வாரந்தோறும் திங்கள்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் தமிழ் வேந்தன் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
மக்கள் தங்களதுக் கோரிக்கைகளை மனுக்களாக எழுதிவைத்துக்கொண்டு வரிசையில் நின்றுக் கொண்டிருந்தனர்.
மாவட்ட ஆட்சியர் தமிழ் வேந்தன் தன்னிடம் மனு கொடுக்கவருபவர் எவராக இருந்தாலும் அவர்களை தனக்கு எதிரிலுள்ள நாற்காலியில் அமர வைத்து, அவர்களின் கோரிக்கைகளை நேரிலேயே கேட்டறிந்து உடனுக்குடன் அதற்கான தீர்வை முடித்து வைப்பது வழக்கமாகி இருந்தது.
இதனால் மக்கள் மத்தியில், தமிழ்வேந்தனுக்கு நற்பெயர் ஏற்பட்டிருந்தது.
மக்கள் செல்வாக்கு மிக்க ஆட்சியர் என்ற முறையிலும், சிறப்பாக செயல்படுகிறார் என்ற செயல்பாட்டிலும் தமிழக அரசின் விருதினையும் பெற்றிருந்தார்.
அன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டனர்.
மதியம் மூன்று மணிக்கு மேலாகி விட்டது என்றாலும் மனு கொடுக்க வந்தவர்களின் கூட்டம் குறைந்த பாடில்லை.
மாவட்ட ஆட்சியர் மதிய உணவுக்குக்கூட போகாமல் பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார்.
குளக்குடி கிராமத்திலிருந்து வந்திருந்த கோபால், தனது முறை வந்த போது, தான் எழுதி தயாராக வைத்திருந்த மனுவை ஆட்சியர் அவர்களிடம் கொடுத்தார்.மனுவைப்பெற்றுக் கொண்ட ஆட்சியர், கோபாலை தனக்கு எதிரே உள்ள நாற்காலியைச் சுட்டிக் காட்டி அதில் உட்காரச் சொன்னார்.
கோபால் உட்காராமல் நின்று கொண்டிருந்தார்.ஆட்சியர் மீண்டும் அவரை உட்காரச் சொல்லிக் கட்டாயப்படுத்தினார்.
அய்யா! உங்களுக்கு நேரா என்னால உட்கார முடியாது.எனக்கு அதற்கான தகுதி இல்லீங்க அய்யா...நீங்க எவ்வளவு படிச்சிருக்கீங்க... அதுவும் எங்களுக்கு கலெக்டரா இருக்கீங்க... உங்களோட படிப்புக்கு நான் மரியாதை கொடுத்தாகனும்ல... அதனால உங்களுக்கு நேரா என்னால உட்கார முடியாதுங்க அய்யா...என்னை மன்னிச்சிடுங்க... அய்யா..என்று சொல்லியபடியே கைகளைக் கட்டிக் கொண்டு நின்றார்.
கோபால் சொன்னதைக் கேட்ட ஆட்சியர் தமிழ் வேந்தன் திடீரென தன் இருக் கையிலிருந்து எழுந்து நின்று, நீங்க படிப்புக்கு மரியாதை கொடுக்கனும்னு நினைக்கிறீங்க... நான் மனுசனுக்கு மரியாதை கொடுக்கனும்னு நினைக்கிறேன்...
மனுசனுக்கு தான் முதல்ல மரியாதை... படிப்புக்கும் அந்தஸ்துக்கும் அப்புறம்தான் மரியாதை ..அதனால முதல்ல நாற்காலியில உட்காருங்க..என்று கோபாலை பார்த்து சொன்னதும், ஒருவித தயக்கத்துடன் கோபால், ஆட்சியரின் எதிரேயுள்ள நாற்காலியில் கூச்சத்துடன் நெளிந்தபடியே உட்கார்ந்தார்..
வரிசையில் நின்றிருந்த மக்கள் அனைவரும் கலெக்டர் தமிழ்வேந்தனின் இந்த மனிதாபிமான செயலைக் கண்டு மனதார பாராட்டினர்.
-தமிழ்ச்செம்மல் நன்னிலம் இளங்கோவன்,