tamilnadu epaper

கைதியின் கண்ணியம்

கைதியின் கண்ணியம்

அன்று ஆகஸ்ட் 15. சுதந்திர தினம்.


சிறையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் கொடியேற்ற வந்திருந்தார் தமிழாசிரியர் முருகன்.


அச்சிறையில் பணிபுரியும் காவலர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், என்று பலர் அவரிடம் படித்த மாணவர்கள். அது மட்டுமல்லாது, ஜனாதிபதி கையால் நல்லாசிரியர் விருது வாங்கிய அவரிடம் கற்ற பலர் சமூகத்தில் டாக்டர்களாகவும், என்ஜினீர்களாகவும், மிக உயர்ந்த பொறுப்புகளிலும் உள்ளனர்.


கொடியேற்றி முடித்தவுடன் கைதிகளுக்கு இனிப்பு வழங்கும் போது அடுத்து வந்த கைதியை பார்த்து, "நீ.... நீ... கோமங்கலம் தேவராஜ் தானே?" கேட்டார் தமிழாசிரியர்.


அவன் இட வலமாய்த் தலையாட்ட,


  "அட.... ராசய்யா மகன்தானே?... கோமங்கலம் அரசுப்பள்ளியில் என்கிட்ட படிச்சியே?"


 "யோவ் பெருசு!... "லொட...லொட"ன்னு பேசுறதை விட்டுட்டு ஸ்வீட்டை குடுய்யா... நான் தேவராஜும் இல்லை... தேவாங்கு ராஜும் இல்லை"


 அந்தக் கைதி மரியாதைக் குறைவாக பேச, பாய்ந்து வந்த சிறை அதிகாரி அவனை அதட்டி விரட்டி விட்டு, "ஸாரி சார்!... ஸாரி சார்" என்றார் தமிழாசிரியரிடம்.


 "அவன் என் கிட்டப் படிச்ச மாணவன்தான்... மறந்திட்டான் போலிருக்கு' என்றார் தமிழாசிரியர்.


 "இருக்க முடியாது சார்... இவன் ஒரு திருடன்... இவனாவது உங்க மாணவனாக இருப்பதாவது?... உங்ககிட்டப் படிச்சவங்கெல்லாம் இன்னைக்கு பெரியப் பெரிய ஆளுங்களா இருக்காங்க சார்"என்றார் அந்த சிறைத்துறை அதிகாரி.


அடுத்த வாரத்தில் ஒரு நாள்.


வாசலில் யாரோ அழைக்கும் குரல் கேட்க எட்டிப் பார்த்தார் தமிழாசிரியர் முருகன்.


ஒரு இளம் பெண் கையில் ஒரு கடிதத்தோடு நின்றிருந்தாள்.


  "ஐயா வணக்கம்... நான் ஜெயில்ல நீங்க பார்த்த தேவராஜோட சம்சாரம்!... அவர் எனக்கு ஒர் கடுதாசி போட்டிருந்தார்... அதுக்குள்ளார இன்னொரு கடிதம் வெச்சு... அதுல உங்க பேர் போட்டு வெச்சிருந்தார்! அதை உங்களுக்கு கொடுக்கச் சொல்லி" என்றபடி அவள் நீட்டிய கடிதத்தை வாங்கி படித்தார் தமிழாசிரியர் முருகன்.


  "மதிப்பிற்குரிய என் தமிழாசிரியருக்கு கோமங்கம் தேவராஜ் எழுதுவது... சுதந்திர தின நிகழ்ச்சியில் நீங்கள் என்னை அடையாளம் கண்டு பேசினீர்கள்... நான் வேண்டுமென்றேதான் இல்லை என்று மறுத்தேன்... உங்கள் மாணவர்களெல்லாம் பெரிய பெரிய உயர்ந்த பதவிகளில் இருக்கும் போது உங்களிடம் படித்த மாணவனான நான் ஒரு திருடனாய்... சிறைக் கைதியாய் இருப்பது... உங்கள் பேருக்கும் புகழுக்கும் களங்கம் ஆகிவிடும் என்பதாலும், ஜனாதிபதி கையால் வாங்கிய நல்லாசிரியர் விருதுக்கும் அர்த்தமில்லாமல் போய்விடும் என்பதாலும்தான் என்னை நான் மறைத்துக் கொண்டேன்!.. மன்னியுங்கள்!..

 உங்கள் மாணவன்

 தேவராஜ்.


கடிதத்தைப் படித்து தமிழாசிரியர் நெகிழ்ந்து போனார். "என்கிட்டப் படிச்ச மாணவர்கள் உயர் பதவிகளில் அமர்ந்து எனக்கு பெருமையும் புகழும் சேர்த்துத் தந்தார்கள், அவர்களை விட அந்தப் பேருக்கும் புகழுக்கும் களங்கம் உண்டாகி விடக்கூடாதுன்னு தன்னைத்தானே மறைத்துக் கொண்ட நீ... நீ...அவர்களை விட உயர்ந்தவனப்பா தேவராஜ்"

பெருமிதமானார்.


(முற்றும்)

-முகில் தினகரன், 

 கோயம்புத்தூர்.