tamilnadu epaper

நம்பிக்கை

நம்பிக்கை


யானையின் பலமெதிலே தும்பிக்கையெலே

  மனுஷனோட பலம் எதிலே நம்பிக்கையெலே”

யானையின் தும்பிக்கையையும் மனிதனின் நம்பிக்கையையும் ஒப்பிட்டு பாட்டு எழுதப் படுகின்றதென்றால் மனிதனுக்கு நம்பிக்கை எத்தனை முக்கியம் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது.

ஒரு குழந்தை ஜனித்தவுடனேயே அதன் தாய் தனது மதத்தின் விதிகளின்படி ஜெபிக்க வேண்டிய மத போதனைகளை அந்த கருவிற்கு நித்தம் போதித்து அதை கருவிலேயே நல் வழி படுத்த முயல்கிறாள்.

1. அந்த நிமிடத்திலிருந்தே அக்கரு நம்பிக்கையின் முதல் பாடத்தை கற்கிறது.

2. குழந்தை பிறந்த நிமிடத்திலிருந்து ஒரு தாய் அதன் பசிக்கு தன் உதிரத்தை பாலாக்கி தருகிறாள். அதன் பசி, தாகம், உறக்கமறிந்து அதனை பாசத்திலும் நேசத்திலும் பிணைத்து வளர்கிறாள். அடுத்ததாக அதன் தந்தையை அறிமுகப் படுத்துகிறாள். அக்குழந்தையின் வலது கரமாக இருந்த நம்பிக்கையின் இரண்டாம் பாடத்தை பயிற்றுவிக்கிறாள்.

3. தந்தை அக்குழந்தையை தூக்கியும், கொஞ்சியும், நேசித்தும் தான் அதனின் இடது கரமென்பதை உறுதி படுத்துகிறார். இது நம்பிக்கையின் மூன்றாவது பாடம்.

4. குழந்தை வளர்ந்து வெளியுலகை பார்க்கும்போது அண்ணா, அக்கா உறவுகளை அறிமுகப் படுத்தி குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை புரிய வைக்கும் நான்காவது பாடத்திற்கு அடித்தளமிடுகின்றனர்.

5. பள்ளி பருவத்தில் ஆசிரியர் என்ற ஒருவரும் அக்குழந்தையின் உலகிற்குள் நுழைகிறார். ஒரு மாணவன் பிற மாணவர்களுடன் எப்படி பழக வேண்டும், நல்லது, கெட்டது யாவற்றையும் கற்று தர வருகிறார் அந்த ஆசிரியர். மேலும் நல்லவர் யார், கெட்டவர் யார், பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பான சூழல் எது என்பதையும் புரிய வைக்கிறார். அந்த ஆசிரியரும் மற்ற பிள்ளைகளும் தனது நண்பர்கள்தான் என்ற ஐந்தாவது பாடத்தை புகட்டுகிறார்.

6. அந்த பிள்ளை கல்லூரி பருவத்தை தொடுகிறது. இது அந்த பிள்ளை தனது வாழ்நாள் நட்பை தேர்ந்தெடுக்கும் நேரம். இந்நேரத்தில் அந்த பிள்ளையை முழுமையாக கண்காணித்து நல்ல நட்புக்களை தேர்ந்தெடுக்க உதவி நம்பிக்கையின் ஆறாவது படியாகிறார்கள்.

7. வேலைக்கு செல்லும் பருவத்தில் அனுபவம், இணக்கமாக பழகுவதன் மூலம் பிறரையும் நம்பிக்கைக்கு பாத்திரமாக்கி ஏழாவது படிக்கல்லை எட்டுகிறது.

8. நிரந்தர வேலை கிடைத்த பின் வாழ்க்கை துணையை தேடி தேர்ந்தெடுக்கிறான். திருமண பந்தத்தில் நுழைந்து தனது கணவனுடனோ மனைவியுடனோ இணைந்து அவர்களின் உற்றாரின் நம்பிக்கைக்கு பாத்திரமாகிறான். இது மிக கடினமான எட்டாவது நம்பிக்கை பாடம்.

9. தாம்பத்தியத்தில் ஈடுபட்டு குழந்தை பெற்றவர்கள் ஆகின்றனர். அக்குழந்தையை நன்றாக வளர்த்து அதன் நம்பிக்கையை பெறும்போது ஒன்பதாவது படிக்கல்லை தொடுகின்றனர்.

10. அந்த பிள்ளை நல்ல வேலையில் அமர்ந்து தனது உழைப்பால் முன்னேறி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்போது பெற்றோர் நம்பிக்கையின் பத்தாவது படிக்கல்லை எட்டி பிடிக்கின்றனர்.

இதுவே வாழ்க்கையில் நம்பிக்கை கற்று தரும் மிக உன்னதமான பாடம்.



-ரமா ஸ்ரீனிவாசன்