tamilnadu epaper

மறந்து போன பாத்திரங்களா அல்லது கண்டுகொள்ளப் படாமல் விட்ட பாத்திரங்களா?

மறந்து போன பாத்திரங்களா அல்லது கண்டுகொள்ளப் படாமல் விட்ட பாத்திரங்களா?


காவியங்கள் என்றால் நம் நினைவுக்கு வருவது இராமாயணமும் மகாபாரதமும். நாம் எல்லா கதையையும் உள்ளார்ந்து படித்தாலுமே கூட ஒரு சில கதாபாத்திரங்கள் நம் மனதில் கேள்விக்குறியாக தொக்கி நிற்கும் அதுபோல என்னை கவர்ந்த சில கதாபாத்திரங்கள் ராமாயணத்தில் உண்டு. அனுமன் அவரைப்பற்றி அனுமானிக்கவே முடியாது, அதேபோல் ராவணனை பொறுத்த வரைக்கும் அவன் எல்லாருக்கும் கெட்டவன், ஊர்மிளை இலக்குவனின் மனைவி அவளின் நிலை ரொம்பவே மோசம். இலக்குவனின் மனைவியாக அவர் இருந்த போதிலும் இலக்குவன் மட்டும் தான் நம் நினைவில் இருப்பார். அது போல வாலி. மறைந்திருந்து கொன்ற ராமன் மேல் வாலிக்கு கோபம். என்னதான் சமாதானம் செய்தாலும் நமக்கு வாலியை பார்க்க பாவமாக இருக்கும். 


நான் எனக்கு தெரிந்தவரை முதலில் ஊர்மிளை பற்றி சொல்ல விழை கிறேன்.


 ஊர்மிளா என்பவர் ஊர்மிளா தேவி என்று அழைக்கப்படுகிறாள் ராமாயணத்தில். இவர் உண்மையாகவே ராமாயணத்தில் மறைக்கப்பட்ட ஒரு கதாநாயகி அம்சம். ஜனகரின் சொந்த புத்திரியும் லட்சுமணனை மணந்தவளும் ஆவாள். ராமாயண கதையின் படி லட்சுமணனின் தாயார் சுமித்ரா தேவிக்கு ஸ்ரீ ராமபிரான் மேல் அளவு கடந்த பிரியம். கைகேயி இராமனை 14 வருடம் கானகத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறிய பொழுது இந்த சுமித்ரா தேவி தன்னுடைய மகன் லட்சுமணனை ராமனுக்கும், சீதைக்கும் காவல் இருக்கும்படி கூறியது எல்லோரும் அறிந்ததே. மேலும் ராமனுடன் கூடவே இருந்து அவருக்கு எல்லா பணிவிடைகளையும் எந்த குறையும் இன்றி செய்ய வேண்டும் என்று சுமித்ரா விரும்பினார். அதேசமயம் ராமனுக்கு செய்யும் கைங்கர்யங்களில் எந்த குறையும் ஏற்படக்கூடாது என்று சுமித்ரா விரும்பிய பொழுது அதை உள்ளார்ந்து புரிந்து கொண்ட உர்மிளா தன் மாமியாரின் கவலையை போக்க நினைத்தாள்.


 அரண்மனை முழுவதும் ராமனின் காடேயறும் துயரத்தில் இருக்க ஊர்மிளை மட்டும் தன்னை அலங்காரம் செய்து கொண்டு அரண்மனையை வலம் வந்த பொழுது லக்ஷ்மணன் ஊர்மிளையிடம் உனக்கு வருத்தம் இல்லையா? என்று கேட்டபோது ஊர்மிளை பட்டென்று தந்தையின் சொல்லை காப்பாற்றுவதற்காக ராமர் காடு செல்கிறார். இதில் எனக்கு என்ன வருத்தம் என்ற பொழுது லக்ஷ்மணன் அவளை வெறுக்க ஆரம்பிக்கிறான். ஊர்மிளை வேண்டுமென்றே இலக்குவனனுக்கு தன் மேல் வெறுப்பு வரவேண்டும் என்று செய்த இந்த தியாகம் ராமாயணத்தில் எடுபடாமல் போனது. இதைப்பற்றி யாருமே அவ்வளவு ஸ்லாகித்து எழுதவில்லை என்பதில் நிறைய பேருக்கு வருத்தம்.ஊர்மிளா தன் கணவனை 14 வருடம் பிரிந்த போது அந்த பிரிவை தனது மனதிலும் ஏற்படுத்திக் கொண்டாள்.  


 இதில் இன்னொரு ஆச்சரியம் ஆச்சரியம் என்னவென்றால் ராமாயண போரில் இந்திரஜித்தை கொல்ல வேண்டுமானால் 14 வருடங்கள் தூங்காமல் ஒருவர் கண் விழித்திருக்க வேண்டும் என்பது விதி. அப்படி கண் விழித்திருந்து இந்திரஜித்தை கொன்றது வேறு யாரும் அல்ல. இலக்குவணன் தான். அதில் ஒரு ஆச்சரியம், இந்த 14 வருடம் இலக்குவணன் எப்படி தூங்காமல் விழித்திருக்க முடிந்தது? அதற்குப் பின்னணியிலும் இந்த ஊர்மிளை இருக்கிறாள். 


 எப்படி எனில் காட்டில் ராமர் சீதைக்கு காவலாக லக்ஷ்மணன் தூங்காமல் குடிலுக்கு வெளியே காவல் காக்க க்கும்போது நித்ராதேவி அவனை உறங்க வைக்க முடியாமல் திணறுகிறார். அப்பொழுது இலக்குவணனிடம் நித்ராதேவி, நீ தூங்காமல் இருக்க முடியாது உன்னுடைய தூக்கத்தை வேறு யாரிடமாவது கொடுத்து விடுகிறேன் உன்னை விட்டு விலகுகிறேன் என்கிறார். அதற்கு லட்சுமணன் நித்ரா தேவியிடம் நீ என் மனைவி ஊர்மிளையிடம் சென்று தூக்கத்தை எடுத்துக் கொள்ளும்படி கூறு அவளும் ஒப்புக்கொள்வாள் என்றதும் ஊர்மிளா அந்த தூக்கத்தையும் வாங்கிக்கொண்டு 14 வருடங்களும் தூங்கியே பெரும்பகுதியை கழித்தாள் என்று எழுதப்பட்டிருக்கிறது.


 இப்போது புரிந்து இருக்கும் எதனால் இந்திரஜித்தை கொல்ல முடிந்தது என்று. எங்கிருந்து எங்கு முடிச்சு அவிழ்கிறது பாருங்கள். 


 இதுபோல சில தியாகங்கள் யாருக்கும் தெரியாமலே போய்விடுகிறது. அதனால் தான் என்னவோ எனக்கு இந்த ஊர்மிளையின் பாத்திரம் மேல் எனக்கு ரொம்பவும் ஒரு ஈடுபாடு உண்டு.


அடுத்து அனுமன் பற்றி நாளை பார்க்கலாம்.


-ஜெயந்தி சுந்தரம்