தொடர் 2
சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் சைவ சமயத்தில் போற்றப்படும்
சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார்.
திருக்கைலையில் சிவபெருமானுடைய அடியார் கூட்டத்துள் ஒருவராகிய ஆலாலசுந்தரர் ஒருநாள் அருச்சனைக்காக மலர் பறிக்க திருநந்தனவனத்துக்கு சென்றபோது பார்வதிதேவியாருக்குத் தரிக்கும் பொருட்டு அந்தத் திருநந்தனவனத்திலே மலர் பறித்துக் கொண்டு நின்ற அவருடைய சேடியர்களாகிய அனிந்திதை, கமலினி என்னும் பெயர்களையுடைய பெண்களிருவரையுங்கண்டு அவர்கள்மேல் ஆசைவைத்தார். அவர்களும் ஆலாலசுந்தரைக் கண்டு அவர்மேல் ஆசை கொண்டனர். பின்பு ஒருபிரகாரம் மனசைத் திருப்பி, புஷ்பங்களைக்கொய்து கொண்டு, ஆலாலசுந்தரர் சிவசந்நிதானத்துக்கும், சேடியார்கள் தேவிசந்நிதானத்துக்கும் திரும்பி விட்டார்கள். அப்பொழுது, சர்வான்மாக்களிடத்திலும் வியாபித்திருக்கின்ற சிவபெருமான் ஆலாலசுந்தரரை நோக்கி "நீ பெண்கள்மேல் இச்சைக்கொண்டபடியால், தக்ஷிணபூமியிலே மானுடதேகம் எடுத்துப் பிறந்து அந்தப் பெண்களோடு புணர்ந்து இன்பம் அனுவிப்பாய்" என்று திருவாய்மலர்ந்தருளினார். அதைக்கேட்ட ஆலாலசுந்தரர் மனங்கலங்கி, இறைவனை வணங்கி "எம்பெருமானே! தேவரீருடைய அருமைத் திருவடிகளைப் பிரிந்து சிறியேன் மயக்கம் பொருந்திய மனிதப் பிறப்பை எடுத்து பிரபஞ்ச வாழ்க்கையிலே மயங்கும் போது, தேவரீர் வெளிப்பட்டு வந்து அடியேனைத் தடுத்து ஆட்கொண்டருளவேண்டும்" என்று பிரார்த்திக்க பெருமானும் இசைந்தருளினார்.
அதன்படி திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும். நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர். இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்ததாகக் கூறப்பட்டதால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார்.
சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையரையர் கண்டார். சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார்.
*தடுத்தாட்கொள்ளல்*
மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குப் புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று வந்த முதியவர் ஒருவர், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஓர் ஓலையைக் காட்டி, சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு திருவெண்ணைநல்லூர் கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதாக சுந்தரர் கருதி, "பித்தா பிறை சூடி..." என்ற தமது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பிறகு அடியார்களை பாட இறைவன் 'தில்லைவாழ்' என அடியெடுத்துக் கொடுக்க 'தில்லைவாழ் அந்தனர்தம் அடியார்க்கும் அடியேன்' என்ற பதிகத்தை பாடினார். பாடல்களின் மூலமாக இறைவனைத் தம்முடைய நண்பராக்கிக் கொண்டார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தமது தோழனாகக் கருதித் தமக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார். "நீள நினைந்தடியேன்..." எனத் தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான்பெற்ற நெல்லைத் தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.
*திருமணங்கள்*
திருவாரூரில் பரவையாரையும் ( கமலினி) சில காலத்திற்குப் பின்பு திருவொற்றியூரில் 'சங்கிலியாரையும் (அனிந்திதை) சிவபெருமான் ஒப்புதலுடன் திருமணம் செய்துக்கொண்டார். சங்கிலியாரிடம் உன்னை விட்டுப் பிரியமாட்டேன் திருவெற்றியூரிலேயே உன்னுடன் வாழ்வேன் என்று சுந்தரர் சிவபெருமான் அறிய வாக்களித்து அவரை மணந்தார். சில காலத்துக்குப் பிறகு திருவாரூரில் பரவையாரின் நினைவு வந்து வாட்ட அவரைக் காணவேண்டி தான் கொடுத்த வாக்கை மறந்து திருவொற்றியூரிலிருந்து புறப்படுகிறார். அப்போது சுந்தரருக்கு இரு கண்களிலும் பார்வை அற்றுப் போகிறது. கொடுத்த வாக்கை மீறியதால் தனக்கு இவ்வாறு நேர்ந்ததாக சுந்தரர் உணந்தார். பின்னர் ஆரூர் இறைவனைப் பாடி பார்வையைப் பெறுவேன் என்று பாடி தன் பயணத்தைத் தொடர்ந்தார். காஞ்சிபுரத்தை அடைந்தபோது ஏகாம்பரநாதர் அருளால் இவருக்கு இடது கண் பார்வை வந்தது. தன் பயணத்தில் வழியெல்லாம் பாடியபடி திருவாரூர் அடைந்த பிறகு தியாகேசரரை வேண்டி சுந்தரருக்கு இன்னொரு கண் பார்வையை பெற்றார்.
*பதிகங்கள்*
:இவர் 38000 பதிகங்கள்பாடியதாககூறப்படிகிறது. ஆனால் கிடைத்தவை100 மட்டுமே. இப்பாடல்களைத் 'திருப்பாட்டு' அல்லது 'சுந்தரர் தேவாரம்' என்று அழைப்பர்.
*முக்தி*
சுந்தரர் தனது 18-ஆவது வயதில் சிவனடி சேர, பதிகம் பாடினார். சிவபெருமான் வெள்ளை யானையைச் சுந்தருக்கு அனுப்ப, அதில் ஏறி கைலாயம் சென்றார் .