ஜெகந்நாதனிடம் ஒரு பழைய மெர்ரிட் தையல் மிஷின் இருந்தது. அவர் இளைஞனாய் இருந்தபோது செகண்ட் ஹாண்டில் ஐந்நூறு ரூபாய்க்கு வாங்கியது.
அந்த சமயம் அவர் வேலை பார்த்த பிரபல தனியார் நிறுவனம், விற்பனை சரிவால், 48 நாட்கள் லேஆஃப் விட்டிருந்தனர்.
ஜெகநாதன் முன்பே பயிற்சி எடுத்திருந்ததால், தையல் இயந்திரத்தை இயக்குவது மிக எளிதாய் இருந்தது.
தன்னுடைய பழைய பேண்ட் மற்றும் ஷர்ட்டை தையல் பிரித்து இஸ்திரி செய்து அதே அளவில் புதுத் துணியை வெட்டித் தைத்தார். தொழிலில் காதல் மற்றும் ஈடுபாட்டால் நாட்கள் சென்றதே தெரியவில்லை.
மகளுக்கும் பெண்கள் பயிற்சி நிலையம் மூலம் தையல் பயிற்றுவித்தார்.
ஓய்வு பெற்ற போதும் மெஷினை செர்வீஸ் செய்து, பாகங்கள் மாற்றி, புதிது போல வைத்துக் கொண்டார்..
மகள் பெடலில் மிதிப்பதை விட தனக்கு மோட்டார் பொருத்திய மெஷின் வேண்டுமென கேட்க, பழைய மெஷினை வாங்க ஓஎல் எக்ஸ் மூலம் முயன்றார். அது எளிதாக இல்லை.
அறிமுகமான முஸ்லீம் டெய்லரை சந்தித்து தரமான பழைய ’பிரதர் மாடல்’ மெஷின் தேவை என்றார்.. அந்த டெய்லர், ”நீங்க கேட்ட மெஷின் ஓரிடத்தில் இருக்கு.. வாங்கித் தருகிறேன்” என்றார்.
இதனிடையே நண்பர் ஒரு உபாயம் சொன்னார். ”இரண்டு இடைத்தரகர்களிடம் சிக்கிக் கொண்டால், விலை கூடுதலாகும். எனவே விற்பவரிடம் நேரிடையாக வாங்கிக் கொள்ளலாம்” என்றார். அதுவும் சரியான யோசனையாகவே தோன்றியது.
மெஷின் வாங்கி விற்பவர் சொன்னார். ”அந்த முஸ்லீம் பெரியவர் கமிஷன்
கொடுத்தாலும் வாங்க மாட்டார். ரொம்ப நேர்மையானவர்..பிரதர் மெஷினை செர்வீஸ் செய்து ஒரு வருடம் கியாரண்டி கொடுப்பதால், உங்க பழைய மெஷினை எனக்கு கமிஷனாய் கொடுங்க போதும்” என்றார். அந்த டீலிங் பிடித்திருந்தது.
அந்த முஸ்லீம் பெரியவரை மீண்டும் சந்தித்தபோது ஜெகந்நாதன் தன்னை அறியாமல் வெட்கப்பட்டார்.
-பி. பழனி, சென்னை..