டுக்கிளி பறந்தது
பாதிப்பு :-வசந்தா பிரசுரம் ஆசிரியர் :-நன்னிலம் இளங்கோவன்.
விலை :-150. ரூ தொடர்பு:9094875747.
அறிமுகம் : குடந்தை பரிபூரணன்.
ஆசிரியரின்
நான்காவது நூல், "கூண்டுக்கிளி பறந்தது"என்றஇந்தச் சிறுகதைத் தொகுதி. அங்கொ ன்றும் இங்கொன்று மாக உதிர்ந்து கிடந்த சிறுகதை மலர்களைத் தொகுத்து ஒரு மாலையாக இலக்கிய உலகிற்கு அளித்திருக்கிறது வசந்தா பதிப்பகம். மக்கள் வாழ்வை சார்ந்து நிற்பது தான் இலக்கியம் ஆகிறது.
"மக்களிடமிருந்து பெற்று மக்களுக்கே திருப்பி வழங்குவது என்பதே சிறந்த இலக்கியச் செயற்பாடு" என்பார் சிறுகதை மஞ்சரி மாத இதழின் ஆசிரியர் மு.தயாளன் அவர்கள். அந்த வகையில் ஆசிரியர், மக்களின் வாழ்வியல் என்னும் இழைகளைக்
கொண்டு இந்த நூலைநெய்து தந்திருக்கிறார்.
பள்ளி ஆசிரியர்களை மையமாக வைத்துப் படைக்கப் பட்ட சிறுகதைகள் இன்றைய சூழலுக்கு மிகப் பொருத்தமானவைகளாக இருக்கின்றன.
நாகரிகம் எப்போது தோன்றியது என்ற வினாவுக்கு "துன்பப்படும் சக மனிதனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போது தோன்றிய அப் போதே அது தோன்றி விட்டது" என்று மானுடவியலாளர்கள் கூறுகிறார்கள்.
மனிதனுக்கு மட்டுமின்றி எல்லாவுயிர் களையும் நேசிக்க வேண்டும் என்று, மேலும் ஒரு படி மேலே சென்றுள்ளார் இளங்கோவன் அவர்கள். "உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்" என்னும் பாரதியின் கொள்கையில் அவர் உறுதியாய் இருக்கிறார். கூண்டில் அடைக்கப்பட்டு நாள் முழுதும் கத்திக்கொண்டிருக்கும், எதிர் வீட்டுக்காரரின் மகள் வளர்க்கும் கிளியின் மீது இரக்கம் கொண்டு அவர்களாகவேஅந்தக் கிளியை த் திறந்து விடவும் ஒரு சூழ்ச்சி செய்து விடுகிறார் ஆசிரியர்.
முகங்கள் என்னும் சிறுகதையில் நாய்களிடம் அன்பு செலுத்தும் ஒரு பெண் தொழிலாளி மூலமாக ஜீவகாருண் யத்தை தூக்கிப் நிறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தனிக்குடித்தனத் தில் வாழும் தம்பதிகளுக்கு முதியவர்கள் வீட்டில் இருப்பது எவ்வளவு உதயாயிருக்கும் என்பதை வலியுறுத்துகிறது "நிழலின் அருமை" என்ற சிறுகதை.
"திரு மிகு ஆசிரியர் "என்னும் சிறுகதையில் ஓர் ஆசிரியர் தன் உயர்ந்த குணத்தால் பழிவாங்கும் எண்ணம் கொண்ட ஒரு மாணவனைத் திருத்துகிறார்.எப்படி என்று கேட்கிறீர் களா! "பேராசிரியர் அய்க்கண் நினைவு சிறு கதைப்போட்டி"யில் பரிசு பெற்ற அந்தக் கதையைப் படித்துப் பாருங்கள்,
நான் கூறுவதை நீங்களே தலையை ஆட்டி ஏற்றுக் கொள்வீர்கள்.
கந்து வட்டிக்கார் ஒருவர் தனது பணத்தாசை யைத் ஒழித்து, பொதுநல சேவையில் ஈடுபட, "இப்படியும் நடக்குமா" என்று கதா சிரியர் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்கள்.
இப்படி ஒவ்வொரு கதைகளும் அதனதன் கதைக் களங்களுடன் எளிமையான நடையில் தனித்தன்மை வாய்ந்ததாக சிறந்து விளங்குகிறது.
ஒரு பானை சோற்றையும் பதம் பார்த்துக் கொண்டிருக்கவா முடியும் ஒருசில பருக்கைகளைப் பதம் பார்த்தாலே போதும் இல்லையா.அப்படித்தான் எல்லாக் கதைகளும்.
நன்னிலம் இளங்கோவன் அவர்களுடைய படைப்பு ஒன்றை கேரள அரசு தமிழ்ப் பாட நூலில் ஒரு பாடமாக சேர்த்துள்ளது. அந்தப் படைப்பும் நம் தமிழ் நாடு மின்னிதழில் வெளியானது என்பது, மேலதிக மானதும், கூடுதலான சிறப்புக்கும் உரிய செய்தி என்பதை இங்கே குறிப்பிடுவது பொருத்தமான தாக இருக்கும்.
வசந்தா பதிப்பகம் தனது பாதிப்புரையில் "ஆசிரியர் இதுபோன்ற சிறுகதைத் தொகுப்புகளை தொடர்ந்து வழங்க வேண்டும் "என்று கூறுவதையே இங்கு நானும் வழிமொழிகிறேன்.