இன்று ரமலானின் கடைசி இரவு.. இப்தார் விருந்து தடபுடலாக ஏற்பாடு ஆகியிருந்தது.
பளாளிவாசல் எதிரே இருக்கும் மைதானத்தில் மேடை. அதன் பின்புறம் விருந்துக்கான அடுப்புகள் எரிந்து கொண்டிருககின்றது
இரண்டாயிரம் பேர் திரல்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. சர்வ மத குருமார்களும் சில முக்கிய கட்சித் தலைவர்களும் வருகை புரிவதாகத் தெரிகிறது.
நோம்பு திறக்கும் வைபவத்தைக்காண தொலைக்காட்சி நிருபர்கள்.. காவல் துறையினர்.. பொதுமக்கள் என பலரும் முன்பே வந்து விட்டனர்.
மைதானத்தை ஒட்டிய அந்த தெருவில் தான் சுலைமான் அத்தா கறிக்கடை வைத்திருந்தார். காலை தொடங்கி கூட்டம் அலை மோதியது. இன்று நல்ல வியாபாரம்.
பணமிருப்போர் கிலோ கணக்கிலும்.. பணமற்றோர் கிராம் அளவிலும் கறி வாங்க நின்றிருந்தனர்.
நூரு கிழவி அவர்களில் ஒருவள். அவளுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் இருந்தனர். வேறு வேறு ஊர்களில் அவர்கள் இருந்தாலும் மகள் வயிற்று பேரன் கனி அவளுடன் இருந்தான்.
ஏழ்மையிலும் இறை பக்தி. இரமலானில் தூய நேசம்.. கூடியிருந்த குடும்பம் அது.
நூரு கிழவிக்கு எல்லோருக்கும் இரமலான் விருந்து சமைக்க ஆசைதான். ஆனில்.. ஏழை அவள் என்ன செய்வாள? பேரன் சைக்கில் ஸ்டான்டில் வேலை செய்து தரும் ஊதியம் போதவில்லை.
ஆயினும் அல்லா அருளினால்.. நாளை இது நடக்கும். தெருவே இரமலான் விருந்து நடக்கயிலே.. அவளும் ஏதோ தன் சக்திக்குத் தக்கப்படி பிரியாணி செய்ய கறி எடுக்க செல்கிறாள் நூரு கிழவி.
பசியின் அருமை தெரியவும்.. பசி போக்கும் இறைவனை அறியவும்.. தானம் தருமம் உலகில் நிலை பெறவும் இரமலான் மாதம் பண்டிகை வருகிறது.
ஒருபுறம் இப்தார் விருந்து தொடங்கப் போகிறது. மறுபுறம் நுரு கிழவி கறிக்கடை வாசலில் வாிசைலில் நிற்கிறாள்.
நீண்ட வரிசை.. அவளுக்குப் பின்னே முத்துப் பாண்டி கறிஎடுக்க நிற்கிறான்.
நாளை பண்டிகை முசல்மான்களுக்கு மட்டுமல்ல.. இந்த முத்துப் பாண்டி வீட்டில்கூட பிரியாணிதான். நூரு கிழவி வசிக்கும் அதே தெருவில்தான் முத்துப் பாண்டிக் குடும்பமும் வசிக்கின்றது.
நூருவின் பேரன் கனியை நன்கு அறிவான் அவன். இறைபக்திஅதிகம். ஐவேலை தொழுவான். அவனது தோழன் கனி.
ஏழ்மையிலும் பொறுமை. உளைப்பதிலே ஆர்வம். அதனால் அவனை பிடிக்கும் முத்துப் பாண்டிக்கு.
நூரு கிழவியைப் பார்த்து சினேகமாக புன்னகைத்தான்.
அவள் முறை வந்தபோது இருப்புக்குத் தக்கப்படி கால்கிலோ கறி எடுத்தாள். பின்னால் நின்ற முத்துப்பாண்டி ஒவ்வொரு கிலோவாக இரண்டு தனித்தனி பார்சலில் கறி வாங்கினான்..
இருவரும் கடையை விட்டு வெளியே வந்தனர். முன்னால் நூரு கிழவி செல்லும் போது அம்மா என்று அழைத்தான் முத்துப் பாண்டி.
நூரு கிழவி திரும்பிப் பார்த்தாள். மகன் ஞாபகம் வந்தது. என்ன தம்பி என்றாள்
பாண்டி தன் கையில் இருந்த ஒரு பார்சலை அவள் முன் நீட்டினான். கிழவி பதைப்புடன் தவித்தாள். என்னப்பா.. வேண்டாம்.. வேண்டாம் என்கிறாள் ..
அம்மா தப்பாக நினைக்காமல் இதை வாங்கிக் கொள்ளுங்கள். நாளை இரமலான் விருந்துக்காக உங்கள் மகன் தருவதாக நினைத்து வாங்கிக் கொள்ளுங்கள் அம்மா.
எல்லோரும்கொண்டாடுவோம்.. எல்லோரும் கொண்டாடுவோம்.. அல்லாவின் பெயரைச்சொல்லி.. நல்லோர்கள் வாழ்வை எண்ணி.. எல்லோரும் கொண்டாடுவோம்!
என்ற பழைய பாடல் ஒலிபெருக்கியில் ஒலித்துக் கொண்டிருந்தது அங்கே.
அதே சமயம் ஒருப்பக்கத்திலே இப்தார் விருந்து தொடங்கிவைத்து கட்சித் தலைவர்கள் அரசியல் பேசிக் கொண்டிருந்தனர்.
மறுப்பக்கம் .. முத்துப் பாண்டி நூரூ கிழவி வசிக்கும் தெருவில் அந்த ஏழைக்கிழவியின் வீட்டில் இரமலான் விருந்துக்காக அடுப்பில் கறி வெந்து கொண்டிருந்தது.
இனம் சாதி சமயம் கடந்து.. அன்பு இரக்கம் சகோதரத்துவம் ஓங்கிட
அந்த ஏழைகள் வசிக்கும் ஒட்டுக் குடிசைகளில் இரமலான் விருந்து தயாராகிக் கொண்டிருக்கின்றது.
-வே.கல்யாண்குமார்