திண்டுக்கல் மலைக்கோட்டையின் அடிவாரத்தில் சீனிவாசப்பெருமாள் கோயில் கொண்டருள் கிறார். அடியார்கள் சிலர் மகா விஷ்ணுவின் தரிசனம் வேண்டி இங்கு ஒரு யாகம் நடத்தினர். அப்போது அசுரன் ஒருவன், அவர்களைத் தொந்தரவு செய்தான். அசுரனை அழித்து யாகம் தடையின்றி நடக்க அருளும் படி அவர்கள் பெருமாளிடம் வேண்டினர். ஸ்வாமியும் அசுரனை அழித்தார்.
இவ்வேளையில் அவர் உக்கிரமாக இருந்தார். சுவாமியின் உக்கிரத்தைக் குறைக்கும்படி, அவர்கள் மகாலட்சுமியை வேண்டினர். தாயாரும் சுவாமியை சாந்தப்படுத்தினார். பின்பு இருவரும் இங்கேயே எழுந்தருளினர்.
பிற்காலத்தில் இங்கு ஸ்ரீதேவி, பூ தேவியுடன் சுவாமிக்கு கோயில் எழுப்பப் பட்டது. இவர் ' சீனிவாசர் 'என திருநாமம் பெற்றார். உற்சவர் கல்யாண சீனிவாசர் :தல தீர்த்தமாக பத்மகிரி தீர்த்தம் விளங்குகிறது.
பாஞ்சராத்ர ஆகம முறைப்படி ஆலயத்தில் வழிபாடு நடக்கின்றன. மகா லட்சுமியின் அம்சமாக கருதப்படும் நெல்லி மரமே இத்தலத்தின் தல விருட்சமாகும். இதை துளசிக்கு ஒப்பானதாகச் சொல்வர். மாங்கல்யம் மற்றும் பித்ரு தோஷ நிவர்த்திக்கு சுவாமிக்கு நெல்லி இலைகளால் அர்ச்சனை செய்து வழி படுகிறார்கள்.
இத்தல பெருமாள் வலது கையால் ஆகாயத்தையும், இடது கையால் பூமியையும் தாங்கி நிற்கிறார்.
கோயில் முகப்பில் பெரிய வடிவில் கருடாழ்வார் நின்று இருக்கிறார்.
சித்ரா பௌர்ணமி அன்று சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி குடகனாற்றில் இறங்குவார். ஆனி பிரம்மோற்ஸவம் மற்றும் பங்குனி உத்திரத்தன்று சுவாமிக்கு திருக் விழா நடக்கிறது.பெருமாளுக்கு வலப்புறத்தில் தாயார் அலமேலுமங்கையும் இடப்புறம் ஆண்டாளும் தனித் தனி சந்நதிகளில் அருள்கின்றனர்.
வெள்ளிக்கிழமை மாலையில் தாயார் சந்நதியில் கோமாதா பூஜையுடன் விசேஷ திருமஞ்ச னம் நடக்கும். இவவேளையில் பால், மஞ்சள் பிரசாதம் தரப்படுகிறது. இப்பூஜையில் கலந்துக்கொண்டால் பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் கிட்டும். கன்னிப்பெண்களுக்கு நல்ல வரம் அமையும்.
மார்கழி மாதம் முழுதும் ஆண்டாள் சந்நதியில் விளக்கு பூஜை நடக்கிறது.
இம்மாதத்தில் மட்டும் தினமும் ஆண்டாளுக்கு சூடிக் களைந்த மாலையையே சீனிவாசருக்கு அணிவித்து பூஜிக்கிறார்கள்.
தொகுப்பு
M. ராதாகிருஷ்ணன்,
அஞ்சல் துறை (ஓய்வு )
வளையாம்பட்டு போஸ்ட்
வாணியம்பாடி -635751