tamilnadu epaper

பரம்பரை வீடு

பரம்பரை வீடு


தனியே வசிக்கும் தனது தந்தையை பார்ப்பதற்காக மனைவி ராதாவுடன் சொந்த ஊரான மேட்டுக்குடி வந்து இறங்கினான் ரகு.

வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்த அருணாச்சலம் ஆசையுடன் மகனைப் பார்த்தவாறு, “வாடா ரகு, வாம்மா ராதா” என மருமகளையும் சேர்த்து வரவேற்றார்.

ஆனால், மருமகள் ராதாவோ கடுகடுவென்ற முகத்துடன் வேகமாக உள்ளே சென்றாள்.

 அதை கவனித்த அருணாச்சலம், “ஏன் ராதா ஒன்றுமே பேசாமல் உள்ளே போறா? அவளுக்கு ஏதாவது கோபமா” என மகனிடம் கேட்டார்.

ஆமாப்பா, நான் உங்கள என்னோட சென்னைக்கு வந்து இருங்க என கூப்பிட்டால் நீங்க வர மாட்டேங்கிறீங்க , அதனால அவளுக்கு வருத்தம். மேலும் , எங்களோட பிசியான ஷெட்யூலில் எங்களால அடிக்கடி இங்கே வந்து உங்களை வந்து பார்க்க வர முடியவில்லை. இந்த முறையாவது எங்களோட சென்னைக்கு புறப்பட்டு வந்து விடுங்கள் என்றான் ரகு.

அப்போது வீட்டில் சமையல் வேலை செய்யும் பெண் வந்தாள்.

அருணாச்சலம், அப்பெண்ணிடம்,. மகனும், மருமகளும் வந்துருக்காங்க அவங்களுக்கு பிடிச்சத சமைச்சுப் போடுங்க என்றார்.

 சரிங்க ஐயா, என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் நகர்ந்தாள் .

ரகு, ராதா இருந்த அறைக்குள் சென்றான் .

 அப்போது, ராதா அவனிடம் “இதப்பாருங்க, சாப்பிட்டவுடன் மாமாவிடம் விஷயத்தை கண்டிப்பா பேசுறீங்க , நாம இந்த ஊருக்கு வருவது இதுவே கடைசியாக இருக்கட்டும், அவர்கிட்ட விவரமா எடுத்து சொல்லுங்க” என்றாள்.

சரி, என்று தலையசைத்தான் ரகு.

சாப்பிட்ட பிறகு அருணாச்சலம் ஓய்வாக வாசல் திண்ணையில் படுத்திருந்தார்.

அப்போது வெளியே வந்த ரகு, அப்பாவிற்கு எதிரே அமர்ந்தான்.

ரகுவை பார்த்தவுடன் எழுந்து அமர்ந்து கொண்ட அருணாச்சலம்,

“ஏம்ப்பா ரகு சாப்பிட்டியா, ராதா சாப்பிட்டாளா ?என கேட்டார்.

சாப்பிட்டாச்சுப்பா, நான் இந்த முறை இங்க வந்தது உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசுவதற்காகத் தான் என்றான் ரகு .

என்ன விஷயம்? என கேட்டார் அருணாச்சலம்.

நாங்களும் ரொம்ப நாளா உங்க கிட்ட சொல்லிகிட்டுதான் இருக்கோம். நீங்க இங்கே தனியாக இருந்து கஷ்டப்பட வேண்டாம், சென்னைக்கு புறப்பட்டு வந்து விடுங்க என்று, ஆனால் நீங்க பிடிவாதமா இருந்துகிட்டு, எங்ககூட வர மாட்டேங்கிறீங்க என்றான்.

நான் இங்கே சௌகரியமாக தான் இருக்கேன் , வேணும்கிறதை சமைத்து கொடுக்க சமையல் அம்மா இருக்காங்க, ஏதாவது உதவி தேவைப்பட்டால் உடனடியாக செய்வதற்கு பக்கத்து வீட்ல பிரபாகர் இருக்கிறார்.,

மேலும், நான் அங்கே வந்து உங்களுக்கு தொந்தரவாக இருக்கவிரும்பல , அதனாலதான் நீங்க பல முறை கூப்பிட்டும் சென்னைக்கு நான் வர ஆர்வம் காட்டவில்லை என்றார்.

இல்லப்பா, உங்களுக்கும் வயசாகி கிட்டே இருக்கு, உங்கள இங்க தனியா விட்டுட்டு நாங்க அங்கே நிம்மதியா இருக்க முடியல , அதனால நாம இந்த வீட்டை வித்திடலாம்.

நான் சென்னையில் ஒரு பெரிய மூன்று படுக்கை அறை உள்ள அபார்ட்மெண்ட்- ஐ விலைக்கு வாங்க முடிவு செஞ்சுருக்கேன், இந்த வீட்ட வித்து வர்ற பணத்துல கொஞ்சம்பணத்தை கொடுத்தீங்கன்னா அதை முன்பணமாக கொடுத்து விடலாம், மீதமுள்ள தொகைக்கு நான் பேங்க் மூலமாக கடன் பெற ஏற்பாடு செய்கிறேன் என்றான் .

உடனே அருணாச்சலம், மகனிடம் “ இல்லை ரகு , இது எங்க அப்பா, அம்மா, உன்னோட அம்மா போன்ற எல்லோரும் நிறைவாக வாழ்ந்து முடிந்த வீடு.

 நானும் அதுபோல என்னோட இறுதி காலம் வரைக்கும் இந்த வீட்டிலேயே இருக்கணுமுன்னு விரும்புறேன்.,

அதனால, தற்போதைக்கு இந்த வீட்டை விற்க வேண்டாம்” என்றார்.

உடனே ரகு கோபமாக இல்லைப்பா, நாளைக்கு என் நண்பர் மூலமா ஒருத்தர வரச் சொல்லியிருக்கேன் . அவருக்கு இந்த வீட்டை மிகவும் பிடிச்சிருக்கு.

அவர் ஏற்கனவே இந்த வீட்டை பார்த்து இருக்கிறார், விலை மட்டும் நம் எதிர்பார்ப்பை ஏற்றுக்கொண்டால் , நாளைக்கே அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் போடலாம் என்று சொல்லி இருக்கார் .

அதனால , நீங்க இந்த முறை ஒத்துக்கதான் வேண்டும் என்று சொல்லிவிட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றான் ரகு .

அருணாச்சலம், மகன் கோபமாக பேசுவதை கேட்டு செய்வதறியாது திகைத்து நின்றார்.

இரவு அருணாச்சலம் தூக்கம் வராமல் படுக்கையில் அமர்ந்து இருந்தார் . பக்கத்து அறையில் மகனும் ,மருமகளும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது ,

மருமகள் ராதா , ரகுவிடம் ,

“உங்க அப்பா நாளைக்கு இந்த வீட்டை விற்க ஒதுக்கலையின்னா ,

நாம இனிமே இங்கே வர வேண்டாம் , அவரும் சென்னைக்கு வர வேண்டாம் ,

அவர் இந்த வீட்டையே கட்டிக்கிட்டு அழட்டும் என்றாள் கோபமாக .

சத்தமா பேசாத ராதா ,அப்பா காதுல விழ போகுது என்றான் .

“நல்லா விழட்டுமே ,காதுல விழுட்டுமேன்னுதான் பேசறேன்” என்றாள் ராதா.

அவருக்கு ஓரே பையன் நீங்க ,உங்களுக்கு உதவி செய்ய அவருக்கு மனசு வரல , நாமளும் இத்தனை நாளா பலமுறை சொல்லிப் பார்த்துட்டோம் ,

ஆனா, அவர் பிடிவாதமா அவர் பேசறதயே பேசிகிட்டு இருக்கார் என்றாள் .

சரி ,சரி கொஞ்சம் பொறுமையா இரு ,நான் காலையில அப்பாகிட்ட கண்டிப்பா சொல்லியிருக்கேன் , நாளைக்கு பார்க்கலாம் என்றான் ரகு .

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அருணாச்சலம் மிகவும் மனமுடைந்து போனார்.

அவர் இந்த வீட்டைப் பற்றிய பழைய நினைவுகளில் மூழ்கினார்.

அவருடைய அப்பாவும், அம்மாவும் அவரை அன்புடன் வளர்த்தது, தான் அந்த வீட்டில் விளையாடியது படிப்பதற்காக சைக்கிளில் அருகிலுள்ள டவுனுக்கு சென்று வந்தது,

பிறகு வேலைக்கு சென்று வந்தது, தனக்கு கல்யாணம் ஆனது, புவனேஸ்வரி மனைவியாக வந்தவுடன் அவளும் இந்த வீட்டிலேயே பொறுப்பான மருமகளாக நடந்துக்கிட்டது மட்டுமல்லாமல் இந்த வீட்டில் நடந்த வளைகாப்பு சீமந்தம் அப்பாவின் சஷ்டியப்தபூர்த்தி போன்ற அனைத்தும் அவருக்கு நினைவுகளில் வந்து போனது.

மேலும் இந்த வீட்டில்தான் அனைத்து நல்ல காரியங்களும்,

சில துக்க நிகழ்வுகளும் நடந்துள்ளது.

ஆனால், இதுநாள் வரை இந்த வீடு ஒரு ராசியான வீடாகவே அமைந்துள்ளது குறித்து அவர் மிகவும் திருப்தி அடைந்தார்.

 தன்னுடைய இறுதி நாட்களும் இந்த பழைய பரம்பரை வீட்டிலேயே கழிக்கப்பட வேண்டும் என அவர் விரும்பினார்.

 காலையில் மகன் ரகு மிகவும் கண்டிப்புடனும், கோபத்துடனும் பேசியது மிகவும் வருத்தமாக இருந்தது.

“நான் என்ன சொல்றேன் , யாருக்கும் தொந்தரவாக இல்லாமல், என்னோட இறுதி காலம் வரைக்கும் இந்த வீட்டிலேயே இருக்கிறேன்” என்றுதான் சொல்லுகிறேன், என் காலத்திற்குப் பிறகு எப்படி இருந்தாலும் இந்த வீடும், இதர சொத்துக்களும் ரகுவுக்குத்தான் .

அதன்பிறகு, வேண்டுமென்றால் இந்த வீட்டை விற்றுக் கொள்ளட்டுமே ,ஒரு வயசான கிழவனின் உணர்வுகளைக் கூட புரிஞ்சுக்காம இப்படி ஒரேடியா எடுத்தெரிஞ்சு பேசுறாங்களே, “ நான் என்ன செய்வேன், நீயே சொல்லு “ புவனேஸ்வரி” என்று மனைவியின் புகைப்படத்தை பார்த்து கண்ணீர்விட்டபடி நின்றார்.

மறுநாள் மகனிடம் எப்படி மறுத்து பேசுவது, என யோசித்தபடி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட படியே படுக்கையில் அவர் படுத்தார்.

மறுநாள் காலை ஏழு மணி ஆகியும் அப்பா இன்னமும் எழுந்து வெளியில் வரவில்லையே? என்று யோசித்துக்கொண்டே அப்பா தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தான் ரகு .

கதவு உட்புறமாக தாளிடப்பட்டு இருந்தது, அவன் பலமுறை கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.

 பயந்துபோன அவன் பக்கத்து வீட்டு பிரபாகர் மாமாவிடம் ஓடிச் சென்று கூறினான்.

 அவரும் அவசரமாக ஓடிவந்து கதவை தட்டி பார்த்தார்.. பிறகு இருவருமாக சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அருணாச்சலம் கைகளை விரித்தபடி குப்புற படுத்து இருந்தார், அவரை புரட்டிப்போட்டு பார்த்தபோது தான் தெரிந்தது அவர் உயிர் பிரிந்து விட்டது என்று.?

அப்பாவின் உயிரற்ற உடலை பார்த்தவுடன் ரகு கண்ணீர்விட்டு கதறி அழுதான்.

“அப்பா கடைசிவரை இந்த வீட்டிலேயேதான் இருப்பேன் என்று பிடிவாதம் பிடித்து அதை சாதித்து விட்டீர்களே” என்று கூறியபடியே கதறி அழுதான்.

சத்தம் கேட்டு ஓடி வந்த ராதாவும், மாமா இறந்துவிட்டதை அறிந்து அதிர்ச்சியில் நின்றாள் .

தன் விருப்பத்தையும் மீறி, பாரம்பரியமான இந்த பழங்காலத்து வீட்டினை விற்கச்சொல்லி மகனே கட்டாயப்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலாலும் , அதிகபட்ச ரத்த அழுத்தத்தின் காரணமாகவும் தூக்கத்திலேயே உயிர் இழந்தார் அருணாச்சலம்.

 ஆனால், தனது இறுதிக்காலம் வரை தன்னுடைய இந்த பழைய பரம்பரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற அவரது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார் அவர்.


-கோபாலன் நாகநாதன்,

சென்னை-33.