tamilnadu epaper

நட்டு லூசு

நட்டு லூசு


ஹாஸ்டல் அறையின் ஜன்னல் வழியே கீழே பார்த்து அறைத் தோழன் குமார் தன் பைக்கை ஸ்டார்ட் செய்து பறப்பதை குரூரமாய்ப் பார்த்து மகிழ்ந்தான் சுரேஷ்.


இருவரும் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள்தான். ஆனால், அவர்களுக்குள் வெளியே தெரியாத ஒரு பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருப்பது யாருக்கும் தெரியாது.


 தங்கள் வகுப்பில் படிக்கின்ற ராதிகாவின் காதலைப் பெறுவதற்கான போர் அது.


இதுவரை நடந்த போட்டியில் குமாரே முன்னிலை பெற்று, கிட்டத்தட்ட ராதிகாவின் காதலைப் பெற்று விடுவான் என்பது போன்ற ஒரு நிலைமை உருவாகியிருக்க, உச்சக்கட்ட பொறாமைக்கு ஆளான சுரேஷ், குமாருடைய இரு சக்கர வாகனத்தின் முன் சக்கரத்தின் பத்தியில் ஒரு பக்க நட்டை மட்டும் லூஸ் செய்து வைத்தான்.


 "ஹா... ஹா... ஒழிஞ்சான் எதிரி!... எப்படியும் வண்டி ஓட ஓட நட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து, ஒரு கட்டத்தில் தெறித்து விழும். அவ்வளவுதான் குமாரும் நட்டைப் போலவே தெறித்து விழுவான்.

விழுந்து கையையோ காலையோ இழந்து ஊனமாய் வருவான்!.. அப்ப அவனை ராதிகா நிச்சயம் விரும்ப மாட்டாள்!.. அப்புறமென்ன?... நான்தான் அவளின் ஆத்மார்த்த காதலன்"


விபத்து குறித்த தகவல் வரும் என்று எதிர்பார்த்து மொபைலையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் சுரேஷ்.


அரை மணி நேரத்திற்குப் பிறகு மொபைல் அலற எடுத்துப் பார்த்தான்.


 குமாரின் எண்ணிலிருந்துதான் கால் வந்திருந்தது.


  "ஹலோ' சன்னக் குரலில் பேசினான் சுரேஷ்.


  "டேய் சுரேசு.... நான்தாண்டா உன் அப்பா பேசுறேன்" எதிர் முனையிலிருந்து தன் தந்தையின் குரல் வர.


  "அப்பா... நீங்க... எப்படி... குமாரோட... நம்பர்ல?"


  "அதுவா?... நான் ரயிலை விட்டு இறங்கி உங்க ஹாஸ்டலுக்கு வர்றதுக்காக பஸ்ஸுக்கு நின்னுட்டிருந்தப்போ உன் அறைத்தோழனான குமார் பைக்ல வந்தான்... என்னை அடையாளம் தெரிந்து கொண்டு என்கிட்ட வந்து "ஹாஸ்டலுக்கா அப்பா?... வாங்க நானும் அங்கேதான் போறேன்"ன்னு சொல்லி என்னை தன்னோட பைக்கில் ஏத்திக்கிட்டான்.... ரெண்டும் அங்கதான் வந்திட்டிருக்கோம்!"


இடி தாக்கியது போலானான் சுரேஷ்.


  "இப்ப... இப்ப.. எங்க இருக்கீங்க?'


  "பைக்ல தான் வந்துக்கிட்டிருக்கோம்!... உன் ஃப்ரெண்டு பைக் நல்லாவே ஓட்டுறான்பா"


   "ஐயோ... அப்பா... நீங்க உடனே கீழே இறங்கி ஒரு ஆட்டோ புடிச்சு வாங்கப்பா" சுரேஷ் பரபரத்தான்.


  "ஏண்டா?... ஓ.... அவன் ரொம்ப வேகமாக பைக்கை ஒட்டி என்னைக் கீழே தள்ளிடுவான்னு பயப்படுறியா?... இல்ல... இல்ல... தம்பி நிதானமாத்தான் ஓட்டுறாப்ல'.


தொடர்ந்து அவர் பேசியது சிக்னல் பிரச்சனை காரணமாக சுரேஷுக்கு விட்டு விட்டுக் கேட்டது. கடைசியில் சிக்னல் சுத்தமாகவே கிடைக்காமல் போனது.


இணைப்பு கட்டானதும் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாய்... வேக வேகமாய் நடந்தான் சுரேஷ். " ச்சை!... இப்படி ஆயிடுச்சே?... கடவுளே எங்க அப்பாவுக்கு எதுவும் ஆகாம பார்த்துக்க கடவுளே"


அப்போது கீழே பைக் சத்தம் கேட்க ஜன்னல் பக்கம் வந்து எட்டிப் பார்த்தான் சுரேஷ்.


குமாரும் சுரேஷின் அப்பாவும் பைக்கில் இருந்து இறங்கி அறையை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.


அவர்கள் இருவரும் அறைக்குள் வந்ததும், "அப்பாடா.... உங்களைப் பார்த்ததும்தான் எனக்கு உசுரே வந்தது" என்றான் சுரேஷ்.


  "நல்லாச் சொன்ன சுரேஷ்.... நான் உங்க அப்பா கூட பேசிட்டிருந்தப்போ... உங்க அப்பா தான் பார்த்துச் சொன்னார்... பைக்கோட முன்னாடி வீல் நட்டு லூஸாகி கழண்டு வந்து... கிட்டத்தட்ட கீழே விழுகிற நிலைமையில நின்னுட்டிருந்ததை!.. உடனே பக்கத்து மெக்கானிக்கிடம் கொண்டு போய் நட்டை டைட் பண்ணிட்டு வந்தோம்!.. இல்லேன்னா ரெண்டு பேரும் பெரிய விபத்துக்குள்ளாகி இருப்போம்!" என்றான் குமார்.


மகன் போட்ட சதித் திட்டத்தை அப்பனைக் கொண்டே முறியடித்த ஆண்டவன், விண்ணிலிருந்து புன்னகைத்தார்.


(முற்றும்.)



-முகில் தினகரன்,

 கோயமுத்தூர்.