கண்ணம்மா.... ப்ளீஸ் புரிஞ்சுக்கம்மா! ஒரு பெரிய கம்பெனியில்... பொறுப்பான மார்க்கெட்டிங் மேனேஜர் உத்தியோகம் பார்க்கிறவன் நான்!.. தினமும் நிறைய கஸ்டமர்களைச் சந்திச்சுப் பேச வேண்டி இருக்கு.... அப்படியிருக்கும்" />
"கண்ணம்மா.... ப்ளீஸ் புரிஞ்சுக்கம்மா! ஒரு பெரிய கம்பெனியில்... பொறுப்பான மார்க்கெட்டிங் மேனேஜர் உத்தியோகம் பார்க்கிறவன் நான்!.. தினமும் நிறைய கஸ்டமர்களைச் சந்திச்சுப் பேச வேண்டி இருக்கு.... அப்படியிருக்கும் போது... நான் ரவுடியாட்டம் பெரிய மீசை வெச்சுகிட்டா நல்லாவா இருக்கும்?... என்னைப் பார்த்தால் கஸ்டமர்ஸுக்கு மரியாதை வராது... பயம்தான் வரும்!.. உத்தியோகத்துக்கு தகுந்த மாதிரி தோற்றம் வேணாமா?... இப்படி "நறுக்"குன்னு சின்னதா மீசை வச்சுக்கணும்... இல்லாட்டி சுத்தமா வழிச்சுட்டு மீசையே இல்லாம இருக்கணும்... அதுதான் நம்ம இமேஜை உயர்த்திக் காட்டும்"
கல்யாணமான நாளிலிருந்து மனைவியின் பெரிய மீசை ஆசையை உத்தியோக காரணம் காட்டி தவிர்த்து வந்த பாலுவுக்கு எதிரே அமர்ந்திருந்த மனிதர் சொன்னதை கேட்டதும்
சிரிப்புத்தான் வந்தது.
"செக்யூரிட்டி வேலைக்கு உன்னோட உடல்வாகும்... பேச்சும்... சரியாத்தான் இருக்கு... ஆனா மீசைதான் கொஞ்சம் சின்னதா இருக்கு!... நீ என்ன பண்றே?... நல்ல பெருசா பார்த்தாலே பயம் கொடுக்கிற மாதிரி மீசையை வளர்த்துட்டு... அடுத்த வாரத்தில் வந்து வேலையில சேர்ந்திடு".
தான் மேனேஜராக உத்தியோகம் பார்த்த கம்பெனி திடீரென்று நஷ்டத்தில் மூழ்கிப் போய் யாருக்கும் எந்தவித நஷ்ட ஈடும் கிடைக்காது போக, பல வேலைகளுக்கு முயற்சி செய்து தோற்று, இறுதியில் செக்யூரிட்டி வேலைக்கு மனதை தயார்ப் படுத்திக் கொண்டான் பாலு.
உத்தியோகமும் கிடைத்து விட்டது மீசை வளர்ந்தால் போதும் சேர்ந்து விடலாம்.
வீட்டிற்குத் திரும்பி வந்தவுடன் நேரடியாக "ஏதாச்சும் வேலை கிடைத்ததா?" என்று கேட்காமல் நாசூக்காக, "ஏங்க... ஏதாச்சும் நல்ல செய்தி உண்டா?" கேட்டாள் கண்ணம்மா.
"உண்டு கண்ணம்மா... உன்னோட நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றப் போறேன்... ஆமாம்... பெருசா கிடா மீசை வைக்கப் போறேன்!... சந்தோஷமா?' கேட்டவாறே உள் அறையை நோக்கி நடந்தவனை புரியாமல் பார்த்தாள் கண்ணம்மா.
(முற்றும்)
-முகில் தினகரன்
கோயமுத்தூர்.