அந்தக் கிழவிக்கு அப்படியொரு பசி. நடந்து வந்த களைப்பு நீங்க ஒருவாய் உணவு கிடைக்குமா எனப் பார்த்தார். எதிரில் வந்த புல்வேளூர் பூதன் என்னும் விவசாயி தன் இல்லத்திற்கு வந்து உணவருந்துமாறு அழைத்தார். இருவரும் ஊரின் புறத்தே இருந்த வீட்டை நெருங்கியபோது கத்தரிக்காய் வதக்கலின் வாசம் மூக்கைத் துளைத்தது. பூதனின் மனைவி கிழவியை அன்புடன் “அம்மா வாங்க” என அழைத்து அகமும் முகமும் மலர வரவேற்றாள். பூதன் ஓடிச்சென்று பெரிய தேக்கு இலை ஒன்றை அறுத்துவந்து கொடுத்தான். அவன் மனைவி கிழவிக்கு அமுது படைத்தாள்.
ஏழை வீட்டில் என்ன இருக்கும்? வரகரிசிச் சோறுதான் அவர்தம் உணவு. கால் காணி வானம் பார்த்த பூமியில் விளையும் காயும் கீரையும் இருக்கும்.
சுடச்சுட வரகரிசிச் சோற்றை இலையில் இட்டுப் புளித்த மோரை ஊற்றித் தொடுகறியாக வதக்கிய வழுதுணங்காயை வைத்தாள் பூதனின் மனைவி.
வயிறார சுவைத்து உண்டு மகிழ்ந்த கிழவி, உண்ட களைப்பில் திண்ணையில் படுத்துச் சற்றே உறங்கினார். எழுந்து அதியனைக் காணும் ஆர்வத்தில் புறப்பட்டார். புறப்படுமுன் ஒரு பனை ஓலையில் நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு வெண்பாவை எழுதி பூதனிடம் தந்தார். அவன் விழிப்பதைக் கண்ட கிழவி ஓலையை வாங்கி உரக்கப் படித்துக் காட்டி விளக்கமும் கூற பூதனும் அவன் மனைவியும் மிகவும் மகிழ்ந்து கைகூப்பி வணங்கி வழியனுப்பி வைத்தனர்.
ஔவையார் அவர்களுக்காக எழுதிய அந்த வெண்பா இதோ உங்களுக்காக:
வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமு ரெனவே புளித்த மோரும்- தரமுடனே
பல்வேளூர்ப் பூதன் புகழ்ந்துபரிந் திட்டசோ(று)
எல்லா உலகும் பெறும்.
-முனைவர் அ.கோவிந்தராஜூ.