tamilnadu epaper

ரிட்டையர்மென்ட்

ரிட்டையர்மென்ட்


கடந்த முப்பது நாட்களிலேயே அந்த மாற்றத்தை தெளிவாய் உணரலானார் சதாசிவம்.


 காலை வாக்கிங் போகும் போது வலிய வந்து பேசும் மூத்த நண்பர்கள் அனைவரும் இந்த ஒரு மாதத்தில் அவருடன் பேசுவதை வெகுவாகக் குறைத்துக் கொண்டதும்,


 ரேஸ்கோர்ஸ் டீக்கடைகாரன் அவரிடம், "இனி கடன் வேண்டாம் சார்... ரெடி கேஷ் மட்டுமே!" என்று சொன்னதும் சதாசிவத்தின் மனதைப் பெரிதாய்ப் பாதித்து விட, அந்தச் சோகத்தை மாற்றும் விதமாய் ஆட்டோ பிடித்து தன் மகள் வீட்டிற்கு சென்றார்.


 அங்கே பேத்தியுடன் விளையாடிக் கொண்டிருந்த போது மகள் சுதா கேட்டாள்.


  "டாடி... நீங்க ரிட்டயர் ஆகி வீட்டில் சும்மாத்தானே இருக்கீங்க?"


 " ஆமாம்!"


 " இல்லை... உங்கள் மாப்பிள்ளையோட டிராவல்ட் ஆபீஸ்ல வேலை பார்த்துட்டிருந்த குமார் வேலையை விட்டு நின்னுட்டானாம்!... அதான் உங்களால அவரோட ஆபீசுக்குப் போய் உதவ முடியுமா?"ன்னு கேட்டார்.


ஆடிப் போனார் சதாசிவம். அந்தக் குமார் தன் மாப்பிள்ளையின் டிராவல்ஸ் ஆபீசில் ஒரு எடுபிடி ஆள்.


  "ஸாரிம்மா.. நான் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் ஜென்ரல் மேனேஜரா வேலை பார்த்துட்டு ரிட்டையர்ட் ஆனவன்!... என்னால் ஆபீஸ் பாய் வேலையெல்லாம் பார்க்க முடியாதும்மா" உடனே வெளியேறி காத்திருந்த ஆட்டோவில் ஏறிப் பறந்தார் சதாசிவம்.


வீடு திரும்பிய சதாசிவத்தை எதிர்கொண்டு வரவேற்றாள் அவர் மனைவி கோமதி. "ஏங்க இவ்வளவு நேரம்?.. நான் தவிச்சுப் போயிட்டேன் தெரியுமா?" உண்மையான அக்கறையை அந்த வார்த்தைகளில் பார்த்தார் சதாசிவம்.


 "பச்சைத் தண்ணியில குளிக்காதீங்க... வெந்நீர் எடுத்து வச்சிருக்கேன் அதுல குளிங்க" என்றாள் கோமதி.


  "இந்தாங்க துண்டு... குளிச்சிட்டு சீக்கிரம் வாங்க!... உங்களுக்குப் பிடிச்ச பொங்கல் உளுந்து வடை செஞ்சு வெச்சிருக்கேன்"


சாப்பிடும் போது 'இன்னும் கொஞ்சம் வச்சுக்கோங்க"... "இன்னும் கொஞ்சம் வச்சுக்கோங்க!" என்று கோமதி பரிமாறிய போது சதாசிவம் தன் நண்பர்கள் தான் ரிட்டையர்ட் ஆன பிறகு தன்னை உதாசீனப்படுத்துவதையும், டீக்கடைக்காரன் கடன் தர யோசிப்பதையும், மகள் தன் புருஷன் டிராவல்ஸிற்கு எடுபிடியாய் வர முடியுமா?ன்னு கேட்டதையும் சொல்லி விட்டு,


 "அவர்களெல்லாம் மாறிட்டாங்க!.. ஆனா நீ மட்டும் எப்படி கோமதி மாறாமல் அதே மாதிரி என்கிட்ட இருக்கே?"..


 மெலிதாய் சிரித்த கோமதி, "அவங்கெல்லாம் ஆரம்பத்திலிருந்தே உங்களை ஒரு பெரிய கம்பெனியோட ஜி.எம்.மா மட்டும்தான் பார்த்திருக்காங்க!... நான் உங்களை என் கணவரா மட்டும்தான்... என் மேல் பிரியமும் அன்பும் பாசமும் கொட்டும் ஒரு மனுசரா மட்டும்தான் பார்க்கிறேன்!. ஒரு ஜி.எம். என்பதால் உங்ககிட்ட அவங்கெல்லாம் ஏதோவொரு எதிர்பார்ப்போட பழகி இருக்காங்க!... ஆனா நான் உங்ககிட்ட உங்க அன்பை மட்டும் தான் எதிர்பார்க்கிறேன்... அது ரிட்டையர்மென்ட் ஆனதனால குறைந்து போகாது! அதனாலதான் என்கிட்ட எந்த மாற்றமும் இல்லை!" என்று கோமதி சொல்ல,


நெகிழ்ந்து போனார் சதாசிவம்.



-முகில் தினகரன்,

கோவை.