நூலின் பெயர்: சேவற்கொடியோன்(ஆசிரியர் திரு. எஸ்.பாலசுப்ரமணியன் நினைவுகளில்)
ஆசிரியர்: ஜே.வி.நாதன்
விலை : ₹140/-.
வெளியீடு: புஸ்தகா
தொடர்புக்கு: 9980387852
விகடன் ஆசிரியர் எஸ். பாலசுப்ரமணியன் அவர்களிடம் 10 ஆண்டுகளுக்கு மேல் நேர்முக உதவியாளராகப் பணிபுரிந்த, மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு. ஜே.வி.நாதன் அவர்களின் அற்புதமான நினைவலைகளில், விகடன் ஆசிரியர் பற்றி எழுதப்பட்ட, முழுமையான முதல் தொகுப்பு நூல் இது.
கையில் புத்தகத்தை எடுத்தால் படித்து முடிக்காமல் வாசகர்கள் கீழே வைக்க மாட்டார்கள் என்பது உறுதி.
1992 ம் ஆண்டு ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் இதழ்களில் கதை, கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்த இவர் , ஆசிரியருக்காக கழுதைகள் வாங்கிய அனுபவம்.
ஜூனியர் விகடனுக்கு எதிராக முதலில் வந்த வக்கீல் நோட்டீஸ் இவரது கட்டுரைக்குத்தானாம். அந்த வழக்கை எதிர்கொள்ள, உண்மைக்கு ஆதாரம் தேவை என ஆசிரியர் அறிவுறுத்தியது.
பணியில் ஏதும் தவறு நேர்ந்து அதை ஒத்துக் கொண்டால் ,அவர் கோபம் தணியும் என்பது...
அட்டைப்பட அரசியல் ஜோக் , அதற்காக தமிழக அரசு முன்னறிவிப்பின்றி பாலசுப்பிரமணியன் அவர்களை கைது செய்தது, விடுவிக்கப்பட்ட பின்னர், அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அடையாள நஷ்ட ஈடு கேட்டு வாங்கியது...
கொலையானதாக கூறப்பட்ட பாண்டியம்மாள், நீதிமன்றத்தில் ஆஜரானது...
கைது செய்யப்பட்டு தீராத மன உளைச்சலுக்கு ஆளான அவரது கணவர், மற்றும் இருவருக்கு பத்திரிகை ஆசிரியர், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நஷ்ட ஈடு வாங்கித் தந்தது.
16 வயதினிலே திரைப்படத்திற்கு விகடன் 62 1/2 மதிப்பெண் வழங்கியது , அதன் பிறகு, அறம் படம் நெருக்கமாக 60 மதிப்பெண் பெற , 40 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
விகடன் அலுவலகத்தில் வேலை பார்ப்போர் பிழையற எழுத , கவிக்கோ அப்துல் ரகுமான் மூலம் பயிற்சி அளித்தது, அவருக்கு மட்டும் 20 வாரங்களுக்கு மேல் தொடர் எழுத சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு அது 100 வாரங்களை கடந்தது, அவருக்கு ஆசிரியர் அசைவ உணவுகளை தன் கையால் தயாரித்து பரிமாறியது.
மாணவர் பயிற்சி திட்டம் 1984 - 85 ல் தொடங்கப்பட்டது. இதற்கு முன்னோடியாக அமரர் வாசன் இத்தகைய திட்டம் ஒன்றை 1956ல் தொடங்கி 1958 வரை , அது நீடித்தது.
பறவைகள் வளர்ப்பது, பண்ணை விவசாயத்தில் ஆசிரியர் பாலசுப்ரமணியன் ஈடுபட்டது.
திருவண்ணாமலை மாணவ நிருபர் நடராஜன் தவறு செய்ததாக , ஒரு பெட்டிஷன் வந்தவுடன் ஒருதலைப்பட்சமான அறிக்கையின் அடிப்படையில் , அவர் நீக்கப்பட்டது.( இவர் தான் "நம் தினமதி" இதழை தொடங்கி 25 ஆண்டுகள் இடைவிடாமல் நடத்தி சொந்த அச்சகம் வைத்துள்ளாராம்).
இது குறித்து ஜே.வி.நாதன் ஆசிரியரிடம் கேட்டபோது, தி.ஜானகிராமன் எழுதிய " முள்முடி " ஆசிரியர் அனுகூலசாமி போல அவர் வருந்தியது..
தான் இறந்தால் யாரும் அழக்கூடாது, மாலை அணிவிக்க கூடாது, உடலை மருத்துவ மாணவர்கள் ஆராய்ச்சிக்கு தானமாக அளிக்க வேண்டும் என எழுதி வைத்தது என பல அரிய தகவல்களை இந்நூலில் திரு. ஜே.வி. நாதன் தந்துள்ளார்.
-ஸ்ரீகாந்த்
திருச்சி