அந்த இன்டர்வியூவை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய பரசுராம் தன் நண்பன் ரகுவிற்கு கால் செய்து அழாக்குறையாய் நடந்ததைச் சொன்னான்.
"என்னடா சொல்ற?... நீ இன்டர்வியூக்கு போன கம்பெனில நம்ம கூட காலேஜ்ல படிச்ச கலைச்செல்விதான் ஜி.எம்.ம்மா?.. அவ தான் உன்னை இன்டர்வியூ பண்ணினாளா?"
"ஆமாம்டா நான் ஏழு வருஷமா ஸ்டெடியா ஒரு வேலைல உட்காராமல் தாவிக்கிட்டே இருக்கேன்... அவ ஒரே கம்பெனில சின்சியரா வேலை பார்த்து ஏழு வருஷத்துல ஜி.எம். ஆயிட்டா!" பரசு ராம் சோகமாக சொன்னான்.
"டேய் பரசு.. நிச்சயமா அந்த கலைச்செல்வி உன்னை செலக்ட் பண்ண மாட்டா!... ஏன்னா... நீ காலேஜ்ல படிக்கும் போது அவளை ஓவரா ராக்கிங் பண்ணி மயக்கம் போட வெச்சவனாச்சே?" ரகு சொல்ல.
"அதுமட்டுமா?... அதுக்குப் பின்னாடி அவ காலேஜ்ல எங்கே என்னை பார்த்தாலும் பயந்து நடுங்குவா... என் எதிரிலேயே வர மாட்டா... நான் இப்படிப் போன... அவ அப்படிப் போயிடுவா"
"ஸோ... அடுத்த இன்டர்வியூ ரெடியாயிடு" சொல்லிய ரகு இணைப்பிலிருந்து வெளியேற, சோகமாய் படுக்கையில் சாய்ந்தான் பரசுராம்.
அதே நேரம்,
கலைச்செல்வி தன் கல்லூரித் தோழி சவிதாவிற்கு ஃபோன் செய்து விஷயத்தை சொன்னாள்.
"அப்படியா?... அந்த ராஸ்கல் பரசுராம் இன்னும் வேலை தேடிக்கிட்டுத்தான் இருக்கானா?... உன்னை ஜி.எம்.ம்மா பார்த்ததும் ஆடிப் போயிருப்பானே?" சவிதா கேட்க.
"பின்னே?... முகத்துல வியர்வையாய்க் கொட்டிச்சு... பேசவே திக்கித் திணறினான்"
"காலேஜ்ல அவனைக் கண்டு நீ பயந்து கிடந்தே... இன்னிக்கு அவன் உன்னையக் கண்டு பயந்திருக்கான்" என்ற சவிதா, "ஆக... நீ அவனுக்கு நிச்சயமா வேலை கொடுக்கப் போறதில்லை.. சரியா?"
"நோ... நான் அவனை அப்பாயிண்ட் பண்ணப் போறேன்"
"ஏய் கலை... உனக்கென்ன பைத்தியமா?... ஆண்டவனாப் பார்த்து பழி தீர்க்க உனக்கொரு சந்தர்ப்பம் கொடுத்து இருக்கிறான்.... விட்டுடாதே"
"அவனுக்கு வேலை கொடுக்காம விடறது பழிதீர்ப்பு அல்ல.... வேலை கொடுக்கிறதுதான் சரியான பழிதீர்ப்பு"
"எப்படி எனக்கு புரியலை"
"காலேஜ்ல படிச்ச மூணு வருஷம் நான் எப்படி அவனைப் பார்த்துப் பார்த்து பயந்து இருந்தேனோ... அதே மாதிரி இங்க வேலை பார்க்கிற ஒவ்வொரு நாளும் அவன் என்னைப் பார்த்துப் பார்த்து மிரளுவான்... நான் என்ன செய்வேனோ?... எது செய்வேனோ?..ன்னு தவிச்சுக் கிடப்பான்!.. அதை விடக் கொடுமை வேறு எதுவும் இல்லை?..." சொல்லி விட்டு கலைச்செல்வி வில்லித்தனமாய்ச் சிரிக்க,
"ஏய்... நீ பயங்கரமான ஆளுடி!"
" தட் இஸ்... கலைச்செல்வி" சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்தாள் கலைச்செல்வி.
(முற்றும்)
முகில் தினகரன், கோயம்புத்தூர்.