தமிழ்நாடு இ.பேப்பரில் நலம் தரும் மருத்துவம் பகுதியில் 'ஆரஞ்சு பழத்தில் உள்ள சத்துக்களும் பயன்களும்!' என்று மிக விரிவாக ஆரஞ்சுப் பழத்தின் சிறப்பை சொல்லியிருந்தீர்கள். ,இதைப் படித்தபிறகுதான் ஆரஞ்சு பழத்தின் பெருமையை முழுமையாக நான் உணர்ந்தேன்.
இனம், சாதி, சமயம் கடந்து... அன்பு, இரக்கம், சகோதரத்துவம் நிலவ வேண்டும் என்ற கருத்துடன் எழுதப்பட்ட 'ரமலான் விருந்து!' என்ற வே.கல்யாண்குமாரின் சிறுகதை மிகச் சிறப்பு.
பிரபாகர்சுப்பையாவின் 'அடைக்கலம்' என்ற சிறுகதையில் அந்த மணி என்ற நாயால்தான் முத்துவேலின் கடைவியாபாரம் குறைந்துப்போனது. மறுபடியும் அந்த நாய் வந்துவிட்டதே, முத்துவேலின் கடை வியாபாரம் இன்னும் குறைந்துப் போகாதா? இந்த இடத்தில்தான் இந்த கதை எனக்கு கொஞ்சம் புரியவில்லை!
'திரு.வி.க.' என்ற பிரபலமான மனிதரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். தினம் ஒரு தலைவர்கள் பகுதி மூலம் அவரைப்பற்றி நான் தெளிவாக அறிந்துக்கொண்டேன். வாழ்க்கை வரலாறு நூல்கள், அரசியல் நூல்கள், சமய நூல்கள், பாடல் நூல்கள், பயண இலக்கிய நூல்கள், பொதுவுடமை தொடர்பான நூல்கள் என்று ஏகப்பட்ட நூல்களை அவர் எழுதியிருப்பதை அறிந்து வியந்துப் போனேன்.
சமையல் அறை ஸ்பெஷலில் பாகற்காய், தக்காளி, பீர்க்கங்காய் என்று மூன்று காய்கறிகளின் மருத்துவப் பயன்களையும் தெளிவாக அறிந்துக்கொண்டேன். எப்போதுமே இந்த பகுதி பயன் நிறைந்த பகுதிதான்.
'ஸ்ரீ கிருஷ்ணனிடம் எப்போதும் ஐந்து பொருள்கள் இருக்கும்...' என்ற எம்.ராதாகிருஷ்ணனின் கட்டுரையை படித்து, ஸ்ரீ கிருஷ்ணனின் கையில் இருக்கும் சங்கு எப்படி ஆயுதமாயிற்று என்பதை புரிந்துக்கொண்டேன். இதிகாச புராண தகவல்களில் இருக்கும் சுவையான விஷயங்களை மிக அழகாக தருவதில் தமிழ்நாடு இ.பேப்பர் சிறந்து விளங்குகிறது!
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.