tamilnadu epaper

சிவானந்தர்

சிவானந்தர்


பிறப்பு : 08-09-1887

இறப்பு : 14-07-1963

பெற்றோர் : வெங்கு ஐயர், பார்வதி அம்மாள்

இடம் : திருநெல்வேலி, தமிழ்நாடு

வகித்த பதவி : ஆன்மீகவாதி



 வாழ்க்கை வரலாறு


 ரிஷிகேசத்தில் வாழ்ந்த ஓர் இந்து சமய அத்வைத வேதாந்த குரு ஆவார். அவர் 1887 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடை என்ற ஊரில் பிறந்தார். இவர் அப்பைய தீட்சிதர் வம்சத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே கல்வி, கலை, விளையாட்டு, ஆன்மிகம் போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கினார்.


 மருத்துவப் படிப்பு படித்து மலேசியாவில் மருத்துவராகப் பணிபுரிந்தார். ஏழை எளியவர்களுக்கு இலவச சிகிச்சை நிறைய செய்தார். அக்காலத்தில் பணிகளுக்கிடையே சத்சங்கம், பஜனை ஆகியவற்றிலும் ஈடுபாடு காட்டி வந்தார். சில ஆண்டுகளில் ஆன்மீக நாட்டம் மேலோங்க, தன் மருத்துவப் பணியைத் துறந்து இந்தியா திரும்பி, கடுமையான தவத்திற்குப் பிறகு ரிஷிகேசத்தில் தெய்வ நெறிக் கழகம் (Divine Life Society) என்ற ஆசிரமம் தொடங்கி, ஆன்மீக வேட்கை கொண்ட இளைஞர்களுக்குத் தன்னுடைய கருத்துக்களை சொற்பொழிவுகள், புத்தகங்கள் வாயிலாகவும், மற்றும் சுற்றுபயணங்கள் மூலமாகவும் பரப்பினார்.


 இவர் 1963 ஆம் ஆண்டு காலமானார். சுவாமி சிவானந்தர் நிறுவிய தெய்வ நெறிக் கழகம், சுவாமிஜி விட்டு சென்ற ஆன்மீக பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.



பெயர் : சுவாமி தயானந்த சரசுவதி

இயற்பெயர் : நடராசன் கோபால ஐயர்

பிறப்பு : 15-08-1930

இறப்பு : 23-09-2015

பெற்றோர் : கோபாலஐயர், வேலம்பாள்

இடம் : மஞ்சக்குடி, திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு

புத்தகங்கள் : Satyam and Mithya, Self-Knowledge, Shri Rudra, Stressfree Living,Successful Living, Surrender and Freedom

வகித்த பதவி : ஆன்மீகவாதி



 வாழ்க்கை வரலாறு


 சுவாமி தயானந்தர் அல்லது தயானந்த சரசுவதி சுவாமி தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டத்தில், மஞ்சக்குடி கிராமத்தில் பிறந்தார். தயானந்தர் மரபுவழி வந்த அத்வைத வேதாந்த ஆசிரியர். சுவாமி சின்மயானந்தரிடம் 1952-ல் துறவற தீட்சை பெற்று, விஜயவாடா அருகில் உள்ள குடிவாடா எனுமிடத்தில் உள்ள சுவாமி பிரவானந்தரிடம் குருகுலக் கல்வி பயின்ற வேதாந்த மாணவர். சுவாமி தயானந்தர் 1972ஆம் ஆண்டு முதல் நாற்பது ஆண்டுகளாக உலகம் முழுவதும் சுற்றி, தொடர்ந்து அத்வைத வேதாந்த சொற்பொழிவுகள் ஆற்றி வந்தார். இவரிடம் வேதாந்தம் பயின்ற இருநூறு மாணவர்கள் தலைசிறந்த வேதாந்த ஆசிரியர்களாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அத்வைத வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.


  நிறுவிய வேந்தாந்த நிறுவனங்கள்:


 சுவாமி தயானந்த சரசுவதி, வேதாந்தம் மற்றும் சமஸ்கிருதம், யோகா பயில நான்கு பயிற்சி நிலையங்களை நிறுவினார். அவைகள்,


 அர்ஷ வித்யா பீடம், ரிஷிகேஷ், உத்தரகாண்ட், இந்தியா அர்ஷ வித்யா குருகுலம், செய்லர்சுபர்க், பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா அர்ஷ் வித்யா குருகுலம், ஆணைக்கட்டி, கோவை - 641108, தமிழ்நாடு, இந்தியா அர்ஷ விஞ்ஞான குருகுலம், அமராவதி சாலை, நாக்பூர் மகாராஷ்டிரம், இந்தியா

 சாதனைகள்:


 சுவாமி தயானந்தர் தலைசிறந்த வேதாந்த சொற்பொழிவாளர் மற்றும் பல வேதாந்த நூல்களை எழுதிய எழுத்தாளர். மேலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் வேதாந்த சொற்பொழிவுகள் ஆற்றியவர்.


 ஆச்சார்ய சபா என்ற அமைப்பை நிறுவி, இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மடாதிபதிகளை ஒருங்கிணைத்து இந்து சமய கோட்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்வது குறித்து கருத்தரங்குகளை நடத்தியவர்.


 ஓதுவார்கள் நலனுக்காக சுவாமி தயானந்த சரஸ்வதி குரல் கொடுத்தார். திருவிடைமருதூர் தேர்த் திருவிழாவை மீண்டும் நடத்தியதில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு. அவரது கவிதைகள் பல பக்திப் பாடல்களாக வெளியாகியுள்ளன.


 முன்னுரிமை தரப்பட வேண்டிய ஒடுக்கப்பட்ட மற்றும் ஆதரவற்றவர்களின் கல்வி மற்றும் மருத்துவ மேம்பாட்டிற்கு உதவும் வகையில் கடந்த 2000-ம் ஆண்டில் முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனை தலைவராகக் கொண்டு எய்ம் பார் சேவா என்ற அமைப்பை தொடங்கினார். இதன் மூலம் இந்தியா முழுவதும் 120 இடங்களில் ஏழை மாணவ - மாணவிகளுக்கு இலவச உண்டு உறைவிடப் பள்ளிகள் தொடங்கப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டம் ஆனை கட்டி எனும் மலைக்கிராமத்தில் பழங்குடி மக்களின் குழந்தைகளுக்காக 2 இடங்களில் ஆசிரமங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


  மறைவு:


 ஐக்கிய அமெரிக்காவில் மூன்று மாதங்களாக உடல்நலம் குறைவுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த சுவாமி தயானந்த சுரசுவதி, 13 ஆகஸ்டு 2015 அன்று இந்தியாவுக்கு திரும்பி டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தனது இறுதிக் காலத்தை கங்கைக் கரையில் உள்ள ரிஷிகேஷ் ஆசிரமத்தில் கழித்தார். இந்நிலையில் 23 செப்டம்பர் 2015 அன்று காலமானார். 25 செப்டம்பர் 2015 அன்று அவரது உடல் ரிஷிகேஷில் அடக்கம் செய்யப்பட்டது.




பெயர் : இராமலிங்க அடிகள்

இயற்பெயர் : வள்ளலார்

பிறப்பு : 05-10-1823

இறப்பு : 30-01-1874

பெற்றோர் : இராமையாபிள்ளை, சின்னம்மையார்

இடம் : மருதூர், சிதம்பரம், தமிழ்நாடு

புத்தகங்கள் : சின்மய தீபிகை, 

ஒழிவிலொடுக்கம், 

தொண்டமண்டல சதகம்,மனுமுறைகண்ட வாசகம் 

ஜீவகாருண்ய ஒழுக்கம்

வகித்த பதவி : ஆன்மீகவாதி



  வாழ்க்கை வரலாறு


 பிறப்பு :


 இராமலிங்க அடிகள் அவர்கள் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் நாள் மாலை 5:30 மணி அளவில் இராமையா பிள்ளை சின்னம்மையார் என்ற தம்பதியாருக்கு ஐந்தாவது மகனாக இறைவன் அருளால் பிறந்தார். சிறுவயதில் இருந்தே இறைவனால் ஆட்கொள்ளப்பெற்று பல நூற்றுக்கணக்கான அருட்பாடல்களை அருளினார்கள். அவ்வாறு நமக்காக அருளிய பாடல்களே திருவருட்பா என்று போற்றப்படுகிறது.


  திருவருட்பா :


 திருவருட்பா அனைத்தும் அடங்கிய ஓர் அருள் ஞானக்களஞ்சியம் ஆகும். திருவருட்பா என்பது உண்மை உரைக்க வந்த இறை நூலாகும். இதில் பற்பல சாதன ரகசியங்களும், சிவ ரகசியங்களையும், சித்துகளையும் உள்ளடக்கி பாடப்பெற்றுள்ளது. எந்த ஒரு சித்த புருஷரும் வெளிப்படையாக பகிரங்கமாக எடுத்துரைக்காத விஷயங்களை எல்லாம் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கப் பெற்ற ஒரே ஒரு நூல் என்று சொன்னால் அதுவே திருவருட்பாவாகும். 


  சமரச சுத்த சன்மார்க்கம் :


 நாம் யார்? நம் நிலை எப்படிப்பட்டது? கடவுள் நிலை என்ன? நாம் கடவுளை விரைந்து எவ்வாறு அடைவது? எங்கனம் அழியாத தேகத்தை பெற்று நித்திய வாழ்வு பெறலாம் என்று ஆராய்ந்து அதனை அடையும் வழியினை கண்டறிந்தார் வள்ளலார். தான் கண்டு அடைந்த அந்த வழியை நாம் எல்லாரும் பெறவே வள்ளல் பெருமானால் ஏற்படுத்தப்பட்டதே ‘சமரச சுத்த சன்மார்க்கம்’. பல கோடி யுகங்கள் கழிந்தாலும், வேதங்கள் பல கற்றாலும் மற்றும் எவ்வகையாலும் கண்டுகொள்ள முடியாத ஆண்டவரை மிகவும் சுலபமாக அனைவரும் அடைதற்பொருட்டு வள்ளல் பெருமானால் ஏற்படுதப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும். 


அன்று தொட்டு இன்று வரை மனிதன் பல வழிகளிலே தெய்வங்களை தேடினான். பல தெய்வங்களை வணங்கினான். வணங்கிக் கொண்டும் உள்ளான். இப்படி மனிதன் பல பல தெய்வங்களை கூறியும் பலவற்றில் புகுந்தும் முடிவில் தெய்வத்தின் நிலையறியாது மாண்டுபோனான். இப்படி இருட்டுலகில் மடிந்து கொண்டுருக்கும் மனிதனை ஒளி நெறி பெற்றிட வள்ளல் பெருமானால் ஏற்படுத்தியதே சுத்த சன்மார்க்கம் ஆகும். மனிதனை துன்பத்தில் இருந்து மீட்டு ஜீவகாருண்ய வழி நடத்தி மனிதனுக்கு தெய்வநிலையை அடையச் செய்விப்பதே சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய நோக்கமாகும். சாதியிலே மதங்களிலே பேதமுற்று அலைந்து வீணே அழியும் இந்த உலகத்தவர்களுக்கு ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை என்னும் சாதனத்தை கொண்டு வந்தார்.


 ஒளி நெறி மார்க்கம் :


 பேதமற்று, கலவரங்கள் இல்லாத அமைதியான இயற்கை ஒட்டிய வாழ்வு பெறவும், என்றென்றும் தடைபடாது அழியாத மெய்வாழ்வு பெறவும் நமக்கு வள்ளல் பெருமான் வழிவகுத்துக் கொடுத்துள்ளார்கள். அதாவது, நமது ஆன்மாவின் கண் பல திரைகளால் மூடப்பட்டு இருப்பதாகவும் அவற்றை நீக்கி கொண்டு, ஏமசித்தி, சாகக்கல்வி, தத்துவநிக்கிரஹம் செய்தல், கடவுள் நிலையறிந்து அம்மயமாதல் ஆகிய நான்கு புருஷார்த்தங்களை நாம் பெறுமாறு நமக்கு எடுத்து அருளியுள்ளார். இவ்வாறு முடிந்த முடவாகிய சிவானந்த அனுபவமே தவிர மற்ற வேரில்லை என்றும் அவ்வனுபத்தை எல்லோரும் தன்னைப் போல் பெற ஒரு மார்க்கத்தை கண்டார்கள், அது தான் சமரச சுத்த சன்மார்க்கம் என்னும் ஒளி நெறி மார்க்கமாகும். 


  திருவருட்பா பாடல்கள் :


 வாடிய பயிரைக் கண்ட போதல்லாம் வாடினேன் என்ற வள்ளல் பெருமான், நாம் உண்மையையும், புனிதமும் பெறும் பொருட்டு அருளியதே திருவருட்பாவாகும். திருவருட்பா பாடல்கள் முழுவதும் உள்ளத்தை உருக்குவன. ஆழ்ந்த கருத்துகளை கொண்டன. ஊன் உருக்கி உள்ளொளி பெருக்கும்.


  இறப்பு :


 வள்ளலார் அவர்கள் இறுதியாக நிறுவிய அமைப்பு 1872ம் ஆண்டு ‘சத்திய ஞானசபை’ ஆகும். வள்ளலார் ஜனவரி 30, 1874ம் ஆண்டு இயற்கை எய்தினார்.



பெயர் : சுவாமி குருபரானந்தர்

இடம் : தமிழ்நாடு

புத்தகங்கள் : ஆன்மீகப் பாதையில், நற்பண்புகள், உபநிடதங்களின் விளக்க உரை, சாந்தி பாடங்கள், Human Values (ஆங்கிலம்)

வகித்த பதவி : ஆன்மீகவாதி



  வாழ்க்கை வரலாறு


 சுவாமி குருபரானந்தர் மரபு நெறிப்படி அத்வைத வேதாந்த சாத்திரங்களை கற்பிக்கும் ஆசிரியர். இவர் சுவாமி பரமார்த்தனந்த சரசுவதியின் சீடர். தம் குருநாதரிடம் முறைப்படி வேதாந்த சாத்திரங்களைப் பயின்றவர். சுவாமி தயானந்த சரசுவதி அவர்களிடம் துறவற தீட்சை பெற்றவர்.


  ஆன்மிகப் பணிகள்:


 சுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.


 வேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் பூர்ணாலயம் என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.



பெயர் : கே. பி. சுந்தராம்பாள்

இயற்பெயர் : கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்

பிறப்பு : 10-10-1908

இறப்பு : 15-10-1980

பெற்றோர் : பாலாம்பாள்

இடம் : கொடுமுடி, ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு

வகித்த பதவி : நாடக கலைஞர், ஆன்மிகம்

விருதுகள் : பத்மஶ்ரீ விருது



 வாழ்க்கை வரலாறு


 ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் பாலாம்பாள் என்ற அம்மையாருக்கு சுந்தராம்பாள் பிறந்தார். இவருக்கு கனகசபாபதி, சுப்பம்மாள் என்று இரண்ட உடன்பிறந்தவர்கள். இளம்வயதிலேயே தந்தையை இழந்தார். தனது சகோதரர்களின் ஆதரவால், குடும்பத்தை நடத்தி வந்தார் தாயார். ‘கொடுமுடி லண்டன் மிஷன் பள்ளி’யில் கல்வி கற்றார் சுந்தராம்பாள்.


 வேலுநாயர் - ராஜாமணி அம்மாள் நாடகக் குழுவினர் நல்லதங்காள் நாடகம் நடத்த கரூருக்கு வந்திருந்தனர். அந்த நாடகத்தில் நல்லதங்காளின் மூத்த பிள்ளையான ஞானசேகரன் வேடத்தை சுந்தராம்பாள் ஏற்று ஆண் வேடத்தில் நடித்தார். பசிக்குதே! வயிறு பசிக்குதே என்ற பாட்டை மிக அருமையாகப் பாடி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். சொந்தக் குரலிலேயே பாடி நடித்தார்.


 1917 - ல் கொழும்பு சென்று நடிக்கத் தொடங்கினார். இலங்கையின் பல ஊர்களிலும் இவர் நடித்த நாடகம் நடைபெற்றது. 1929களில் நாடு திரும்பினார்.


 காங்கிரஸ் பிரச்சாரங்களில் சுந்தராம்பாள் தவறாது ஈடுபட்டு வந்தார். கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய பாடல்களையும் பாடி வந்தார். காமராசர் ஆட்சியின் போது 1958 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.




பெயர் : சேக்கிழார்

இயற்பெயர் : அருண்மொழித்தேவர்

பிறப்பு : கி.பி 12 ஆம் நூற்றாண்டு

பெற்றோர் : வெள்ளியங்கிரி முதலியார், அழகாம்பிகை

இடம் : புலியூர் கோட்டம், தொண்டை நாடு

புத்தகங்கள் : திருத்தொண்டர் புராணம்

வகித்த பதவி : தமிழ் புலவர்



வாழ்க்கை வரலாறு


  சேக்கிழார் என்பவர் 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவ அடியார் ஆவார். இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை மந்திரியாக இருந்தவர். சோழன் சீவகசிந்தாமணி எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலை படிப்பதனால், சோழனையும், மக்களையும் நல்வழிப்படுத்த சிவபெருமானின் அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றியவர் ஆவார். பெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே உலகெல்லாம் என்று அடியெடுத்து கொடுத்தாக நம்பிக்கையுண்டு. சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் உத்தம சோழப் பல்லவன், தொண்டைமான், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார் போன்ற பட்டங்களைப் பெற்றவர். உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் சேக்கிழார் புராணம் எனும் நூலும், மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் எனும் நூலும் சேக்கிழாரை முன்வைத்து இயற்றப்பட்டுள்ளன. சேக்கிழார் என்பது வெள்ளாளர் மரபில் வழங்கி வந்த குடிப்பெயராக கூறப்படுகிறது.


  பிறப்பு:


 கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டைச் சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் வெள்ளாளர் மரபில் வெள்ளியங்கிரி முதலியார் மற்றும் அழகாம்பிகை ஆகியோருக்கு முதல் மகனாக சேக்கிழார் பிறந்தார். இவருக்கு பெற்றோர் அருண்மொழித்தேவர் என்று பெயரிட்டனர். இவருக்கு பாலறாவாயர் என்ற தம்பியும் இருந்தார்.


 இளமைப் பருவம்:


 சோழநாட்டு அரசனான இரண்டாம் குலோத்துங்க சோழன் அநபாய சோழருக்கு கடலினும் பெரியது எது உலகினும் பெரியது எது மலையினும் பெரியது என்ற கேள்விகள் தோன்றின. அநபாய சோழரின் அமைச்சராக இருந்த சேக்கிழாரின் தந்தை இந்தக் கேள்விகளுக்கு விடைதெரியாது தவித்த பொழுது, சேக்கிழார் விடையை அளித்தார். அதனை மன்னரிடம் கூறியமையால் சேக்கிழாருக்கு அமைச்சர் பதவியை அநபாய சோழர் அளித்தார். சேக்கிழார்க்கு உத்தம சோழப் பல்லவன் என்ற சிறப்பு பட்டத்தினை தந்தார் அரசன். சேக்கிழார் திருநாகேசுவரம் கோயில் இறைவன் மீது பற்று வைத்திருந்தார். அதனால் குன்றத்தூரில் திருநாகேசுவரம் என்ற பெயரிலேயே கோயிலொன்றினைக் கட்டினார். 


 திருத்தொண்டர் புராணம் இயற்றுதல்:


 புராணம் இயற்ற தில்லை எனப்படும் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குச் சென்றார். அங்கு சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடித் தில்லை நடராசப் பெருமானை வணங்கினார். பின்பு ஆயிரம் கால் மண்டபத்தில் அடியார்கள் முன்னிலையில் இறைவன் ‘உலகெலாம்’ என அடியெடுத்துக் கொடுக்க புராணம் பாடத் தொடங்கினார். சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று புராணம் தொடங்கி, அடுத்த வருடம் சித்தரை மாதம் அதே திருவாதிரை நட்சத்திரத்தில் புராணத்தினை முடித்தார். ஓராண்டு காலம் புராணம் இயற்றப்பட்டது. இந்நூலில் திருத்தொண்டத் தொகையில் சுந்தர மூர்த்தியார் பாடியவாறே அடியார்களின் வரலாற்றை அதன் வரிசையிலேயே பாடினார். அத்துடன் சுந்தரமூர்த்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார், இசைஞானியாரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார். பெரிய புராணத்தில் இரண்டு காண்டங்களும், பதிமூன்று சருக்கங்களும், நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) பாடல்களும் உள்ளன. அதுநாள் வரை சைவசமய இலக்கியங்களில் பதினொரு திருமுறைகள் இருந்தன. அதனுடன் பன்னிரண்டாம் திருமுறையாக பெரியபுராணம் சேர்த்துக்கொள்ளப்பட்டது. 


 மன்னன் சிறப்பு செய்தமை:


 சேக்கிழார் பெரியபுராணத்தினை திருவாதிரை நட்சத்திரத்தன்று பாடி முடிந்ததும், அரசன் வந்து அவரை தன்னுடைய பட்டத்து யானையின் மீது ஏற்றினார். பின்பு தானும் அந்த யானையின் மீது ஏறி, சேக்கிழாருக்கு வெண் சாமரம் வீசி புராணத்தோடு ஊர்வலம் சென்றார். அடியார்கள் பின் தொடர்ந்து வந்தனர். தில்லையில் வாழ்ந்த அடியார்கள் பெரிய புராணத்தினை சிவபெருமானக் கண்டனர் என்பது நம்பிக்கையாகும்.




பெயர் : மாணிக்கவாசகர்

இயற்பெயர் : திருவாதவூரடிகள்

பெற்றோர் : சம்புபாத சரிதர், சிவஞானவதி

புத்தகங்கள் : திருவாசம், திருக்கோவையார்

வகித்த பதவி : சைவ சமய குரவர்



 வாழ்க்கை வரலாறு


 மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முந்தைய மூவரும் தேவாரம் பாடியிருக்க, இவர் பாடிய நூல்கள், திருவாசகமும், திருக்கோவையாரும் ஆகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார். மாணிக்கவாசகர், சிறந்த சிவபக்தரான இரண்டாம் வரகுணன் (863-911) காலத்தில் வாழ்ந்தவர்.


 இவர் பாடிய பாடல்கள் ‘திருவாசகம்’ என அழைக்கப்படுகின்றன. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது. சிவபெருமானே நரியைக் குதிரையாக்கிக் கொண்டு வரும்படியும் மண்சுமந்து அடிபடும் படியும் நடந்து கொண்டது. பிறவி தொட்டு ஊமையாயிருந்த பெண்ணைப் பேசவைத்தமை தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும் பேறு பெற்றுக்கொண்டது.


 எல்லாரும் காணத்தக்கதாக திருச்சபையினுள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது இவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஆகும். திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரான ஜி. யு. போப் மாணிக்கவாசரைப் பற்றி, ‘உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலைத்த பக்தி ஆகிய பண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை’ என்று குறிப்பிடுகின்றார்.




பெயர் : நக்கீரர்

புத்தகங்கள் : திருமுருகாற்றுப்படை, இறையனார் அகப்பொருள் உரை

வகித்த பதவி : தமிழ் புலவர்



 வாழ்க்கை வரலாறு


 நக்கீரர் அல்லது நக்கீரன் என்பவர் சங்ககாலப் புலவர் ஆவார். இவர் பண்டைய பாண்டிய நாட்டிலுள்ள மதுரையில் வாழ்ந்தவர். இவரின் மிக குறிப்பிடத்தக்க நூல் திருமுருகாற்றுப்படை மற்றும் இறையனார் அகப்பொருள் உரை ஆகும். சங்க காலத்தில் வாழ்ந்த நக்கீரர் காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டு என தற்காலத்தில் தெரிய வருகிறது. பெண்ணின் கூந்தலில் இயற்கையில் வாசனையுண்டா என்பது தொடர்பில் சுந்தரேசுவரருடனேயே (சிவன்) அஞ்சாது வாதிட்டவர் என்பது நம்பிக்கை.


 இன்றளவும் இந்த நிகழ்வு மதுரை மீனாட்சியம்மன் கோவில் விழாவில் நாடகமாகக்கப்படுவது குறிக்கத்தக்கது. சங்கப்பாடல்கள் சிலவற்றில் சங்ககாலப் புலவர் நக்கீரரின் பெயர் ‘நக்கீரன்’, ‘நக்கீரனார்’, ‘மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்’ என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 37 பாடல்கள் நக்கீரர் பாடியதாக சங்கநூல் தொகுப்பில் உள்ளன. சங்ககால வரலாற்றுச் செய்திகள் பலவற்றை இவர் தம் அகத்திணைப் பாடல்களில் இணைத்துப் பாடியுள்ளார்.


 இவரது உள்ளுறை உவமங்களில் வரலாற்றுச் செய்திகள் மட்டுமல்லாது மக்களின் பண்பாடுகளும், ஆளி (சிங்கம்), வாவல், வரால்மீன் போன்ற உயிரினங்களும் சுட்டப்படுகின்றன. இவர், மொத்தம் 37 பாடல்கள் நக்கீரர் பாடியதாக சங்கநூல் தொகுப்பில் உள்ளன. அவையாவன, அகநானூறு (17 பாடல்), குறுந்தொகை (7 பாடல்), நற்றிணை (7 பாடல்), புறநானூறு (3 பாடல்) ஆகியன ஆகும். மேலும் பத்துப்பாட்டு தொகுப்பில் உள்ள 10 பாட்டுகளில் திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை ஆகிய இரண்டு பாட்டுகளையும் பாடியவர் நக்கீரர் ஆவார்.





பெயர் : திருமழிசையாழ்வார்

இடம் : திருமழிசை

புத்தகங்கள் : நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம்

வகித்த பதவி : ஆழ்வார்களில் ஒருவர்



 வாழ்க்கை வரலாறு


 திருமழிசையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். தை மாதம் மக நட்சத்திரத்தில் திருமாலின் ஆயுதங்களுள் ஒன்றான சக்கரத்தின் அம்சமாக திருமழிசை என்னும் ஊரில் பிறந்தவர். இளமையிலேயே பரஞான முதிர்ச்சி பெற்றுப் பரமயோகியாக விளங்கியவர். இவர், நான்முகன் திருவந்தாதி என்னும் நூறு வெண்பாக்கள் கொண்ட நூலையும் திருச்சந்த விருத்தம் என்னும் 120 விருத்தங்களைக் கொண்ட நூலையும் இயற்றியுள்ளார்.



Thanks and regards 

A s Govinda rajan 

17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai 

7358228278