tamilnadu epaper

ரமலான் பெருவிழா

ரமலான் பெருவிழா

ஹமிதாவுக்கு துக்கம் பொங்கி வந்தது.போன வருடம் வாப்பாவின் விரல் பிடித்து கடைத்தெருவில் அலைந்து திரிந்ததும், உம்மா செய்த மட்டன் பிரியாணியும் நினைவில் வந்து போயிற்று. இப்போது அவர்கள் சவுதி அரேபியாவில் வேலைக்கு சென்றுள்ளனர். அவள் அண்ணன் அகமதுவுக்கு மருத்துவ கல்லூரியின் கட்டணத்துக்காகவும் வீட்டின் மேலுள்ள கடன் தொகைக்காகவும் அவர்கள் வெளிநாடு சென்றுள்ளனர். அவர்கள் ஏழ்மையில் வாடவில்லை; எனினும் பணத்தின் தேவையால், அவர்கள் குடும்பம் நெல்லிக்காய் மூட்டையென சிதறி ,ஆளுக்கு ஒரு பக்கம் வாழும்படி ஆயிற்று. ஹமிதா பன்னாட்டுப் பள்ளியின் விடுதியில்; உயர் தர படிப்பு; நல்ல உணவு; நிறைய தோழிகள்; எல்லாம் இருந்தும்,உயிராய் இருக்கும் உறவுக்கு, ஏங்கியது; ஹமிதாவின் மனம். எல்லாருக்கும் எல்லாம் தரும் அல்லாஹ்வுக்கு தெரியாதா, ஹமிதாவின் தேவை, என்னவென்று?

                 ' ஹமிதா! உன்னைப் பார்க்க அருப்புக்கோட்டையிலிருந்து உன் அத்தை சுந்தரியும், மாமா கார்த்திகேயனும் வந்திருக்கிறார்கள்.' ஒலிபெருக்கியின் குரல் அவளுக்கு அமுதென தோன்றியது. வேகமாக படியிறங்கி வந்தவளை, அன்புடன் அணைத்தாள்; அவர்களது அருப்புக்கோட்டை வீட்டில் குடியிருக்கும் வாப்பாவின் உடன்பிறவா தங்கை; சுந்தரி அத்தை.' ஹமிதா! பெருநாளுக்கு உன்னை வீட்டிற்கு கூட்டிப் போகத்தான் வந்திருக்கிறோம். உன் அண்ணன் அகமது,நாளை காலை ரயிலுக்கு வீட்டுக்கு வந்து விடுவான். என் அண்ணன்;அதான் உன் வாப்பா உன் பள்ளி தாளாளரிடமும், தலைமை ஆசிரியரிடமும் பேசி , உன்னை வீட்டிற்கு அழைத்துப் போக அனுமதி வாங்கி விட்டார். நீ ரம்ஜான் பெருநாளை எங்களுடன் கொண்டாடலாம். ஒரு நாள் லீவும் கொடுத்து உள்ளார்கள். உங்களுக்கான புது உடுப்புகள் வீட்டில் தயாராக உள்ளன. பள்ளிவாசல் தெருவில் இருக்கும் என் தோழி ஷஹிராபானுவும், காஜா முகைதீனும் இன்று இஃப்தார் விருந்துக்கும், நாளை ரமலான் விருந்துக்கும் நம்மை அழைத்துள்ளார்கள். அவர்களுடன் அகமது நாளை ஜமாஅத் தொழுகைக்கும் போவான். நீ ஷஹிராபானுவுடன் வீட்டில் நீ தராவீஹ் செய்யலாம். நான் வீட்டில் வேண்டிய இனிப்புகள் செய்கிறேன். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து ரமலான் விருந்து உண்ணலாம். இனிதே ரமலான் கொண்டாடியபின் மாமா உன்னை இங்கு பள்ளியின் விடுதியில் கொண்டு விடுவார்கள்.

ஹமிதாவின் மனத்தில் ஆனந்தம் பொங்க, கண்ணில் நீர் தளும்பியது; நெஞ்சம் நிறைந்த நன்றியால்.



-சசிகலா விஸ்வநாதன்.