tamilnadu epaper

நல்லபிள்ளை

 நல்லபிள்ளை


         அரசுப் பள்ளி ஒன்றில் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற வந்திருந்தார் பிரபல திரைப்பட நடிகர் சங்கீத குமார். 

அனைவரையும் வரவேற்று பேசினார் பள்ளித் தலைமை ஆசிரியர் தமிழ் வேந்தன் 

ஆண்டு விழா நிகழ்ச்சிகள் இனிதே ஆரம்பமானது.

முதலாவது நிகழ்ச்சியாக மூன்றாம் வகுப்பு மாணவி லலிதாவின் பரத நாட்டிய நிகழ்ச்சி முதலில் நடந்தேறியது.

அடுத்தடுத்து ஒவ்வொரு வகுப்பு மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடந்த வண்ணம் இருந்தது.

இடையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் "‌ஒரு மாணவனின் கனவு" என்ற நாடகமும் சிறப்பாக நடந்தது.

மாணவ மாணவிகள் 

கலைநிகழ்ச்சிகளை அமைதியாக அமர்ந்து உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.

விழாவுக்கு வந்திருந்த நடிகர் சங்கீத குமார் கலை நிகழ்ச்சிகள் அனைத்தையும் வெகுவாக கண்டு ரசித்துக் கொண்டிருந்தார்.

ஆண்டு விழா நிகழ்ச்சிகள் முடிவுற்ற நிலையில் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொழிலதிபர் சுந்தரம் பரிசுகளையும், விருதுகளையும் வழங்கி கெளரவித்தார்.

நடிகர் சங்கீத குமார் " சிறந்த மாணவன்" என்ற தலைப்பில் சுவையாக நெடிய உரையாற்றினார்.

தனது சொற்பொழிவின் இறுதியில், அரங்கத்தில் அமர்ந்திருந்த மாணவ, மாணவிகளிடம் எதிர்காலத்தில் நீங்கள் என்னாவாக ஆகப் போகிறீர்கள் என்று கேள்வி க் கேட்டுக் கொண்டிருந்தார்.

மாணவர்களில் சிலர் மருத்துவராகவும், வழக்கறிஞராகவும், போலீஸாகவும், நீதிபதியாகவும், விஞ்ஞானியாகவும் ஆகவேண்டும் என்று தங்களது விருப்பத்தினைத் தெரிவித்தனர்.

மாணவிகளில் சிலர் நாங்கள் ஆசிரியராகவும், கல்லூரி பேராசிரியராகவும்,செவிலியராகவும்,காவல்துறை அதிகாரியாகவும் ஆகப் போகிறோம் என்று தங்களது லட்சியங்களை மகிழ்ச்சியாகத் தெரிவித்தனர்.

மாணவ, மாணவிகள் தங்களது ஆசைக்கனவுகளை இனிதாக வெளிப்படுத்தியதை பாராட்டி தனது சொந்த செலவில் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பரிசுகளையும் வழங்கினார்.

இறுதியாக ஆறாம் வகுப்புப் படிக்கும் மாணவி வைதேகியைப் பார்த்து , எதிர்காலத்தில் நீ என்னாவாக வேண்டும் என்று நினைக்கிறாய் எனக் கேட்டதும், மாணவி வைதேகி எழுந்து நின்று உற்சாகத்தோடு நான் எனது அம்மா அப்பாவுக்கு நல்லப் பிள்ளையாக ஆகவேண்டும் என்று தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

இதுவரை எந்தவொரு மாணவ, மாணவியும் தெரிவிக்காத கருத்தினை கூறிய மாணவி வைதேகியை, விழா மேடையில் அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து நின்று மேடைக்கு வருமாறு அழைத்தனர்.

மேடைக்கு வந்த மாணவி வைதேகி யின் தலையில் மலர்க்கீரிடம் வைத்து 

தொழிலதிபர் சுந்தரம் சிறப்புப் பரிசும் வழங்கி வாழ்த்திப் பேசினார்.

இறுதியாக பேசிய தலைமையாசிரியர் தமிழ் வேந்தன் மாணவி வைதேகி சொன்னது போன்று,மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் தங்களது பெற்றோர்களுக்கும்,‌ஆசிரியப் பெருமக்களுக்கும் "நல்ல பிள்ளையாக" 

வாழ்ந்து காட்டுவதே முதல் கடமையாக இருக்க வேண்டும் என்று வாழ்த்திப் பேசினார்.



ஆக்கம்:

-நன்னிலம் இளங்கோவன்,

மயிலாடுதுறை.