மணி வண்ணனும் பாரதியும் அன்று உற்சாகமாக இருந்தனர். இன்று அவர்களுடைய பேராசிரியர் நல்லசிவம் தனது மனைவி சிவகாமியுடனும் மற்றும் குடும்பத்தினருடன் அவர்கள் இல்லத்திற்கு பகல் உணவு அருந்த வருகிறார்கள். மணிவண்ணன்,நல்லசிவத்தின் மாணவர்கள் இன்னும் சிலரையும், குடும்பத்துடன் விருந்துக்கு அழைத்திருந்தான். எல்லோரும் நல்லசிவத்தின் வருகைக்காகக் காத்திருந்தனர்.
மணிவண்ணன் உடுப்பு மாற்றும் நேரம், பக்கத்தில் இருக்கும் தன் சிறுவயது நிழல் படத்தைப் பார்த்து ஒரு நிமிடம் ஒரு நினைவில் அமிழ்ந்து,' பாரதி! எனக்கு அந்த கருநீல பேண்ட்டையும் இள நீல நிறத்தில் கட்டம் போட்ட சட்டையையும் அயர்ன் பண்ணிக் கொடு' என்று கேட்டான். ' ஏன்? அது பள்ளி சீருடை போல் இருக்கும். இன்று ஏன் அதை உடுத்துகிறாய்' என்ற வினாவிற்கு, ஒரு புன்னகையுடன் கண் சிமிட்டி, 'சும்மாத்தான்! ஏதோ தோன்றுகிறது. பள்ளி சீருடையில் பேராசிரியரை சந்திப்பது, சிறப்பு தானே.நான் இன்னும் மாணவன்தான் என்று, நிறைவுடன் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது.
பேராசிரியர் தன் குடும்பத்துடன் வருகை,புரிய, விமரிசையான விருந்து பரிமாறப்பட்டது. எல்லோரும் தங்களது கல்லூரி வாழ்க்கை, படித்த பள்ளியின் ஆசிரியர் கள் இள வயது நினைவுகள், வீட்டின் நிகழ்வுகள்,குடும்பப் பின்னணிகள், பற்றி உரையாடியபடி இருந்தனர். மணிவண்ணன் தவிர ஏனையோர் அனைவரும் பெரிய பாரம்பரியம் மிக்க பள்ளிகளில் படித்தவர்கள்; பெருமையுடன் சொல்லிக் கொண்டு இருந்தனர். மணிவண்ணன் அமைதியுடன் இருந்ததைக் கவனித்த நல்ல சிவம்,'மணி! நீ எந்தப் பள்ளியில் படித்தாய்,' என்று கேட்டார்.' சார்! நான் படித்தது, மதுரைக்கு அருகே ,கருமாத்தூர் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் படித்தேன். என் பன்னிரெண்டு வருட பள்ளி படிப்பும் அங்கேயேதான். என் பள்ளி நாட்களில் எனது பள்ளி தலைமையாசிரியை, என்னை பல் வகையாலும் ஊக்குவித்த காரணத்தால்தான் நான் நன்கு படித்து இவ்வளவு தூரம் முன்னேற முடிந்தது. நான் கல்லூரியில் படிக்க முனைப்புடன் இருந்ததும் அவர்தான். எனக்கு மருத்துவம் படிக்க மிகவும் ஆவல். என்னால் நகரத்து பள்ளியில் படித்த மாணவர்களுடன் போட்டி போட்டு, தகுதித் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்க இயலவில்லை. மனம் துவண்டு போன என் மனதைக் தேற்றி, என்னை உயிரியல் இளங்கலை பயில ஆலோசனை அளித்ததும் ன் தலைமை ஆசிரியை தான்.' என்று நெகிழ்ச்சியுடன் கூறினான். 'மணி! உனக்கு தனம்மாள் என்ற பெயருடன் ஒரு கணித ஆசிரியயைத் தெரியுமா?' என்று வினவினார். ' சார்! இந்நேரம் வரை அவரைப் பற்றிதான் உங்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். நான் உடுத்த, தன் மகனுடைய உடுப்புகளை கொடுத்து உதவின பெருந்தகையாளர். உங்களுக்கு அவரை எப்படித் தெரியும்; என்று வினவ, " இரு சொல்கிறேன்' என்றவர், தன் மருமகளிடம், அவள் அம்மாவை காணொளி அழைப்பில் கூப்பிடச் சொன்னதும், தொலைபேசியில் ஒளிர்ந்த உருவத்தை பார்த்த மணிவண்ணனின் முகம், உவகையால் மலர்ந்தது. ' சார் இவர்தான் என் தனம்மாள் டீச்சர் , சார்' என்று உற்சாகத்தில் உரக்கக் கத்தி விட்டான்.' ஆம்! இவர் என் சம்பந்தி, தனம்மாள்; என் மருமகளின் தாயார்.' கடவுள் எப்படி நம்மை இணைத்து வைத்து மகிழ்கிறார்; பார்' என்று சொல்ல, தன் தாயாரைப் பற்றி மணிவண்ணன் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த நல்லசிவத்தின் மருமகள் வீணா அடைந்த ஆனந்தத்திற்கு ஒரு அளவே இல்லை.
தனம்மாள் ' என்ன மணி! இன்னுமா பள்ளி சீருடையில் இருக்க ஆசை? என்று வினவினார். ' ஆமாம்! டீச்சர்! இந்த சீருடையை நான் எப்படி மறக்க முடியும்? உங்கள் நினைப்பில் தான் இன்றைக்கு இதை உடுத்தினேன்.உங்கள் மகன் நலமா? அன்று அவனுடைய உடுப்புகளை கொடுத்து உதவினதை நான் என்றும் மறவேன்' என்று உணர்ச்சி பொங்க கூறினான், மணிவண்ணன்.
-சசிகலா விஸ்வநாதன்