tamilnadu epaper

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

 

       ஊர்ப் பெருமை என்பது சர்க்கரைக் கட்டி சாப்பிடுவது போன்றதுதான் எல்லோருக்கும். எனினும் சில ஊர்களின் பழமை வாய்ந்த இடங்கள் நம்மை மேலும் பெருமிதம் கொள்ளச் செய்து இனிய நினைவுகளைக் கல்வெட்டுக்களாகப் பதித்துவிடும்.

      எனது ஊரான புதுக்கோட்டை வரலாற்றுப் பெருமை மிக்கது. புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் மிகப்பழங்கால வரலாற்றுக்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. புதுக்கோட்டையை சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், ஹொய்சாளர்கள் , விஜயநகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள் ஆகியோர் ஆண்டு வந்துள்ளனர்.

எங்கெங்கும் புராதனச் சின்னங்களைச் சுமந்து தனது மூத்த வரலாற்றைப் பறை சாற்றுவதுடன் பெயருக்கேற்றபடி

புதுமைகளுக்கும் இடம் தந்து

துருவ முடிச்சுகளை அழகாக இணைத்துச் சுமக்கிறது எங்கள் ஊர்.

      அழகான சிவப்பு நிற அரண்மனைகள், அற்புதமான தொன்மைச் சான்றுகளை முன்னிறுத்தும் மியூசியம், குடவரைக் கோயில்களான ஸ்ரீதிருக்கோகர்னேஸ்வரர் கோயில், சித்தனவாசல் ,திருவேங்கைவாசல், கோட்டைக்குப் பெயர் பெற்ற திருமயம் , புகழ்பெற்ற நார்த்தாமலை (தஞ்சைப் பெரிய கோவிலுக்கு சிவப்பு கிரானைட் கற்கள் தந்த மலை), சிற்பக்கலை அற்புதங்களை உலகிற்கு எடுத்துக்காட்டும் ஆவுடையார்கோவில் (நரியைப் பரியாக்கிய கதை நடந்த இடம்), புகழ்பெற்ற மாமன்னர் கல்லூரி, அழகிய கடற்கரைக் கிராமங்கள் ,

மக்கள் பேதமின்றி ஒன்றுகூடிப் பெருமை சேர்க்கும் பல மத விழாக்கள் என்று புதுகையின் சிறப்பைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கலாம்.

      சேவை மனப்பான்மை, தைரியம், நேர்மை , அறிவுக்கூர்மை ஆகிய நற்குணங்களுக்கான இந்தியப் பிரஜையாகப் பார்க்கப்பட்ட டாக்டர்

முத்துலெட்சுமி ரெட்டி, வெள்ளி நாக்கு வேந்தர் தீரர் சத்தியமூர்த்தி, திரையுலகைக் கலக்கிய ஜாம்பாவான் பி.யு.சின்னப்பா, மென்காதல் சொன்ன ஜெமினி கணேசன் என்று அந்தக் காலத்தில் தொடங்கிய பிரபலங்களின் பட்டியல் இன்றுவரை முடிவிலியாக நீள்கிறது.

       நாடகப் பெருமை வளர்த்த சக்தி கான சபா முதல் கவியரசர் கண்ணதாசனை வெளிப்படுத்திய பதிப்பகம் வரை கலைத்தொண்டுக்குக் குறைவேயில்லை.

      அறிவொளி இயக்கம் என்ற முன்னுதாரண படிப்பறிவு இயக்கமும் தோன்றியது புதுகையில் தான். பல சிறந்த தேசியத் திட்டங்களுக்கு அஸ்திவாரமாகப் புதுகை அமைந்திருக்கிறது.

          புதுக்கோட்டையின் பழமைக்கும் தொல்லியல் சிறப்புக்கும் ஒரு சோற்றுப் பதமாக மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக சித்தன்னவாசலைக் கூறலாம்.

சுமார் 1200 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த அற்புறமான ஓவியங்களையும் சிற்பங்களையும் சுமந்து நிற்கும் இந்த ஊரானது, இயற்கை அழகிலும் அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடியது. ஒன்றரைக் கிலோமீட்டர் நீளமுள்ள தொடர்ச்சியான மலைப்பகுதியில் சமணர் படுக்கைகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் மற்றும் மலையடிவாரத்தில் முதுமக்கள் தாழி ஆகியன வியப்பூட்டுகின்றன. மலையழகும் கலையழகும் மனதைக் கட்டிப்போடுகின்றன.

       காலத்தால் கரைக்கப்பட்டது போகஎஞ்சியிருக்கும் மலை ஓவியங்களில் துறவிகள் மெளனப் புன்னகையோடு பார்வையாளர்களை வரவேற்கிறார்கள். அன்றுதான் மலர்ந்தது போல அழகிய வண்ணங்கள் காட்டிச் சிரிக்கின்றன பல நூற்றாண்டுகளைக் கடந்த தாமரை மலர்கள். தேவகன்னியர்கள் மாறா இளமையோடு இதயங்களை வெல்லும் சிற்றிதழ் சிரிப்பில் ஓவியங்களில் உறைந்துள்ளனர்.

பல்லுயிர் ஓம்பும் இயற்கை நியதியை ஒரே தடாக ஓவியத்தில் சித்திர மொழியில் பதிந்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். 

         நாமும் பல நூறு வருடங்கள் பின்னோக்கிப் பயணம் செய்யும் மாயாவித்தையை இந்த அமைதியான குளிர்ச்சி நிரம்பிய குகை பரிசளிக்கிறது. சமணத் துறவிகள் புதுக்கோட்டையைத் தேர்ந்தெடுத்து , சித்தன்னவாசல் ஓவியங்கள் என்ற வரலாற்றுப் புகழை அள்ளிக் கொடுத்ததில் வியப்பேதுமில்லை. ஏனெனில், புதுகை புதுகைதான்.

        குடுமியான்மலையில் மற்றோர் ஆச்சரியம் காத்துக்கிடக்கிறது. குடவரைக் கலையின் உச்சம் இது. குடுமியான்மலைநாதர் அழகாக வீற்றிருப்பதோடு, அழியாப் புகழ் பெற்ற இசைக்கல்வெட்டுகளை ஆசையாகப் பார்த்தபடியே அருளிச் செய்கிறார். இன்னும் புதுக்கோட்டை முழுவதும் கோயில்கள் ,கோட்டைகள் என கம்பீரம் காட்டுகின்றன.

          அம்மன் காசு என்ற தனித்துவமான நாணயம் எங்கள் சமஸ்தானத்திற்கென்று தனிப் பெருமை அளித்தது. 1948 வரை தனியரசாக இருந்த பெருமையுடையது புதுகை சமஸ்தானம்.

      அனைத்து தரப்பு மக்களும் சகோதரத்துவம் பேணி ஒன்றுகூடி மகிழும் ஊர் இது. வெள்ளந்தியான கிராம மக்கள், சுவையான உணவு வகைகள் , வெளிநாட்டுக்குச் சென்றாலும் ஊர் மணம் மாறாத குணம், ஜல்லிக்கட்டு வீரம், ஊர்ப்பற்று  என வெரைட்டியாகப் பெருமைகள் சுமந்து ஈர்க்கும் புதுகைக்கு வந்து பாருங்கள். மேற்சொன்னவை எல்லாம் உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை.

        பல தொண்டு நிறுவனங்களின் பிறப்பிடம் புதுக்கோட்டை.

நான் திருமணமாகி ஈரோட்டிலிருந்தாலும் புதுக்கோட்டையின் இனிய நினைவுகள் எழும்போதெல்லாம் அங்கு சென்று நண்பர்களுடன் சுற்றி மகிழ்கிறேன்.

 

முகவரி :

.................

கி.சரஸ்வதி,

94/A1,

பாப்பாயம்மாள் நகர்,

சாமுண்டி நகர் அருகில்,

திண்டல் போஸ்ட்,

ஈரோடு,

638012 .

 

Cell: 9750 61 1941