tamilnadu epaper

வயது என்பது வெறும் நெம்பர்தான்

வயது என்பது வெறும் நெம்பர்தான்


தோழிகளின் சிரிப்பொலியோடு முதலிரவு அறைக்குள் தள்ளப்பட்ட கல்பனா, வந்த வேகத்தில் கதவைச் சாத்தி தாழிட்டி விட்டு, கட்டிலில் அமர்ந்திருந்த குமாரை எரிப்பது போல் பார்த்தாள்.


குமார் கட்டிலை விட்டுக் கீழிறங்கி நிற்க, வேகமாக அவனை நெருங்கிய கல்பனா, தன் கையில் இருந்த பால் சொம்பை அங்கிருந்த டீப்பாயின் மீது "ணங்"கென்ற ஒலியுடன் வைத்தாள்.


   " யோவ.... நீயெல்லாம் ஒரு மனுசனாய்யா?... எங்க அக்கா சுமதியைப் பெண் பார்க்க வந்திட்டு... வந்த இடத்துல என்னைப் பார்த்து ஜொள்ளு விட்டுட்டு "அக்கா வேண்டாம்... தங்கச்சியை வேணா கட்டிக்கிறேன்!"னு சொல்லி, ரெண்டு வீட்டுப் பெரியவங்க கிட்டேயும் சாமர்த்தியமாப் பேசி காரியத்தைச் சாதிச்சிட்டியே... உனக்கு கொஞ்சங் கூட உறுத்தலாவே இல்லையா?..." கத்தினாள் கல்பனா.


மெலிதாய் சிரித்தான் குமார்.


 "சிரிக்காதய்யா... உன்னைப் பார்த்தாலே பத்திக்கிட்டு வருது!.. ஹும்.. வாழ்க்கை பூராவும் உன் கூட எப்படிக் காலம் தள்ளப் போறேன்னு தெரியல!" முன் நெற்றியில் அடித்துக் கொண்டாள் கல்பனா.


  "முடிச்சிட்டியா?... பேச வேண்டியதையெல்லாம் பேசி முடிச்சிட்டியா? இனி நான் பேசலாமா?"


  கண்களைச் சுருக்கிக் கொண்டு குமாரைப் பார்த்தாள் கல்பனா.


  "நான் உங்க வீட்டுக்குப் பெண் பார்க்க வருவதற்கு முந்தின நாள் உன் அக்கா சுமதி என்னை என் ஆபீசில் வந்து பார்த்தாள்"

                                *****

  "மிஸ்டர் குமார்.... எனக்கு நீங்க ஒரு உதவி செய்வீங்களா?"


  "சொல்லுங்க சுமதி"


    "எனக்கு இப்ப வயசு 33 ....உங்களுக்கு 30!... ஆனாலும் நீங்க பெருந்தன்மையா என்னை ஏத்துக்கச் சம்மதம் தெரிவிச்சிருக்கீங்க!..."


  "வயசு என்பது வெறும் நெம்பர்தான்" என்றான் குமார்.


   "என் தங்கை கல்பனாவுக்கு 27 அவள் இவ்வளவு வயசு வரைக்கும் கல்யாணம் ஆகாம இருக்கக் காரணம் நான்தான்!... என்னாலதான் அவளும் தன்னுடைய இளமையை இழக்க ஆரம்பிச்சிருக்கா!... அதனால!" சுமதி இழுக்க.

 

  "அதனால?"


  "நீங்க உங்களை விட மூன்று வயசு பெரியவளான என்னைக் கட்டிக்கிறதை விட.. உங்களை விட மூணு வயசு சின்னவளான என் தங்கையைக் கட்டிக்கணும்!"


  "அது எப்படி?"


  "ஒண்ணும் பிரச்சனை இல்லை சார்!.... நாளைக்கு நீங்க பெண் பார்க்க வாங்க!.. வந்து அங்க என் தங்கையைப் பார்த்துட்டு அவளைத்தான் கட்டிக்குவேன்னு பிடிவாதமா நில்லுங்க!... ப்ளீஸ்.... எனக்காக இந்த உதவியை மட்டும் செய்யுங்கள்!"


தன்னால் தாமதமான தன் தங்கையின் திருமணத்திற்காக, தனக்குக் கிடைத்த வாழ்க்கையை விட்டுத் தரத் துடிக்கும் சுமதியை நெகிழ்ச்சியோடு பார்த்த குமார். "உங்க தங்கை இதுக்குச் சம்மதிப்பாங்களா?" கேட்டான்.


  "அவளைச் சம்மதிக்க வைப்பது என்னோட வேலை!"

                       *****

குமார் சொன்னதை கேட்டுக் கல்பனா குலுங்கி குலுங்கி அழுதாள் தன் அக்காவை எண்ணி.


அவளை மார்போடணைத்து ஆறுதல் கூறினான் குமார்.



-முகில் தினகரன்,

கோயமுத்தூர்.